உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்
அரசகுமாரி சிங்கத்துடன் புணர்ந்து ஒரு
ஆண் ஒரு பெண் என இரு மானிட பிள்ளைகளை பெற்று, பின் அந்த ஆண், தன் தந்தை சிங்கத்தை கொன்று, அதன் பின் தன் சகோதரி சிம்மசீவலியை மணந்து, அவர்களுக்கு பதினாறு முறை இரட்டைக் குழந்தைகளாக, அதுவும் எல்லாம் ஆண்பிள்ளைகளாக பிறந்தது என்பது கற்பனை கூட
செய்யமுடியாத ஒரு நிகழ்வு ஆகும். அந்த முப்பத்திரண்டில் மூத்தவன் தான் விஜயன்
ஆகும். இவனைத்தான் சிங்கள இனத்தின் முதல் குடிமகனாக மகாவம்சம் பெருமையுடன்
கூறுகிறது. அதுவும் புத்த பெருமான் தேர்ந்து எடுத்த ஒருவன் என்று மகுடம்
சூட்டுகிறது!
இப்ப என் மனதில் தோன்றுவது, புத்தருக்கு விஜயனிலும் அவனின் கூட்டாளிகளிடமும் ஒரு
தனிப்பட்ட ஆர்வம் இருக்குது என்றால், ஏன் அவர்கள் இலங்கையில் அரசாட்சியை ஏற்படுத்திய பொழுது, புத்த மதத்தினராக இருக்கவில்லை? மற்றது, அவர்கள் இலங்கையை அடைந்த கையோடு, இயக்கர்களிடையே தான் அவர்களின் முதல் இலங்கை வாழ்வு
தொடங்குகிறது. ஆனால் இந்த இயக்கர்களைத் தான் ஏற்கனவே புத்தர் தன் முதல் வருகையில்
பயமுறுத்தி, இங்கு வாழ தகுதி அற்றவர்கள் என துரத்தி விட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
அப்படி தகுதி அற்றவர்களை மீண்டும் வரவழைத்து, தான் தேர்ந்து எடுத்த, பெருமைமிக்க விஜயன் மற்றும் அவனின் கூட்டாளிகளை சந்திக்க
விடுவாரா? அதுமட்டும் அல்ல, புத்தருடன் மிகவும் நட்பாக ஒரு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இருந்த
நாகர்களை ஏன் விஜயனும் கூட்டாளிகளும் சந்திக்கவில்லை. நாகர்களின் வேண்டுகோளை ஏற்று
இரண்டாம் தடவையாக நாகர்களை மூன்றாம் வருகையில் பிரத்தியேகமாக சந்தித்தது
என்னவாச்சு? அவர்களை மறந்து விட்டாரா ? மற்றது
மகாவம்சத்தின் பிந்திய அத்தியாயத்தில் தான், புத்த மதம், விஜயனின் அரசாட்சிக்கு [கி மு 543
- கி மு 505]
பிறகு ஏழாவது மன்னனான
தேவநம்பிய தீசன் அரசாட்சியில் [கி மு 307 - கி மு 267] இலங்கைக்கு, கிட்ட தட்ட இருநூற்று நாற்பது ஆண்டுகளின் பின், அசோகனின் மகனினுடாக அல்லது தூதுவருக்கூடாக இலங்கைக்கு
அறிமுகம் செய்யப் பட்டது என்று கூறுகிறது? அது மட்டும் அல்ல, புத்தமதத்தை உலகெங்கும் பரப்பியதும் அசோகனே! சிங்களம் என்ற
இனம் ஒன்று தொடங்குவதற்கு ஒரு ஆரம்ப புள்ளியாக இருந்தான் என்பதை தவிர, இதில் விஜயனின் பங்கு என்னவென்று புரியவில்லை?
அசோகனின் உற்ற நண்பனான தேவநம்பிய
தீசன் அல்லது தீசன் இலங்கையை ஆளும்
காலத்தில், புத்த சமயப்பரப்பாளர் குழுவொன்றை [Buddhist monk missionary] தன் மகனின் தலைமையில் அங்கு அனுப்பினான் என்கிறது
மகாவம்சம். இந்த தீசன் பட்டாபிஷேகம் செய்து கொண்ட போது பல அற்புதங்கள் நிகழ்ந்தன
என்றும், இவையனைத்தும்
தீசனின் பெருமையால் நிகழ்ந்தவை என்றும், இவ்வற்றை கண்ட மன்னன் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து.
‘என்னுடைய நண்பனான தர்ம அசோகனைத் தவிர வேறு யாரும் இவ் விலை மதிப்பற்ற பொருள்களைப்
பெறத் தகுதியுள்ளவர்கள் அல்ல. எனவே இவற்றைப் பரிசாக அவருக்கு அனுப்புவேன்' என்றான் என்றும் பதினோராம்
அத்தியாயம், 'தேவநம்பிய தீசன் பட்டாபிஷேகம்' [ Chapter XI / The
Consecrating Of Devanampiyatissa] கூறுகிறது.
மேலும் பதின்மூன்றாவது அத்தியாயம் 'மஹிந்தர் வருகையில்' [Chapter XIII / The
Coming Of Mahinda], இந்திரன், மிகச் சிறந்தவரான மஹிந்த தேரரிடம் வந்து இலங்கையை மாற்றப்
புறப்படுங்கள். சம்புத்தராலும் இது ஏற்கனவே உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கும்
என்கிறான். அதைத் தொடர்ந்து, பதிநான்காவது அத்தியாயம் 'தலைநகர் புகுதலில்' [Chapter XIV / The
Entry Into The Capital], அரசனை
[தீசனை] சோதிப்பதற்காக மஹிந்த தேரர் அவனை சூட்சுமமான கேள்வி கேட்டார். கேட்கக்
கேட்க பல கேள்விகளுக்கும் அவன் பதிலளித்தான் என்கிறது.
இப்ப நான் உங்களைக் கேட்க விரும்புவது, புத்தரால் தேர்ந்து எடுக்கப்பட்ட, விஜயன் வரும் பொழுது, அங்கு ஒரு அதிசயமும் நடைபெறவில்லை, மாறாக உயர்குலம் அற்ற இயக்கர் பெண்ணை மணக்கும் சூழ்நிலைக்கு
தள்ளப் படுகிறான். பின் அவன் தன் மனைவியையும் பிள்ளைகளையும், துரத்திவிட்டு, உயர் குல பாண்டிய தமிழ் இளவரசியை இரண்டாம் தாரமாக அல்லது
மூன்றாம் மணக்கிறான், என்றாலும் கடைசி தாரத்துக்கு பிள்ளைகள் இல்லாமல் அவன் சந்ததி இலங்கையை ஆளாமல், முற்றுப் பெறுகிறது. முதல் அல்லது குவேனி பிள்ளைகளை கூட
அவன் கூப்பிட முயலவில்லை? சிங்க மிருகத்தின் பேரன் ஆளலாம் என்றால், அந்த பேரன் - விஜயன் மற்றும் யட்சினி அல்லது யட்சி (Yakshini)
அரசி குவேனிக்கு பிறந்த
பிள்ளைகளுக்கு என்ன குறை ?
அப்படி என்றால் ஏன் அவனை
புத்தர் தேர்ந்தெடுத்தார் ? இரண்டாவதாக, இந்திரன், மிகச் சிறந்தவரான மஹிந்த தேரரிடம் வந்து இலங்கையை மாற்றப்
புறப்படுங்கள். சம்புத்தராலும் இது ஏற்கனவே உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கும்
என்கிறான். அப்படி என்றால் புத்தர் தன் முதல் தெரிவான விஜயனில் தடுமாறி, இரண்டாவது தெரிவை இருநூறுக்கு சற்று மேற்பட்ட ஆண்டுகளின்
பின் காலம் தாழ்த்தி செய்தாரா ? மூன்றாவதாக, அசோகன் தீசனின் நட்பிலும், அவன் ஆளும் இலங்கையிலும் மிகவும் அக்கறை கொண்டு மஹிந்த
தேரரை அனுப்பினார் என்கிறது, அப்படி என்றால், எதற்காக, மஹிந்தர் வந்து இலங்கையில் இறங்கும் பொழுது, தீசன் சோதிக்கப் பட்டான்? எவராவது இதை வாசிக்கும் பொழுது, அவர்களின் மனதில் கட்டாயம் அசோகன், தீசனின் நட்பிலும், மற்றும் ஒருவரை ஒருவர் எவ்வளவுதூரம் புரிந்து வைத்து
இருந்தார்கள் என்பதிலும் ஒரு ஐயப்பாடு ஏற்படும் என்றும் தோன்றுகிறது? [When
one reads this portion of the Mahavamsa, the question arises how far Asoka and
Tissa could be friends and how much Asoka knew of Tissa]
-[கந்தையா தில்லைவிநாயகலிங்கம் -/- அத்தியடி, யாழ்ப்பாணம்]
பகுதி: 25 தொடரும்....
👉அடுத்த பகுதி வாசிக்க அழுத்துக
Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள ….[பகுதி 25]:
0 comments:
Post a Comment