மகாவம்சத்தில் புதைந்துள்ள..... [பகுதி 23]

 உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்

 


மகாவம்சத்தில் எப்படி, மகாபாரத இராமாயண சாயல் தெரிகிறதோ, அப்படியே சில சங்க கால சாயலும் அல்லது அவையை ஒத்திருப்பதையும் காண்கிறோம். உதாரணமாக, அத்தியாயம் 23-ல் வரும் பரணன் துட்டகாமினியின் பத்து உதவியாளர்களில் ஒருவன். அதேபோல அத்தியாயம் 36-ல் மன்னன் ஒகாரிக திச்சனின் [VOHARIKA TISSA] ஒரு அமைச்சர் கபிலன் [Kapila]. இலங்கைத் தீவுக்கு அனுப்பப்பட்ட ஐந்து தேரர்களில் ஒருவர் பெயர் உதியர். மகாவம்சத்தில் கல்லாட நாகன் என்ற மன்னன் பற்றி சொல்லப்படுகிறது. மற்றும் இலங்கையில் பல “நாகன்” பெயர் கொண்ட மன்னர்களின் பட்டியல் இருக்கிறது. இப்படி இன்னும் சில சொல்லலாம். எனவே, கபிலன், பரணன், இளநாகன், கல்லாடன் என்று சங்க காலப் பெயர்கள் எல்லாம் மகாவம்சத்தில் ஒருங்கே வருவதை யாரும் தன்னிச்சையாக நடந்த ஒற்றுமை என்று ஒதுக்க முடியாது என்று நம்புகிறேன். அத்தியாயம் 21-ல் சோழ நாட்டில் இருந்து வந்த ஏலாரா அல்லது எல்லாளன், இலங்கையை 44 ஆண்டுகளாக சீரும் சிறப்புடனும் ஆண்டான். அதேபோல மனுநீதிச் சோழன் என்ற பெயரில் தமிழ் இலக்கியத்திலும் உள்ளது. இருவரும் சோழ வம்சத்தினர் மட்டும் அல்ல, இருவரும் பசுவின் கன்றைக் கொன்ற குற்றத்துக்காகத் தன் மகன் மீது தேர்க் காலை ஏற்றி சம நீதியை நிலை நாட்டியவர்கள் என்று ஒரே மாதிரியான கதையை உடையவர்கள். அத்தியாயம் 5 இல் [THE THIRD COUNCIL], கிளிகள் தினந்தோறும் சந்திர காந்த ஏரியிலிருந்து தொண்ணுறாயிரம் வண்டி பாரம் நெல்  மணிகளைக் கொண்டு வந்தன என்றும் [parrots brought daily from the Chaddanta-lake ninety thousand waggon-loads of rice], அத்தியாயம் 11 இல் [THE CONSECRATING OF DEVANAMPIYATISSA], அறுபது தரம் நூறு வண்டிகள் நிறைய கிளி பறவைகளால் கொண்டு வரப் பட்ட. மலையில் விளைந்த அரிசி என்றும் [sixty times one hundred waggon loads of mountain-rice brought thither by parrots, nay, all that was needful for consecrating a king]– அசோகன் மற்றும் தேவநம்பிய தீசன் மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இப்படி பறவைகள் அரிசி கொண்டு வந்தன என்பது, புலவர் கபிலர் கிளிகளையும் குருவிகளையும் பழக்கி அரிசி கொண்டு வந்தார் என்று சங்க இலக்கியம் கூறுவதுடன் ஒத்து போகின்றன. கபிலர் என்பது சிவப்பு நிறக் கடவுள், சிவனைக் குறிக்கும் என்பர். அவர் குடிகளுக்கும் படைகளுக்கும் உணவு பஞ்சம் ஏற்படாத வாறு ஒரு முறை கிளிகளைப் பழக்கி நெற் கதிர்களை வரவழைத்தார் என்பதை நக்கீரர் மற்றும் ஒளவையார்  பாடல்களில் அறியலாம்.

 

  புலம் கந்தாக இரவலர் செலினே,

வரை புரை களிற்றொடு நன் கலன் ஈயும்

உரை சால் வண் புகழ்ப் பாரி பறம்பின்     10

நிரை பறைக் குரீஇயினம் காலைப் போகி,

முடங்கு புறச் செந்நெல் தரீஇயர், ஓராங்கு

இரை தேர் கொட்பின் ஆகி, பொழுது படப்

படர் கொள் மாலைப் படர்தந்தாங்கு,”

(ஒளவையார், அகநானூறு: 303: 8-14)

 

அறிவைத் துணையாகக் கொண்ட இரவலர் சென்றால், மலை போன்ற யானைகளையும், அவற்றில் ஏற்றிய அணிகலன்களையும் வழங்கிப் புகழ் பெற்றவன் பறம்புமலை அரசன் பாரி. மூவேந்தர் முற்றுகை இட்டிருந்த காலத்தில் அவன் வளர்த்த குருவிக் கூட்டம் காலையில் பறந்து சென்று மாலையில் நெல்லங் கதிர்களோடு திரும்பும். அதனை உண்டு அரசுச்சுற்றம் வாழும் என்கிறது இந்த சங்க பாடல். மேலும் அதிகாரம் 25-ல் கந்துலன் என்னும் யானையை பத்து யானை பலம் கொண்ட நந்தி மித்ரன் அடக்கிய சம்பவம் வருகிறது. விஜித நகரத்தைக் கைப்பற்ற முன்பு அரசன் நந்திமித்திரனைக் சோதித்துப் பார்க்க விரும்பினான். அதற்காக யானை கந்துலனை அவன் மீது ஏவி விட்டான். தன் மீது பாய்ந்து வரும் யானையைக் கண்ட நந்திமித்ரன் அதன் இரு தந்தங்களையும் பிடித்துக் கொண்டு யானையை அடக்கி அது முன்னேற முடியாமல் தடுத்து நிறுத்தினான் என்கிறது 5ஆம், 6ஆம் நூறாண்டில் எழுதிய மகாவம்சம். ஆனால் இதே போல சம்பவம் 2ஆம் நூற்றாண்டு சிலப்பதிகாரத்தில் கோவலன் யானையை புஜபலத்தால் அடக்கிய ஒரு சம்பவத்துடன் ஒத்துப்போகிறது. சிலப்பதிகாரம் /மதுரைக் காண்டம் / 5. அடைக்கலக் காதை இல்,

 

"தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி

வளைந்த யாக்கை மறையோன்-தன்னை;

பாகு கழிந்து, யாங்கணும் பறை பட, வரூஉம்

வேக யானை வெம்மையின் கைக்கொள்;

ஒய் எனத் தெழித்து, ஆங்கு, உயர் பிறப்பாளனைக்

கைஅகத்து ஒழித்து, அதன் கைஅகம் புக்கு,

பொய் பொரு முடங்கு கை வெண் கோட்டு அடங்கி,

மை இருங் குன்றின் விஞ்சையன் ஏய்ப்ப,

பிடர்த்தலை இருந்து, பெரும் சினம் பிறழாக்

கடக் களிறு அடக்கிய கருணை மறவ!"

 

என்கிறது , அதாவது, முதியவன் ஒருவன் கூனிய உடம்புடன்  தடி ஊன்றிக் கொண்டு தானம் பெறத் தளர்ந்து நடந்து வந்தான். அப்போது பாகனின் கட்டுப் பாட்டுக்குள் நிற்காமல் விரைந்து வரும் மதம் பிடித்த யானை ஒன்று அவனைத் துதிக்கையால் வளைத்து எடுத்துக் கொல்லப் பார்த்தது. அந்தக் காட்சியைக் கண்ட கோவலன், உடனே யானை மீது பாய்ந்து அந்தணனைத் துதிக்கையிலிருந்து விடுவித்து அதன் பிடரித் தலை மீதமர்ந்து அடக்கினானாம் என்று கூறுகிறது. மேலும் அத்தியாயம் 35 இல், சந்தமுகசிவனை அரசனின் மனைவி அலங்கரித்து “இவனை யானையிடம் கொண்டு செல். அரசன், சிறையில் இருப்பதால் யானை இடறி இவன் தலை நசுங்கட்டும். எதிரிகளிடம் சிக்குவதைவிட அதுவே மேல்”  என்று சொல்லி வேலைக்காரியுடன் அனுப்புகிறாள். யானையின் காலடியில் குழந்தையை வைத்தவுடன் அது அவனைக் கொல்லாமல் கண்ணீர் வடிக்கிறது. திடீரெனக் யானை கோபம் கொண்டு அரண்மனைக் கதவுகளை உடைத்து அரசனை மீட்டு முதுகிலேற்றிக் கொண்டு சென்று, அக்கரைக்குக் கப்பலில் தப்பித்துச் செல்ல உதவுகிறது. இது போன்ற நிகழ்ச்சிகளை அப்பர் கதையிலும் காண்கிறாம். மஹேந்திர பல்லவ மன்னனின் யானை, அப்பர் பெருமானைக் கொல்ல மறுத்து விடுகிறது.

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம் -/-அத்தியடி, யாழ்ப்பாணம்]

 

பகுதி: 24 தொடரும்

 👉அடுத்த பகுதி வாசிக்க அழுத்துக 

Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள…( பகுதி 24):  

👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க, அழுத்துக Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள.../ பகுதி 01:

No comments:

Post a Comment