[திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு
நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும்.
திரி-மூன்று, கடுகம்-காரமுள்ள பொருள். திரிகடுகம் என்பது
மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை
செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள்
மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம்
எனப்படுகிறது. 101 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஈராயிரம்
ஆண்டுகளுக்கு முன் ,கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக்
கருதப்படுகிறது.]
திரிகடுகம் தொடர்கிறது.....
பாடல் - 46
கால்தூய்மை யில்லாக் கலிமாவும் காழ்கடிந்து
மேல்தூய்மை யில்லாத வெங்களிறும் - சீறிக்
கறுவி வெகுண்டுரைப்பான் பள்ளிஇம் மூன்றும்
குறுகார் அறிவுடை யார்.
விளக்கம்:
நடக்க இயலாத குதிரையும், கட்டுத்தறியை முறித்து
வீரனிருப்பதற்கேற்ற மேலிடம் தூய்மை இல்லாத பயன்படாத யானையும், மாணவர்கள் மேல் சீற்றம்
கொண்டு உரைக்கும் கல்விச் சாலையும் அறிவுடையார் சேர மாட்டார்.
பாடல் - 47
சில்சொற் பெருந்தோள் மகளிரும் பல்வகையும்
தாளினால் தந்த விழுநிதியும் - நாடோ றும்
நாத்தளிர்ப்ப ஆக்கிய உண்டியும் இம்மூன்றும்
காப்பிகழ் ஆகாப் பொருள்.
விளக்கம்:
மெல்லிய சொல்லையும், பெரும் தோள்களையுமுடைய மகளிரும், பலவகை முயற்சியால் தேடிய
செல்வமும், நாக்கில் நீர்
ஊறும்படியாகச் சமைத்த உணவும், என்றும் இகழ்ந்து கூற முடியாத பொருள்கள் ஆகும்.
பாடல் - 48
வைதலை இன்சொல்லாக் கொள்வானும் நெய்பெய்த
சோறென்று கூழை மதிப்பானும் - ஊறிய
கைப்பதனைக் கட்டியேன்று உண்பானும் இம்மூவர்
மெய்ப்பொருள் கண்டுவாழ் வார்.
விளக்கம்:
வன்சொல்லை இனிய சொல்லாக கொள்கின்றவனும், நெய் ஊற்றிய சோறு எனக்
கூழை மதிக்கின்றவனும், கைக்கின்ற (பழைய, சுவையற்ற) உணவை உண்கின்றவனும் மெய்ப்பொருள்
கண்டு வாழ்பவர் ஆவார்.
பாடல் - 49
ஏவாது மாற்றும் இளங்கிளையும் காவாது
வைதெள்ளிச் சொல்லும் தலைமகனும் - பொய்தெள்ளி
அம்மனை தேய்க்கும் மனையாளும் இம்மூவர்
இம்மைக்கு உறுதியில் லார்.
விளக்கம்:
மனைவியை இகழ்ந்து பேசுகின்ற கணவனும், தந்தை சொல் கேளாத
புதல்வனையும், தான் வாழும்
வீட்டின் செல்வத்தை அழிக்கும் மனைவியும், எவருக்கும் பயனில்லாதவர் ஆவார்.
பாடல் - 50
கொள் பொருள் வெஃகிக் குடி அலைக்கும் வேந்தனும்
உள் பொருள் சொல்லாச் சல மொழி மாந்தரும்,
இல் இருந்து எல்லை கடப்பாளும், - இம்
மூவர்
வல்லே மழை அருக்கும் கோள்.
விளக்கம்:
குடிமக்களை வருத்துகின்ற அரசனும், பொய் பேசுகின்ற மனிதரும், எல்லையைக் கடந்து
நடக்கும் மனையாளும் இருக்குமிடத்தில் மழை பெய்யாது.
திரிகடுகம் தொடரும்.... ››››››
No comments:
Post a Comment