திரிகடுகம் -வாழ்க்கை செம்மை பெற..../07/

[திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரி-மூன்று, கடுகம்-காரமுள்ள பொருள். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது. 101 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ,கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது.]

திரிகடுகம் தொடர்கிறது.....

 


வெண்பா:31

பல்லவையுள் நல்லவை கற்றலும், பாத்து உண்டு ஆங்

இல்லறம் முட்டாது இயற்றலும், வல்லிதின்

தாளின் ஒரு பொருள் ஆக்கலும், - இம் மூன்றும்

கேள்வியுள் எல்லாம் தலை.  

விளக்கம்:நல்லவற்றைக் கற்றலும், இல்லாளோடு குறைவின்றி அறம் செய்வதும், முயற்சியால் செயற்கரிய செய்கையை முடித்தலும் சிறந்த கல்வியாகும்.

 

வெண்பா:32

நுண் மொழி நோக்கிப் பொருள் கொளலும், நூற்கு ஏலா

வெண் மொழி வேண்டினும் சொல்லாமை, நல் மொழியைச்

சிற்றினம் அல்லார்கண் சொல்லலும், - இம் மூன்றும்

கற்றறிந்தார் பூண்ட கடன்.

விளக்கம்:சொற்களை ஆராய்ந்து பொருள் கொள்ளுதலும், பயனற்ற சொற்களைச் சொல்லாதிருத்தலும், நல்ல சொற்களை கீழ்க்குலத்தார்க்குச் சொல்லுதலும் படித்தறிந்தவர் மேற்கொள்ள வேண்டிய கடமையாகும்.

 

வெண்பா:33

கோல் அஞ்சி வாழும் குடியும், குடி தழீஇ

ஆலம் வீழ் போலும் அமைச்சனும், வேலின்

கடை மணி போல் திண்ணியான் காப்பும், - இம் மூன்றும்

படை வேந்தன் பற்று விடல்!  

விளக்கம்:செங்கோலுக்கு பயந்த குடிமக்களையும், குடிமக்களை ஆலம் விழுது போல் தாங்கும் மந்திரியையும், எல்லையில் மணிபோல் உறுதியானவனின் திட்பமுடைய காவலையும் அரசன் விட்டுவிடாமல் இருக்கவேண்டும்.

 

வெண்பா:34

மூன்று கடன் கழித்த பார்ப்பானும், ஓர்ந்து

முறை நிலை கோடா அரசும், சிறைநின்று

அலவலை அல்லாக் குடியும், - இம் மூவர்

உலகம் எனப்படுவார். 

விளக்கம்:மூவர்க்குக் கடன் செய்த பார்ப்பானும், நீதி நிலையில் வழுவாத அரசனும், கவலையில்லாக் குடியும் உயர்ந்தோர் எனப்படுவர்.

 

வெண்பா:35

முந்நீர்த் திரையின் எழுந்து இயங்கா மேதையும்,

நுண் நூல் பெருங் கேள்வி நூல் கரை கண்டானும்,

மைந் நீர்மை மேல் இன்றி மயல் அறுப்பான், - இம் மூவர்

மெய்ந் நீர்மைமேல் நிற்பவர்.  

விளக்கம்:கடலின் அலைபோல் எழுந்து தடுமாறாத அறிவுடையவனும், நுட்பமான நூல்களின் முடிவைக் கண்டானும், மனக்கலக்கம் ஒழித்தவனும், ஆகிய இம்மூவரும் அழியாத் தன்மை உடையவராவார்.

 

திரிகடுகம் தொடரும்.... ››››››

 

தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்:

திரிகடுகம் - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், திரிகடுகம், கடன், குடியும், மூன்றும், பொருள், பதினெண், கீழ்க்கணக்கு, மூவர், பார்ப்பானும், கண்டானும், நூல், எழுந்து, போல், மொழி, சங்க, கற்றலும், நுண், சொற்களை, ஆலம்


No comments:

Post a Comment