எம்மை நோக்கி வரும் புதுமைகள்

 அறிவியல் /விஞ்ஞானம் 

- விண்வெளியில் அரிசியை அறுவடை செய்த சீனா

விண்வெளியின் சுற்று வட்ட பாதையில் நிரந்தர விண்வெளி நிலையம் ஒன்றை அமைக்கும் திட்டத்துடன் சீனா பணியாற்றி வருகிறது. இந்நிலையில், கட்டுமான பணி நிறைவடையாத சீன விண்வெளி நிலையத்தில், பூஜ்ய புவியீர்ப்பு விசை கொண்ட வென்சியான் என்ற ஆய்வகத்தில் விதைகளை கொண்டு நெற்பயிர்களை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.

அரிசி விதையானது 30 செ.மீ. உயரத்திற்கு வளர்ந்து விஞ்ஞானிகளை ஆச்சரியமடைய செய்துள்ளது. விண்வெளியில் கதிரியக்கங்கள் அதிக அளவில் இருக்கும். இந்த சூழலில், தாவரங்கள் எப்படி நடந்து கொள்கின்றன என்பது பற்றி புரிந்து கொள்வதற்காக சீன விஞ்ஞானிகள் வாழ்க்கை அறிவியல் பரிசோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

விண்வெளியில் தாவர விதைகள் பரிசோதனையில் சீனா ஈடுபடுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு ஜூலையில், விண்வெளியில் இருந்து திருப்பி கொண்டு வந்த விதைகளை வைத்து முதல் தொகுதி அரிசியை அறுவடை செய்தது. சொர்க்கத்தில் இருந்து வந்த அரிசி என பெயரிடப்பட்ட இந்த வகை அரிசிக்கான 40 கிராம் விதைகள், 7.6 லட்சம் கி.மீ. தொலைவுக்கு நிலவுக்கு கொண்டு செல்லப்பட்டு பின்பு பூமிக்கு திரும்பி கொண்டு வரப்பட்டது. அதிக கதிரியக்கங்கள், புவியீர்ப்பு விசையற்ற சூழல் போன்ற சுற்றுச்சூழலில் விண்வெளியில் சீன விஞ்ஞானிகள் அரிசியை உற்பத்தி செய்து இருப்பது விஞ்ஞான வளர்ச்சியின் அடுத்த நிலையாக உற்று நோக்கப்படுகிறது.

 

-தொங்கும் காந்த ரயில்

தெற்கு சீனாவில், ஸ்கை டிரெய்ன் என்ற தொங்கு ரயில் திட்டம் தற்போது வெள்ளோட்டத்தில் இருக்கிறது. இது காந்த ரயில் வகையை சேர்ந்தது, இந்த இரண்டுமே புதிதல்ல. ஏற்கனவே இருக்கும் தொழில்நுட்பங்கள் தான்.

ஆனால், ஸ்கை டிரெய்னில் பயன்படுத்தப்படும் காந்தம், மின் காந்தம் அல்ல. நிரந்தர காந்தத்தையே இதில் பயன்படுத்தியுள்ளனர் சீன ஆராய்ச்சியாளர்கள். இதில் உள்ள மிகப் பெரிய சாதகம், மேலே இருக்கும் தண்டவாளத்திற்கு மின்சாரம் தேவைஇல்லை என்பது தான்.

நிரந்தர காந்தத்திற்கான அரிய தாதுக்கள் சீனாவில் மலிவு. ஜியாங்சி மாநிலத்திலுள்ள ஜிங்குவோ நகரில், தொங்கு ரயில் சோதனை அண்மையில் நடந்தது. நிரந்தர காந்தத்தின் மேல் கொக்கி போன்ற அமைப்பில் சில ரயில் பெட்டிகள் தொங்கியபடி பயணிக்கின்றன.

ஆனால், காந்த துருவங்கள் விலக்கிக்கொள்வதால் பெட்டியின் கொக்கி, மேலே உள்ள காந்தத் தடத்தில் படாமல் நகரும். இதனால் வண்டி சத்தமில்லாமல், தேய்மானமில்லாமல் செல்லும்.

 

-சொல் பேச்சைக் கேட்கும் ரோபோக்கள்

மனிதர்களிடையே வேலை பார்க்கும் ரோபோக்களுக்கு, மனிதர்கள் சொல்வது புரிய வேண்டும். இதற்கென கூகுளின் மென்பொருளாளர்கள் அண்மையில் செயற்கை நுண்ணறிவு மொழியான 'பாம்-சேகேன்' என்ற மென்பொருளின் அடிப்படையில் ஒரு மொழி வடிவத்தை உருவாக்கியுள்ளனர்.

 

இந்த மொழியை, கூகுளின் தாய் அமைப்பான ஆல்பபெட்டின் ஒரு பிரிவான 'எவெரிடே ரோபோட்ஸ்' தயாரித்துள்ள ரோபோக்களுக்கு பயன்படும். எவெரிடே ரோபோட்ஸ் பிரிவு உருவாக்கியுள்ள 30 ரோபோக்கள், கூகுளின் மவுன்டெய்ன் வியூ அலுவலகத்தில் தற்போது வலம் வருகின்றன. அங்கு அவை கூப்பிட்ட குரலுக்கு வந்து, சொல்கிற வேலையை செய்யப் பழகி வருகின்றன.

 

கோப்பை பானங்களை எடுத்து வந்து கொடுப்பது, சிந்திய மேசையை துடைப்பது போன்று 100க்கும் மேற்பட்ட செய்திறன்கலை இந்த ரோபோக்கள் கற்றுள்ளன. அதேபோல கூகுள் பணியாளர்கள் இயல்பாக பேசும் மொழியை அந்த ரோபோக்கள் புரிந்துகொள்கின்றன.

பணியாளர்கள் சொல்வதைக் கேட்டு, 84 சதவீத தருணங்களில் சரியான பதிலை அந்த ரோபோக்கள் தந்துள்ளன. அதேபோல, பணியாளர்கள் இட்ட கட்டளைகளில் 74 சதவீத கட்டளைகளுக்கு சொன்னதை சரியாக செய்துள்ளன.

 

-சந்திரன் பிறந்தது எப்படி?

நிலாவில் ஹீலியமும், நியானும் உண்டு. இது எப்படி அங்கே வந்தது? சுவிட்சர்லாந்தின், பெடரல் தொழில்நுட்ப நிலையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், இதற்கு விடை கண்டறிந்துள்ளனர். பூமியின் மீது வேறு ஒரு பெரிய விண் பொருள் மோதியதில்தான் நிலாவே தனியாகப் பிரிந்து உருவாகிஇருக்கவேண்டும் என்கின்றனர் சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள். . பூமியின் மேற்பரப்பிலிருந்துதான் நிலாவுக்கு ஹீலியமும் நியானும் போயிருக்கின்றன என அவர்கள் கூறுகின்றனர்.

 

-மீண்டும் பார்வை தரும் மருத்துவம்

நோய் அல்லது விபத்தால் விழித்திரை பாதிக்கப்பட்டோருக்கு ஒரு ஆறுதலான சேதி. 'நேச்சர் பயோடெக்னாலஜி' இதழில் வெளிவந்துள்ள ஒரு ஆய்வின்படி, பன்றியிலிருந்து சேகரிக்கப்பட்ட கொலாஜென்களால் உருவாக்கப்பட்ட விழித்திரை மூலம், இழந்த பார்வையை மீண்டும் பெற முடியும். இந்த ஆய்வை செய்த விஞ்ஞானிகள், 20 மனித நோயாளிகளுக்கு, ஆய்வகத்தில் உருவாக்கிய விழித்திரையை பொருத்தியதில், அவர்களுக்கு பார்வை மீண்டும் கிடைத்துள்ளது.

 

இந்த ஆய்வு இன்னும் நிறைவடையவில்லை. என்றாலும், உலகெங்கும் ஆண்டுக்கு பத்து லட்சம் பேர் விழித்திரை பாதிக்கப்படும் நிலையில், அவர்களுக்கு இந்த ஆய்வு நம்பிக்கையை விதைத்துள்ளது. மேலும், பிறர் உடலிலிருந்து எடுத்து பொருத்தப்படும் உறுப்புகளை நோயாளியின் உடல் எதிர்க்கும்.

 

இதைத் தடுக்க, விழித்திரை பொருத்தப்பட்டோர், ஆண்டுக் கணக்கில் மருந்துகள் சாப்பிட வேண்டும். ஆனால், பன்றி கொலாஜனில் உருவாக்கப்பட்ட விழித்திரையை உடல் சில வாரங்களில் ஏற்றுக்கொள்வதாக, 'நேச்சர் பயோடெக்னாலஜி' இதழ் தெரிவித்துள்ளது.

தொகுப்பு:செ.மனுவேந்தன்

No comments:

Post a Comment