ஒருமுறை நான் வாலிபனாக இருந்த காலத்தில், இயற்கை மணம் பரப்பும் மலைநாட்டின், எழில் மிகு மாநகரம்
கண்டியில், 1752 ஆம் ஆண்டில், கீர்த்தி ஸ்ரீ இராஜ
சிங்கன் அரசனாக இருந்த காலத்தில்
அமைக்கப்பட்ட, கண்டி செல்வ விநாயகர்
ஆலயத்துக்கு அருகில் அன்று இருந்த செல்வன் கஃபேயில், சைவ உணவு
சாப்பிட்டுவிட்டு,
சில்லறை காசு திருப்பி வாங்கும் பொழுது ஒரு ஐந்து ரூபாய்
தாள் என்னை எனோ திடீரென கவர்ந்தது. அதில் யாரோ ஒரு பெண், தமிழில் தன் பெயரும், கண்டி விலாசமும் எழுதி இருந்தார்.
நான் பேராதனை வளாக விடுதிக்கு சென்றதும், நீங்க யார்?, உங்க ஐந்து ரூபாய் இப்ப
என்னிடம் என, சிறு குறிப்புடன், என் விடுதி விலாசத்தையும்
சேர்த்து அன்றே தபால் அனுப்பினேன். என்றாலும் ஒரு மாதமாகியும் ஒரு பதிலும் இல்லை.
நானும் அதை மறந்துவிட்டேன்.
ஒரு வார இறுதிநாள், நண்பர்களுடன் மகாவலி ஆற்றங்கரையில் பொழுது போக்கிவிட்டு, அன்று இரவு நன்றாக
தூங்கிவிட்டேன். திடீரென யாரோ கதவை தட்டுவது போல் இருந்தது. களைப்பாக இருந்தாலும், ஓரளவு என்னை
தேற்றிக்கொண்டு, கதவை திறந்தேன்.
அங்கே, தேவலோக ஊர்வசி, ரம்பை, மேனகை, திலோத்தமை போல அழகிய
ஒப்பனைகளுடன், கண்ணை கவரும்
அழகு எழிலுடன், ஓரு நங்கை நின்றாள்.
என்னால் நம்பவே முடியவில்லை. திகைத்தே விட்டேன்!
" பெண்ணுக்கு அழகு
செய்ய பொட்டிட்டுப் பார்ப்பது" என்பது தமிழரின் ஒரு வழக்கு!, என்றாலும் இவள்
நெற்றியில் அப்படி ஒரு பொட்டும் இல்லை. ஆனால் இயற்கையான வனப்பும், வசிகரமும் நிறைந்து
இருந்தாள். கருங்குழல் சரிந்து விழ, விரிந்த கயல் விழிகள் மண்ணோக்கி பின் நாணம் விடுபட்டு வாள்
வீச்சையும், வேல்
பாய்ச்சலையும் மழுக்கிவிடும் பார்வையால் என்னை பார்த்தாள்!. இல்லை இல்லை
கொன்றாள்!! வயிரமணிக் கழுத்து, துடித்த மார்பு, துலங்கு கரம். இவைகளுக்கு
துணையாகும் தோள். கைம்மணம் காட்டும் காந்தள் விரல்கள், இல்லாதது போல இருக்கின்ற
மெல்லிடை ... எப்படி நான் அவளை சொல்வேன்!!
அவள் என் வியப்பை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. எதோ நாம் பலநாள் பழகிய
நண்பர்கள் போல், எந்தவித அச்சமும்
இன்றி, புருவம் உயர்த்தி
புன்னகை பூத்து அருகில் வந்தாள். வந்ததும் வராததுமாக எங்கே என் ஐந்து ரூபாய் என்று
கேட்டு, என் அறையில் அதை
தேடவும் முற்பட்டாள். நான் மலைத்தே விட்டேன்!
பருவ எழிலில் பெண்மை பூரிக்க நேருக்கு நேர் சந்தித்ததில் எனக்கு ஆனந்தம் தான், என்றாலும் நான் இப்படி
நடக்கும் என என்றும் எதிர்பார்க்கவில்லை. தொளதொள சட்டையில் வனப்பைக் காட்டி
கலகல பேச்சால் நெஞ்சைப் பறித்தவள், எப்படியோ அந்த ஐந்து ரூபாயை எடுத்து விட்டாள்.
அவ்வளவு தான், துள்ளி
குதித்தாள் சந்தோசம் தாங்காமல். என்றாலும் என் நெஞ்சம் இன்னும் திக்குத்திக்கு என
துடித்துக்கொண்டு தான் இருந்தது. கைகால்கள் எனோ ஓடவில்லை. ஆனால் அவளோ தரதர என்று
என்னை இழுத்து, படபட என இமைகள்
கொட்ட, கிசுகிசு ஒன்றை
காதில் சொல்லி, சிவசிவக்க
கன்னத்தில் முத்தம் இட்டு, சரசரவென்று துள்ளி ஓடி விட்டாள்!!
நான் அவளை எட்டிப்பிடிக்க கையை ஓங்கினேன். ஆனால் அது என் தலைமாட்டுக்கு மேல்
தொங்கிய ஒரு படத்தை தட்டி விட்டது தான் மிச்சம்!! என்னை கொஞ்ச நேரம் கதிகலங்க
வைத்து இன்பம் மூட்டியது. படம் நிலத்தில் விழுந்து உடையும் பொழுது தான் 'கனவில் வந்த நங்கை' என்று உணர்ந்தேன்!!
"மஞ்சள் நிலாவில் கொஞ்சம் அயர்ந்தேன்
மஞ்சத்தில்
நெருங்கி நங்கை வந்தாள்!
நெஞ்சை
பறித்தாள் அன்பை கொட்டினாள்
வஞ்சனை
இதழால் முத்தங்கள் தந்தாள்!!"
"துஞ்சிய கண்கள் அகல விரிந்தன
பஞ்சாய்
மிதந்து மறைந்து விட்டாள்!
நெஞ்சம்
வருடிய கள்ளிக்கு ஏங்குகிறேன்
எஞ்சிய
நேரத்தில் கனவில் கூடுகிறேன்!!"
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்
0 comments:
Post a Comment