மனைவி கணவனது உடைமையா?
ஆப்ரஹாம் லிங்கனிடம், “இந்த உலகில் நாம் செய்யும் எல்லா செயல்களும் சுயநலத்தின் அடிப்படையில்
எழுந்தவைதான்,” என்று நண்பர்
ஒருவர் கூற, முன்னாள்
அமெரிக்க ஜனாதிபதி அதை மறுத்தார்.
“நான் பிறருக்கு
உதவி செய்ய ஆசைப்படுகிறேன். அது எப்படி சுயநலமாகும்?” என்று கேட்டார்.
நண்பர் அயராமல்,
“அப்படி உதவி செய்தால், உனக்கு என்ன கிடைக்கிறது?” என்று எதிர்க்கேள்வி
கேட்டார்.
“மகிழ்ச்சி,” என்று பதில் வர, “பார்த்தாயா? உன் மகிழ்ச்சிக்காகச்
செய்வது சுயநலமில்லையா?” என்று மடக்கினார் நண்பர்.
நம் நலனைக் கவனித்துக்கொள்வது அவ்வளவு விரும்பத்தகாத குணமா?
`தன்னலமற்ற சேவை
செய்பவர்’ என்று அபூர்வமான சிலரைப் போற்றுகிறோம்.
ஒருவர் தன் சொந்த நலனைப் பெரிதாகப் பாராட்டாது, அறவே ஒதுக்கினால், அவரால் எப்படிப்
பிறருக்குச் சேவை செய்யமுடியும் என்கின்ற கேள்வி எழுகிறதே!
பொதுவாகவே,
பெண்கள் இப்படி இருந்தால்தான் அவர்களுக்கு நல்ல பெயர்
கிட்டுகிறது.
கதை::
லட்சுமி சிறுவயதிலிருந்தே ஆண்கள் சொற்படி கேட்டு நடக்க வேண்டும் என்று
போதிக்கப்பட்டு வளர்ந்திருந்தாள்.
அவள் செய்யப்போகும் ஒவ்வொரு காரியமும் இப்படித்தான் இருக்கவேண்டும், தான் யாருடன் பேசலாம்
என்று கூறுகிறோமோ அவருடன் மட்டும்தான் அவள் பேசவேண்டும் என்று பலவகையிலும் கணவர்
கட்டுப்படுத்தியபோது அவரது போக்கைத் தவறாக நினைக்கத் தோன்றவில்லை அவளுக்கு.
கைத்தொலைபேசியில் அவள் யாருடனெல்லாம் தொடர்பு கொள்கிறாள் என்று அவர் வேவு
பார்த்தபோது, அவளுக்கு
வாழ்வில் உற்சாகம் குறைந்துகொண்டே போயிற்று.
கணவருடைய அன்புக்காக எதையும் விட்டுக்கொடுக்கலாம் என்று நினைத்தபோதும், தான் ஏன் மகிழ்ச்சியே
இல்லாமல் இருக்கிறோம் என்று அவளுக்குப் புரியவில்லை. சிலமுறை கணவனின் போக்கை
எதிர்த்துப்பார்த்தாள்.
“எனக்கு உன்மேல்
மிகுந்த அன்பு, அதனால்தான் நீ
பிறருடன் பழகினால் பொறாமை வருகிறது,” என்று சமாதானப்படுத்தினான் அவன். அவளுக்கும்
உணர்ச்சிகள் உண்டு என்பது அவனுக்குப் புரியவில்லை.
இம்மாதிரியான ஆணுக்கு மனைவிமேல் நம்பிக்கை கிடையாது என்பதில்லை. சுயநம்பிக்கை
குறைவு. அவ்வளவுதான். தன்னைவிட அவள் எந்த விதத்திலாவது உயர்ந்தவள் என்று தோன்ற, அப்படி நடக்கிறான்.
ஒருவர் தன் மகிழ்ச்சிக்காகவோ, இல்லை, சொந்த
நலனுக்காகவோ பிறரைக் கஷ்டப்படுத்துவது அன்பில் சேர்த்தியில்லை.
இப்படிப்பட்ட கணவனுக்காக விட்டுக்கொடுத்துக்கொண்டே இருந்தால் குடும்பத்தில்
எவருக்குமே மகிழ்ச்சி கிட்டாது.
ஒரேமாதிரி
அனுபவம் வெவ்வேறு மனிதர்களிடம் வித்தியாசமான பாதிப்புகள் ஏற்படுத்தும்.
கதை:
வனமாலா தன்னைக் கட்டுப்படுத்திய கணவனிடம் சிறிது காலம் அடங்கிப்போனாள்.
காதலனாக இருந்தபோது,
அவனுக்கு விட்டுக்கொடுத்து நடந்தவள் அவள். ஆனால், அப்படியே நடந்தபோது, தன் இயல்பான குணாதிசயமே
மாறிக்கொண்டு வருகிறது என்பதை உணர்ந்தாள்.
எதிலும் சவாலை எதிர்நோக்கும் குணத்தால் இப்படி ஒருவரை மணந்துவிட்டோமோ என்று
முதலில் குழம்பினாள் அந்த விளையாட்டு வீராங்கனை.
பிறகு, `கணவனுக்குத்
தீயகுணம்கொண்ட நண்பர்கள் இருந்தால் என்ன, இது என் வாழ்க்கை!’ என்று தெளிந்தாள். தனக்குப்
பிடித்த, பிறருக்குத்
தீங்கு விளைவிக்காதவற்றில் ஈடுபட்டாள்.
கரடுமுரடான பாதையில் ஏறுவது கடினமாக இருந்தாலும், மனங்கலங்காது தொடர்ந்தால்
அழகான காட்சிகள் அமையலாம் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது.
`சுயநலம்
பிடித்தவள்!’ என்று கணவன் பழித்ததை அலட்சியம் செய்தாள். (அவன் மட்டும்
சுயநலக்காரன் இல்லையா?)
காதலனாக இருந்தபோது அவனிடம் அவளுக்கு அவனிடம் பிடித்த குணங்களை மீண்டும்
கொண்டுவரலாம் என்ற நம்பிக்கை எழ, பொறுமையாக இருந்தாள்.
தன் போக்கால் அவளுக்குத் தன்னிடம் அன்பு குறைந்து வருவது புரிய, முதலில் கேலி, பிறகு சண்டை என்று
இருந்தவன் நாளடைவில் மாறினான். அவளைக் கட்டுப்படுத்துவதைக் குறைத்துக்கொண்டான்.
கதை::
பெண்பார்க்கும் படலம் முடிந்ததும், `எனக்கு இந்தப் பெண் வேண்டாம். அவளுக்கு நிறைய
சாதிக்கவேண்டும் என்ற கனவுகள் இருக்கின்றன,’ என்று ஓர் இளைஞன் மறுத்தான்.
அவனைப் பொறுத்தவரை, ஓர் இலக்குடன் சாதிக்கும் வெறி நிறைந்த பெண்களிடம்
பெண்மைக்குணம் இருக்காது.
மனைவி அவனுக்கு மட்டுமே சொந்தமான ஒரு பொருள். அவன் இழுத்த இழுப்பிற்கெல்லாம்
வளைந்துகொடுத்தால் அவள் அன்பான மனைவி. அவளுக்குத் தனக்கென்று எந்த ஒரு லட்சியமோ, ஆசையோ இருக்கக்கூடாது
என்ற எண்ணம் கொண்டவன்.
அது மட்டுமா? பெண் என்றால்
அதிர்ந்து பேசாது,
அல்லது பிறர் எதிரில் வாயே திறக்காது, கணவனுக்குக்
கீழ்ப்படிகிறவள்.
அப்படிப்பட்ட ஒரு பெண் திருமணமானதும், குடும்பப் பெரியவர்களின் அறிவுரையின்படி
நடந்துகொண்டோமே, ஏன் வாழ்க்கை
மகிழ்ச்சியற்றுப் போய்விட்டது என்று புரியாது தவித்தாள்.
கதை::
“எல்லாப்
பெண்களுக்கும் பிடித்த ஒன்று எது என்று கண்டுபிடித்து வா,” என்று அரசன் ஒருவனுக்குக்
கட்டளையிட்டான்.
அந்த மனிதன் எங்கெங்கோ தேடி, அறிவாளி என்று பிறர் சிபாரிசு செய்த ஒரு
சூனியக் கிழவியிடம் அக்கேள்வியைக் கேட்டான்.
`நான்
விடையளித்தால் உன் உயிர் தப்பும். எனக்கு என்ன கிடைக்கும்?” என்று அவள் கேட்க, “நீ கேட்பதைத் தருகிறேன்,” என்று வாக்களித்தான்.
எக்காலத்துக்கும் பொருந்தும் அவள் பதில்: “தான் சம்பந்தப்பட்ட சமாசாரங்களில்
எந்தப் பெண்ணும் சுயமாக முடிவெடுக்கவே விரும்புகிறாள்”.
அரசனுடைய பாராட்டுடன் அவளை மீண்டும் சந்தித்தவன், “உனக்கு வேண்டியதைக் கேள்,” என்றான்.
“என்னை மணந்துகொள்,” என்றவள் ஒரு நிபந்தனையும்
விதித்தாள். “நீ வெளியில் போகும்போது நான் கிழத்தோற்றத்துடன் வருவேன். வீட்டில்
இளம்பெண்ணாக நடப்பேன். இல்லையேல், வீட்டில் கிழவி, வெளியில் இளம்பெண்.
உனக்கு எப்படி வேண்டும்?”
“உன் விருப்பம்!”
அவள் மகிழ்ந்து,
எப்போதும் இளம்பெண்ணாகவே தோற்றமளிப்பதாக உறுதியளித்தாள்.
`திருமண வாழ்க்கை
நான் எதிர்பார்த்தபடி இல்லை,’ என்று இளம்பெண்கள் மனம் வெறுத்துப்
பேசுகிறார்கள்.
திருமணத்திற்கு முன்னால், திருமணத்திற்குப் பின்னால் என்று ஆராய்ந்தால், உறவில் நிறைய வேறுபாடுகள்
இருக்கும்.
எப்போதும் கணவன் அல்லது மனைவி தன்னையே நாடவேண்டும், தான் சொற்படி
நடக்கவேண்டும், பாராட்ட வேண்டும்
என்ற எதிர்பார்ப்புகள் நடைமுறைக்கு ஒவ்வாதது.
நல்ல குடும்பம் என்றால், ஒவ்வொருவருடைய
திறமையும் வெளிப்பட அவர்கள் நினைத்ததைச் சாதிக்க அனுமதிக்கப்பட வேண்டும் – அது ஆணோ, பெண்ணோ, குழந்தைகளோ!
எவரிடமும் எதிர்பார்ப்பு இல்லாது செலுத்துவதே அன்பு.
தான் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் வாழ்க்கைத்துணையிடம் சொல்லி, அனுமதி கேட்கும் நிலை
வந்தால் அது அடிமைத்தனம்.
“உங்களுக்காக
எவ்வளவு செய்தேன்!” என்று சொல்லிக்காட்டினால், பெற்ற குழந்தைகள்
கொண்டிருக்கும் அன்புகூட குறைந்துபோகும் அபாயம் இருக்கிறது.
“நான் இப்போது
செய்கிறேன். நீங்கள் நாளைக்குச் செய்யவேண்டும்!” என்பவர்களும் உண்டு. உறவுகள் என்ன, பண்டமாற்று
வியாபாரமா?
பெற்ற குழந்தைகளிடம் அன்பு செலுத்துவது அவர்கள் பிற்காலத்தில் நன்றியுடன்
இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புடனா?
அல்லது, வயது முதிர்ந்த
பிராயத்தில் அவர்கள் நம்மைக் காப்பாற்ற வேண்டும் என்றா?
குடும்பத்தினர் நல்லபடியாக வளர்வதைக் கண்டே மகிழ்ச்சி அடையலாமே!
::நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.
No comments:
Post a Comment