நம்மையே வருத்திக்கொள்ளலாமா?
எல்லா வயதிலும் மன அழுத்தம் உண்டாகிறது.
`தவறு செய்தால்
தாய் திட்டுவார்களோ!’ என்ற பயம் சிறுவர்களுக்கு.
`தாய்’ என்ற
வார்த்தைக்குப்பதில் அலுவலக மேலதிகாரி, வீட்டில் கணவன் அல்லது மனைவி என்று போட்டுப்
பார்த்தால், அனேகருக்கும்
பொருந்தும்.
எல்லாத் தருணங்களிலும், பிறரை
மகிழ்விக்க விரும்புவோருக்கு, `மாட்டேன்,’ `வேண்டாம்,’ என்றெல்லாம்
கூறத் தெரியாது. இதனால், தம்மையே வருத்திக்கொள்கிறார்கள்.
கதை:
திருமணமான முதல் வருடம் ஒரு பெண் அழுதுகொண்டே இருந்தாள். பொறுக்க முடியாது, அவளைத் தாய்வீட்டுக்கே
அனுப்பினார் கணவர்.
எந்நேரமும் அழுதுகொண்டிருந்தவளுக்கு என்ன குறை என்று புரியாத தந்தை உளவியல்
சிகிச்சைக்கு அழைத்துப்போனார். அங்கு, தன்னால் தன் பழைய காதலனை மறக்க முடியவில்லை
என்று மேலும் அழுதாள்.
`காதலனைத்தவிர
வேறு யாரையும் மணக்கமாட்டேன்,’ என்ற உறுதி அவளுக்கு இருக்கவில்லை. அப்போது
நிதானமாக யோசித்து,
தனக்குப் பிடித்த ஒன்றைத் தேர்ந்தெடுக்காதது அவளுடைய
குற்றம்.
கணவன்மேல் குற்றம் கண்டுபிடித்து, `காதலனை மணந்திருந்தால் இப்படியெல்லாம்
ஆகியிருக்காதே!’ என்று சிலர் வருந்துவார்கள். அவனுக்கு மட்டும் குறைகளே
இருந்திருக்காதா? காதலனாக
இருக்கும்போது வெளிவராத பல குணாதிசயங்கள் கணவனானபிறகுதான் தெரியவரும்.
சில சமயம், விரும்பி ஏற்ற
உறவுகள் முறியலாம். ஆனால், ஆரம்பத்தில் மன ஒற்றுமை இருந்ததால்தானே இணைந்திருப்பார்கள்?
கனடா நாட்டில் நான் சந்தித்த ஒரு பெண் தான் காதலித்து மணந்த கணவன் தன் அனுமதி
இல்லாமல் தன்னுடன் உடலுறவு கொண்டான், அது வன்முறை என்று வழக்கு தொடுத்து, விவாகரத்து பெற்றிருந்தாள்.
“ஆனால், எங்களுக்குள் சில
இனிமையான தருணங்களும் இருந்தன,” என்று அந்த இளம்பெண் கூறியபோது, அந்த நேர்மை எனக்கு
ஆச்சரியத்தை விளைவித்தது.
கீதோபதேசம்
ஒரு காரியம் நடக்க வேண்டுமென்றால் அது நடந்தே ஆகும். `நடந்திருக்கக்
கூடாதா!’ என்று காலங்கடந்து ஏங்கி என்ன பயன்?
கதை:
நான் இயற்றிய பாடல்களை உடனுக்குடன் எழுதி வைத்துக்கொள்வேன். அலமாரியில்
வைத்திருந்த நாலைந்து நோட்டுப் புத்தகங்களில் சிறு புழுக்கள் இருந்ததைப் பார்த்து
அவைகளை வெயிலில் காயவைத்தேன். (புழுக்களை அல்ல).
செய்த காரியத்தை மறந்துவிட்டு, வெளியில் போய் திரும்பியபோது, மழையில் புத்தகங்கள்
நனைந்து, நுனியிலிருந்த
எழுத்துக்கள் உருமாறி இருந்தன.
`நடந்ததை இனி
மாற்றவா முடியும்?
என்று தோன்ற, நான் புத்தகங்களைக் காயவைத்ததோடு நிம்மதி அடைய
வேண்டியதாயிற்று.
`அதைப்பற்றி
நினைக்காதே!’ என்று என்னை நானே கடிந்துகொண்டு, அதன்படி நடந்துகொண்டேன்.
விடாமுயற்சி இங்கு உதவாது
எதையாவது தொலைத்துவிட்டு, வெகு நேரம் தேடினாலும் அது கிடைக்காது.
தேடும்போது மன உளைச்சலுக்கு ஆளாவதுதான் மிச்சம். பிறகு, நாம் எதிர்பாராத
விதத்தில் எங்கிருந்தாவது கிடைத்துவிடும். இது புரியாது, தொலைந்ததை விடாது தேடி, மன உளைச்சலுக்குத் தம்மை
ஆளாக்கிக்கொள்கிறவர்கள் பலர்.
ஒரு கதையையோ, பாடலையோ எழுத
ஆரம்பித்தபின், பாதியில்
எப்படித் தொடர்வது என்று எனக்குப் புரியாதுபோகும். அதை அப்படியே விட்டுவிட்டு, வேறு காரியங்களில் கவனம்
செலுத்துவேன். ஓரிரு மாதங்கள் கழிந்தபின், அது முற்றுப்பெற்றதும் உண்டு. இதனால், `பாதியில் நின்றுவிட்டதே!
அப்புறம் என்னவென்று தெரியவில்லையே!’ என்று மனதைக் குழப்பிக்கொள்வது கிடையாது.
நம் வாழ்வில் தினமுமே நம்மை ஆத்திரப்படவைக்கும், ஏமாறவைக்கும்
சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அவற்றை அதிகம் பாராட்டாமல் இருந்தால்
மனம் அமைதியாக இருக்கும்.
வம்படித்துப் பொழுது போக்குகிறவர்
நம்மை ஆத்திரப்படவைக்கிறாரா ஒருவர்?
`அவருக்குத்
தெரிந்தது அவ்வளவுதான்!’ என்று பெரியமனதுடன் விடவேண்டியதுதான்.
பெண்கள் தமக்குப் பிடித்ததைப்பற்றியே பேசுவார்கள் என்று கூறுவதுண்டு.
பிடிக்கிறதோ, இல்லையோ, கடந்த காலத்திலேயே
நிலைத்திருப்பார்கள் சிலர். தம்மை நோகடித்ததைப்பற்றி, பலமுறை, பிற பெண்களிடம்
கூறிக்கொள்வார்கள். அப்போது கிடைக்கும் அனுதாபம் அவர்களுக்கு அன்பாகத்
தோன்றிவிடும்.
அதேபோல், பிறர் வாழ்வில்
நடந்த அசம்பாவிதங்களைப்பற்றியும் தெரிந்துகொள்ள ஆசைப்படுவார்கள். அப்போதுதானே, `நல்லவேளை, நமக்கு இப்படி
நிகழவில்லையே!’ என்று திருப்தி அடையமுடியும்?
“உன்
மகனைப்பற்றிச் சொல்!” என்றாள் என்னுடன் எப்போதோ வேலைபார்த்த ஒருத்தி, சற்று அதிகாரமாக. அவன்
மறைந்ததைப்பற்றி அவளுக்குத் தெரிந்திருந்தது. அவளைப் பொறுத்தவரை, பொழுதைப் போக்க அது ஒரு
வழி. அவ்வளவுதான்.
அது புரிந்து,
“ஸாரி. நான் அதைப்பற்றிப் பேச விரும்பவில்லை,” என்று முகத்தில் அடித்தாற்போல்
கூறிவிட்டு, அப்பால்
நகர்ந்தேன், தான் அலட்சியமாக
நடத்தப்பட்டுவிட்டோமே என்ற அதிர்ச்சியை அவளுக்கு அளித்துவிட்டு.
நம்மைப் பாதித்ததைப்பற்றி ஓயாது பேசினாலோ, வருந்தினாலோ அதன்
பாதிப்பு குறைந்துவிடப்போவதில்லை. ஒவ்வொரு முறையும் மேலெழுந்து, நம்மை வாட்டும். மாற்ற
முடியாததை ஏற்பதைத்தவிர வேறு என்ன செய்யமுடியும்?
நம் துயரத்தைப் புரிந்துகொள்கிற ஓரிருவரிடம் மட்டும்
கூறுவதுதான் விவேகம். ஆறுதல் கிடைக்கும்.
ஏமாற்றத்தின் விளைவுகள் பலவிதம்
சிறுவயதில் நாம் எதையாவது அடைய விரும்பி, அது கிடைக்காமல் போனால் ஏமாற்றம் விளையும்.
வளர்ந்தபின்னும் அதே மனநிலை இருந்தால் திண்டாட்டம்தான்.
மன நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் நீண்டகாலம்
தங்கியிருந்த ஓர் இளைஞனைப் பார்த்தேன்.
தெரிந்த கதைதான். ஒரு பெண் அவனைக் காதலிப்பதாகச் சொல்லி நம்ப வைத்துவிட்டு, பிறகு ஏமாற்றிவிட்டாள்.
நன்றாகப் படித்துக்கொண்டிருந்தவனுக்கு அதற்குப்பின் எல்லாவற்றிலும் ஆர்வம்
போயிற்று.
இதேபோன்று, ஒரு பெண்
ஏமாற்றப்பட்டபோது,
அவளுடைய நெருங்கிய தோழிகள் இருவர், `இது உன் தவறல்ல. உன்
வாழ்க்கை இத்துடன் முடிந்துவிடவில்லை,’ என்று ஆதரவாக இருந்தனர்.
பிறகு, வேறு ஒருவரைக்
கல்யாணம் செய்துகொண்டாள். எப்போதாவது மனம் உறுத்தும். ஆனால், தனக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில்
ஈடுபட்டு, அதைச்
சமாதானப்படுத்திக்கொள்ள அவளுக்குத் தெரிந்திருந்தது.
பல வருடங்கள் கழிந்ததும், `அந்த கயவன் செய்த காரியத்துக்காகவா அவ்வளவு
வருத்தப்பட்டேன்!’ என்று தோன்றிப்போயிற்று.
எதிர்மறையான உணர்வுகள் நம்மைத் தாக்கும்போது ஆக்கபூர்வமான, கடினமான எதையாவது
செய்தால் மனநிலையில் மாற்றம் உண்டாகும். தோட்டவேலை, விளையாட்டு, நாட்டியம் – இப்படி
அவரவர்களுக்குப் பிடித்தது ஏதாவது இருக்காதா?
பொறுக்க முடியாததைப் பொறுத்தபின்
வெளிநாட்டுக்கு உத்தியோக நிமித்தம் செல்பவர்களுக்கு, `வாழ்க்கை இத்தனை
கடினமானதா!’ என்ற அயர்ச்சி உண்டாகும். புதிய இடம், வசதியின்மை, கலாசார மாறுபாடு, உறவினரைப் பிரிந்து, தனிமையில் வாடவேண்டிய
கொடுமை என்று எவ்வளவு இல்லை!
எப்படியோ சகித்துக்கொண்டு காலத்தை ஓட்டியபின், `நாம் எத்தனை இடர்களைத்
தாங்கி, அவைகளைக் கடந்து
வந்திருக்கிறோம்!’ என்ற மலைப்புடன், பெருமையும் எழும். பிறருக்கு ஆலோசனை கூறும்
அளவுக்கு உயர்ந்திருப்பார்கள்.
உனக்காகவும் நேரம் ஒதுக்கு
நான் உத்தியோகம் பார்த்த காலத்தில், திங்கட்கிழமையிலிருந்து, சில சமயம், சனிக்கிழமைகூட வேலை செய்ய
வேண்டியிருக்கும். எனக்கென்று ஞாயிற்றுக்கிழமையை ஒதுக்கி இருப்பேன் — கூடியவரை, அன்று பகலில் வெளியில்
போவதைத் தவிர்த்துவிட்டு.
இது சுயநலமா? எனக்கு
முக்கியமான, பிடித்த
காரியங்களில் நேரத்தைச் செலவிட முடிகிறதே!
பிறருக்குப் பயந்தே ஒவ்வொரு காரியத்தையும் செய்துவிட்டு, மகிழ்ச்சியின்றி, எதற்கு வாழ்வது?
:நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.
No comments:
Post a Comment