மகாவம்சத்தில் புதைந்துள்ள…..(பகுதி 17)

            உண்மைகளும் வரலாற்றுச் சான்றுகளும்

 


கி.மு 3 ஆம் நூற்றாண்டிற்கும் (கி.மு 247) கி.மு 1 ஆம் நூற்றாண்டிற்கும் (கி.மு 29) இடைப்பட்ட 220 ஆண்டுகால அனுராதபுர அரசின் வரலாற்றில் ஆட்சி புரிந்த 19 மன்னர்களுள் 8 தமிழ் மன்னர்கள் 81 வருடங்களுக்கு மேல் ஆட்சி புரிந்துள்ளனர். ஆயினும், இக்கால வரலாற்றைப் பல அத்தியாயங்களில் கூறும் மகாவம்சம் தமிழ் மன்னர்களின் ஆட்சியைச் சில செய்யுட்களில் மட்டுமே கூறி முடிக்கின்றது. உதாரணமாக, எல்லாளன் என்ற தமிழ் மன்னனை வெற்றி கொண்டதன் மூலம் இலங்கையின் விடுதலை வீரனாக வருணிக்கப் பட்ட துட்டகாமினியின் 24 ஆண்டு கால ஆட்சியை 843 செய்யுட்களில் கூறும் மகாவம்சம், 44 ஆண்டுகள் நீதி தவறாது ஆட்சி நடத்திய எல்லாளனை 21 செய்யுட்களில் மட்டுமே கூறுகிறது. இது ஒன்றே பாளி இலக்கியங்களில் தமிழ் மன்னர்களின் வரலாறு மறைக்கப்பட்டு உள்ளமைக்குச்  சிறந்த சான்று ஆகும்.

 

ஒரு உண்மையான தேரர் அல்லது புத்த பிக்கு எப்படி இருக்கவேண்டும் என்பதற்குச்  சிறந்த உதாரணமாக, உபகுப்தர் (Upagupta) என்ற கி மு மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த பௌத்த பிக்கு ஒருவரை சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட அசோகவதனம் (Ashokavadana) எனும் வரலாற்று நூலில் காண்கிறோம். இந்தியாவில் போர் வெறியுடன் பல போர்களைப் புரிந்த, சக்கரவர்த்தி அசோகர் (கி.மு 273 - 232), கொடிய கலிங்க போர்க் களக் காட்சியைக் கண்டு மனம் பதைத்தார், அந்த மாமன்னனின் ஈரநெஞ்சு, துஷ்ட காமனி போலவே, போரின் சேதத்தைக் கண்டும், பலியான உயிர்களை எண்ணியும், சிந்தப்பட்ட இரத்தத்தை நினைத்தும் அமைதியாக அழுதது, அப்பொழுது  சக்கரவர்த்திக்கு நேர் நெறியைக் காட்டி ஆற்றுப்படுத்தியவர் தான் ‘உபகுப்தர்’ என்னும் இந்த உண்மையான பிக்கு ஆகும். என்றாலும் மகாவம்சம் / அத்தியாயம் 5 / 'மூன்றாவது மகாசபை' / 189 ஆம் பாடல், அசோகனின் கொடுஞ்செயல்களின் காரணமாக முன்பு அவனைச் சண்டாள அசோகன் என்று அழைத்தனர் என்கிறது. அதை உறுதிப் படுத்துவது போல, விவேகானந்தரின் ஒரு கூற்றும்இளவயதில் அவ்வளவு நல்லவராக இல்லாத அசோகர்  தனது சகோதரருடன் சண்டையிட்டார் என்கிறது.  அதில் தோற்கடிக்கப்பட்ட அசோகர், பழிவாங்குவதற்காகச்  சகோதரனை கொல்ல எண்ணினார். அந்தச்  சகோதரன் ஒரு புத்த பிக்குவிடம் தஞ்சம் புகுந்ததால், அசோகர் அந்த புத்த பிக்குவிடம் சென்று தனது தம்பியை ஒப்படைக்கக் கூறினார். அன்பால் பகைமையை நீக்கச் சொன்ன புத்த பிக்குவிடம், கோபத்தால் தனது தம்பிக்கு பதில் உயிர் துறக்க அவருக்கு சம்மதமா என்று கேட்டதற்கு, சிறு சலனமும் இல்லாமல் அந்த புத்த பிக்கு உயிர் விட சம்மதித்து வெளியே வந்தார் என்கிறார். ஆனால் மகாவம்சத்தில் இதற்கு எதிர்மாறான செயலை காண்கிறோம், இங்கு துஷ்ட காமனிக்கு தேரர்கள், இவர்கள் எல்லோரும்  நமது மார்க்கத்தை நம்பாதவர்கள், எனவே மிருகங்களை விட உயர்வாக மதிக்கப்படக் கூடாதவர்கள், ஆகவே இது அதர்மம் அல்ல, எனவே நீ சுவர்க்கத்துக்குப் போகும் பாதையில் எவ்விதத் தடையும் இல்லை என்கின்றனர்? அப்படி என்றால் புத்தர் மாற்று கருத்து உள்ளவர்களை, அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக, நேர்மையானவர்களாக, ஒழுங்கானவர்களாக, மற்ற உயிர்களிடமும் மக்களிடமும் அன்பு செலுத்துபவர்களாக இருந்தாலும் கொல்லலாம் என்கிறாரா?, எல்லாமே குழப்பமாக உள்ளது?? உங்களுக்கு ஏதாவது புரிகிறதா


அசோகனின் பாறை ஆணை-2, [The Edicts of King Asoka] மன்னர் ஆண்டியோகாஸ் பற்றியும், மற்ற கிரேக்கப் பகுதி நாடுகள் பற்றியும், சத்தியபுத்திரர் [இன்றைய தர்மபுரி பகுதியான, தகடூர்ப்  பகுதியை ஆட்சிபுரிந்த சத்தியபுத்திரர் அதியமான் மரபினரை கொண்டவர்களாகும். சங்கப் பாடல்களிலே அதியமான்கள் பற்றிய குறிப்புக்கள் உள்ளன], சேர [கேரளபுத்திரர்], சோழ, பாண்டியர்கள், பற்றியும் குறிப்பிடுகிறது. [Everywhere  within Beloved-of-the-Gods, King Piyadasi's domain, and among the people beyond the borders, the Cholas, the Pandyas, the Satiyaputras [Satyaputras ruled parts of the Kongu country and were surrounded by the Cheras to the west and the Pandyas and Cholas to the east./ ], the Keralaputras [Cera dynasty], as far as Tamraparni and where the Greek king Antiochos rules, and among the kings who are neighbors of Antiochos,..] இப் பகுதிகளுக்கு எல்லாம் தூதுக் குழுக்கள் பௌத்த சமயப் பணிக்கு அனுப்பப்பட்டன. இந்தத் தூதுக் குழுக்கள் அனுப்பப் பட்ட காலம் கி.மு. 258 என்று நம்ப இடமுள்ளது என்கிறார் வின்சென்ட் ஷ்மித். இது மகாவம்சத்திற்கு குறைந்தது 800 ஆண்டுகளுக்கு முன் என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால் அசோகர் எந்தெந்த நாடுகளுக்குத் தூதர்களை அனுப்பினார் என்பது குறித்த இலங்கை புத்த பிக்குகளால் பல நுறு ஆண்டுகளின் பின் எழுதப்பட்ட குறிப்புகளில், அசோகன் தூதரகங்கள் தொடர்பாக ஒரு முரண்பாடு காணப்படுகிறது. உதாரணமாக, அசோகனின் தலைநகரான, பாடலிபுத்திரத்தில் இருந்து தெற்கிற்கு வனவாசி, மஹிஷமண்டல மற்றும் இலங்கை போன்ற இடங்களுக்கு தூதர்கள் அனுப்பியதாக [taking Asoka’s capital Pāṭaliputta as the centre of the radius, we can see that the Missions went, for example  further south to Vanavāsī [dwelling in the forest  / According to Dr. Buhler, it was situated between the Ghats, Tungabhadra and Barodā] and Mahisamaṇḍala [modern Mysore] and on to Sri Laṅkā] பாளி நூலான மகாவம்சத்தில் [Mahāvaṁsa ] குறிக்கப்பட்டுள்ளது. இங்கு தமிழர்களின் நாடுகளான, சத்தியபுத்திர தேசம், கேரளபுத்திரர், சோழ, பாண்டிய நாடுகள் என நேரடியாக அசோகனின் பாறையில் குறிக்கப்பட்டது, மகாவம்சத்தில் விடப்பட்டுள்ளன. இதன் நோக்கம் ஏதாவது உங்களுக்கு புரிகிறதா ?

:-கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்

பகுதி: 18 தொடரும்

👉அடுத்த பகுதி வாசிக்க அழுத்துக  Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள… (பகுதி 18):  

👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க, அழுத்துக Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள.../ பகுதி 01:

No comments:

Post a Comment