திரிகடுகம் -வாழ்க்கை செம்மை பெற..../05/

 [திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரி-மூன்று, கடுகம்-காரமுள்ள பொருள். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது. 101 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ,கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது.]

 


திரிகடுகம் தொடர்கிறது.....

 

வெண்பா: 21

வருவாயுள் கால் வழங்கி வாழ்தல், செரு வாய்ப்பச்

செய்தவை நாடாச் சிறப்புடைமை, எய்தப்

பல நாடி நல்லவை கற்றல், - இம் மூன்றும்

நல மாட்சி நல்லவர் கோள்.       

 

விளக்கம்: தனக்கு வரும் வருவாய்க்கு ஏற்றபடி அறம் செய்தலும், போரில் வெற்றி அடைதலும், நல்லவைகளைப் படித்தலும் நல்லவருடைய கொள்கைகள் ஆகும்.

 

வெண்பா: 22

பற்று என்னும் பாசத் தளையும், பல வழியும்

பற்று அறாது ஓடும் அவாத் தேரும், தெற்றெனப்

பொய்த்துரை என்னும் புகை இருளும், - இம் மூன்றும்

வித்து; அற, வீடும் பிறப்பு.         

 

விளக்கம்: பாசப் பற்றையும், பற்று விடாத விருப்பத்தையும், பொய்மையை என்றும் அறியாமை, ஆகிய இம்மூன்றையும் நீக்கினால் வீடு பேறு அடையலாம்.

 

வெண்பா: 23

தானம் கொடுக்கும் தகைமையும், மானத்தால்

குற்றம் கடிந்த ஒழுக்கமும், தெற்றெனப்

பல் பொருள் நீங்கிய சிந்தையும், - இம் மூன்றும்

நல் வினை ஆர்க்கும் கயிறு.       

 

 விளக்கம்:  தானம் கொடுத்தலும், பழிக்கு நாணும் நல்லொழுக்கமும், பல பொருள்களில் இருந்து நீங்கிய நல்ல சிந்தனையும், ஆகிய இம்மூன்றும் அறத்தின் பயனைத் தரும்.

 

வெண்பா: 24

காண் தகு மென் தோள் கணிகை வாய் இன் சொல்லும்,

தூண்டிலினுள் உட்பொதிந்த தேரையும், மாண்ட சீர்,

காழ்ந்த பகைவர் வணக்கமும், - இம் மூன்றும்

ஆழ்ச்சிப் படுக்கும், அளறு.       

 

விளக்கம்: மென்மையான தோள்களையுடைய கணிகையரின் மென்மையான மொழியும், தூண்டிலில் மீனுக்கு இரையாக வைக்கப்பட்ட தவளையும், பகைவர்களுடைய வணக்கமும், ஆகிய இம்மூன்றும் நரகம் போன்றதாகும்.

 

வெண்பா: 25

செருக்கினால் வாழும் சிறியவனும், பைத்து அகன்ற

அல்குல் விலை பகரும் ஆய்தொடியும், நல்லவர்க்கு

வைத்த அறப்புறம் கொண்டானும், - இம் மூவர்

கைத்து உண்ணார், கற்றறிந்தார்.        

 

விளக்கம்: பெரியோரை மதிக்காத அறிவில்லாதவனும், உடலை விற்கும் விலைமகளும், நல்லவர்க்கு வைத்த அறச்சாலையை அழித்தவனும், ஆகிய இம்மூவரிடத்தும் அறிஞர்கள் உணவு உண்ணமாட்டார்.

 

திரிகடுகம் தொடரும்.... ››››››

 

பதிவேற்றம்:செ.மனுவேந்தன்

 

தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்:

திரிகடுகம் - பதினெண் கீழ்க்கணக்கு, ஆகிய, இலக்கியங்கள், மூன்றும், பற்று, பதினெண், கீழ்க்கணக்கு, திரிகடுகம், வணக்கமும், மென்மையான, நல்லவர்க்கு, இம்மூன்றும், வைத்த, தெற்றெனப், சங்க, என்னும், தானம், நீங்கிய

0 comments:

Post a Comment