[memory loss]
நினைவாற்றல் என்றால் என்ன என்பது
பற்றி அறிய முன்பு, முதலாவதாக, எமது பண்டைய மூதாதையர்கள், இன்று உங்கள் தகவலுக்கு அல்லது செய்திகளுக்கு தமது
எண்ணங்களை, பதிவுகளை எப்படி கைவிட்டு சென்றார்கள் அல்லது எப்படி அதை
தமது நாகரிக வளர்ச்சியுடன் அல்லது பரிணமித்தலுடன் முன்னேற்றினார்கள் என்பது
முக்கியமாகிறது. உதாரணமாக, முதலாவதாக மனிதன் குகைகளிலும் பாறைகளிலும் தனது எண்ணங்களை, செய்திகளை, செயல்பாடுகளை தனது மகிழ்வு அல்லது பொழுது போக்கிற்காகவும்
மற்றும் மற்றவர்களுக்கு தனது கருத்து அல்லது செய்திகளை சொல்லுவதற்காகவும்
வரைந்தான், ஆனால் அவன்
வேட்டையாடும் உணவு சேர்க்கும் சமூகமாக அன்று இருந்ததால், கட்டாயம் சூழ்நிலைகள், வசதிகளுக்கு ஏற்ப அசைய வேண்டிய கட்டாயமும் இருந்ததால், அந்த வரைதல்களை அவன் போகும் இடங்களுக்கு எடுத்து செல்ல
முடியாது என்பதை உணர்ந்த அவன், அதன் பின், இலைகளிலும் [உதாரணம் ஓலை] மற்றும் கற்பலகைகளிலும் [உதாரணம்
சுமேரிய கற்பலகைகள்], அதை தொடர்ந்து சில ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் காகிதத்திலும், மீண்டும் பல நூறு ஆண்டுகளுக்கு பின் அவற்றை
மைக்ரோசிப்பிலும் [நுண் சில்லு] ... இப்படி அவன் இன்றைய நாகரிகத்துக்கு வளர்ச்சி அடைந்தான். இந்த நுண் சில்லுகளில்
இருந்து / நுண் சில்லுகளுக்கு அனுப்ப அல்லது மீட்டெடுக்க / அறிவுறுத்த நாம்
மின்சாரம், ஒளி ... போன்றவற்றை இன்று பாவிக்கிறோம். கிட்டதட்ட இவ்வாறுதான், நாம் தகவல்களைக் கற்றுக்கொண்டும் சேமிக்கவும் எம் உடலின்
ஒரு பகுதியாக உள்ள மூளையை பிரத்தியேகமாக பாவிக்கிறோம்.
இனி நாம் கொஞ்சம் விரிவாக நினைவாற்றல்
என்றால் என்ன என்று பார்ப்போமாயின், எமது ஐம்புலன்களில் இருந்து வரும் உணர்வுகள் எல்லாம்
பொதுவாக சில குறிப்பிட்ட வழிகளில் எமது
மூளையை அடைகின்றன. மூளை அவற்றை வகைப்படுத்தி உணர்ந்து கொள்கிறது. இந்த
உணர்வுகள் மூளையிலேயே தங்கி இருந்தால் அவை எமக்கு நினைவுகளாக மாறிவிடுகின்றன. தேவை
ஏற்படும்போது இந்த நினைவுகளை மீட்டெடுக்க முடியும். நண்பர் ஒருவர் வெளி
மாநிலத்தில் உள்ள ஓர் ஊருக்குச் சென்றார். வெகுநேர ரயில் பயணம் என்பதால் அவரது
அலைபேசியில் சார்ஜ் [மின்னேற்றம்] தீர்ந்துவிட்டது. அந்த ஊரில் அவருக்குத் தெரிந்த
ஒரே நண்பரது எண்ணும் அவரது அலைபேசியில்தான் இருந்தது. அவருக்கு நினைவில் இல்லை.
ஒருவழியாக நண்பரைத் தொடர்பு கொள்வதற்குள் படாதபாடு பட்டு விட்டார்.
நூற்றுக்கணக்கான எண்களை சேமித்து
வைத்துக் கொள்ளலாம் என்பது விஞ்ஞான வளர்ச்சிதான். ஆனால், அதன் காரணமாக நாம் நமது நினைவுத் திறனை கொஞ்சம் கொஞ்சமாக
மழுங்கடித்துக் கொண்டு வருகிறோம். எத்தனை பேருடைய தொலைபேசி எண்கள் நமக்கு நினைவில்
இருக்கின்றன? சொல்லுங்கள் பார்ப்பம்?
பொதுவாக எமது மூளை அன்றாடம்
ஆயிரக்கணக்கான தகவல்களைப் பெறுகிறது. இவ்வாற்றில் சில குறுகிய கால நினைவாற்றல்
எனப்படும். உதாரணமாக, இதன் தேவையை பொருட்டு, அவசியமான காலத்திற்கு மட்டுமே அந்த தகவல்கள் மூளையில்
சேமித்து வைக்கப்படுகின்றன. பணி அல்லது தேவை முடிந்ததும் அந்த தகவல்கள்
மறக்கப்பட்டு விடுகின்றன. இதனால் தான் இதை
குறுகியகால நினைவாற்றல் என்று வகைப்படுத்தப்படுகிறது. அது போலவே மற்றது
நீண்டகால நினைவாற்றல் ஆகும். உதாரணமாக நாம் செய்யும் தொழிலுக்குத் தேவையானவை, நம்முடைய மனதை மிகவும் கவர்ந்தவை அல்லது பாதித்தவை, மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்தவை ஆகிய தகவல்கள்
நம்முடைய மூளையில் நீண்டகால நினைவுகளாக தங்கிவிடுகின்றன. மூளை பலசெய்திகளை
ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தி ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட தகவல்களுடன், புதிய தகவல்களையும் சேர்த்து பாதுகாக்கிறது. பல ஆண்டுகள்
அந்த தகவல்கள் வெளிக்கொணரப்படாமல் போனால், கோடிக்கணக்கான தகவல்களுக்கிடையில் அவை புதைந்து போகின்றன.
இதனால்தான் நாம் சந்திக்கும் சிறுவயதுத் தோழரிடம், “உங்களுடைய பெயர் நாக்கில் இருக்கிறது; வரமாட்டேன் என்கிறது” என்று சொல்ல வேண்டிய சந்தர்ப்பம்
ஏற்படுகிறது.
இனி நாம், மனிதர்கள் வயது போக அல்லது நோய்வாய்ப்பட , எம் நினைவாற்றலுக்கு என்ன நடக்கிறது என பார்ப்போம். சில பல
காரணங்களால், எமது நினைவுகளை சேமிக்கும் அல்லது சேமித்த நினைவுகளை
மீட்டெடுக்கும் பொறிமுறைகள் தம் ஆற்றலை இழக்கின்றன அல்லது அவை நாம் எதிர்பார்த்த
அளவு திறன் அற்று போகிறது. அப்படி என்றால் இதில் இருந்து நாம் விடுபட அல்லது அவை வராமல் தடுக்க நாம் என்ன
செய்யவேண்டும் ?
அதற்கு முதல், பலர் மனதில் எழும் கேள்வி நினைவாற்றல் அல்லது நினைவாற்றல்
இழப்பு ['மறதிநோய்'] ஒரு வரமா ? அல்லது சாபமா ?
சர் சார்லசு குன் காவோ (Sir
Charles Kuen Kao] ஒரு மின்
பொறியாளரும், இயற்பியலாளரும் ஆவார். இவர் தொலைத்தொடர்புகளில் ஒளியிழைகளை
உருவாக்கியதிலும், பயன்படுத்துவதிலும் முன்னோடி ஆவார். குன் காவோ அகண்ட
அலைவரிசையின் தந்தை என்றும் அறியப்படுகிறார். குன் கோவிற்கு 2009 ஆம் ஆண்டிற்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அவரது
கண்ணாடி இழை தகவல் பரிமாற்றம் குறித்த ஆராய்ச்சிக்காக, மற்றும் இருவருடன் சேர்ந்து வழங்கப்பட்டது.
ஹொங்கொங் கேபிள் தொலைக்காட்சி
நிறுவனம் அக்டோபர் 2009 இல் இவரை பேட்டி காணச் சென்றபோது, அவர் தன்னை மறந்தவராக, நினைவாற்றல் இழந்து இருந்தார். அவருக்கு அவரின்
கண்டுபிடிப்பு பற்றியோ அல்லது தான் நிகழ்த்திய சாதனை பற்றியோ எந்த நினைவுகளும்
அவரிடம் காணப்படவில்லை! அவரை இந்த உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்த அந்த வரமான
நினைவாற்றல், இப்ப சாபமாக , நினைவாற்றல் இழப்பில் முடித்து இருந்தது குறிப்பிடத்
தக்கது.
"இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம்
கேட்பேன்
நினைத்து
வாட ஒன்று
மறந்து
வாழ ஒன்று"
என்பது ஒரு சுவையான திரைப்பட பாடல்.
ஆனால் உண்மையில் எமக்கு இருப்பது ஒரே ஒரு மனம். அது காலப்போக்கில் தன் நினைவாற்றலை
இழக்கிறது என்பதே உண்மையாகும்.
இனி நினைவாற்றலை கூர்மைப்படுத்த
அல்லது அதன் இழப்பை தடுக்க என்ன என்ன செய்ய வேண்டும் என்று ஒவ்வொன்றாக பகுதி 02 இல் பார்ப்போம்
[மூலம்:
ஆங்கிலத்தில், கலாநிதி கந்தையா சுந்தரலிங்கம்-/-தமிழாக்கம்:
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
பகுதி: 02 தொடரும்
No comments:
Post a Comment