திரிகடுகம் -வாழ்க்கை செம்மை பெற..../04/

[திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரி-மூன்று, கடுகம்-காரமுள்ள பொருள். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது. 101 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ,கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது.]



திரிகடுகம் தொடர்கிறது.....

 

வெண்பா:16

மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும், மாசு இல் சீர்ப்

பெண்ணினுள் கற்புடையாள் - பெற்றானும், உண்ணு நீர்க்

கூவல் குறை இன்றித் தொட்டானும், - இம் மூவர்

சாவா உடம்பு எய்தினார்.

 

விளக்கம்:மண்ணுலகத்தில் புகழை அடைந்தவனும், கற்புடைய மனைவியைப் பெற்ற கணவனும், கிணறுகளைத் தோண்டி வைத்தவனும், எக்காலத்தும் அழியாத புகழைப் பெற்றவராவார். அவர் இறந்தாலும் அவர் புகழ் நிலைக்கும்.

 

வெண்பா:17

மூப்பின்கண் நன்மைக்கு அகன்றானும், கற்புடையாள்

பூப்பின்கண் சாராத் தலைமகனும், வாய்ப் பகையுள்

சொல் வென்றி வேண்டும் இலிங்கியும், - இம் மூவர்

கல்விப் புணை கைவிட்டார்.

 

விளக்கம்:மூப்பு வந்தபோது துறவறத்தை மேற்கொள்ளாதவனும், கற்புடைய மனைவியைக் குறித்த காலத்தில் சேராதவனும், வாய்மொழி வெற்றியை விரும்பி பேசுகின்ற தவசிகளும், கல்வித் தெப்பத்தைக் கைவிட்டவர்கள் ஆவர்.

 

வெண்பா:18

ஒருதலையான் வந்துறூஉம் மூப்பும், புணர்ந்தார்க்கு

இரு தலையும் இன்னாப் பிரிவும், உருவினை

உள் உருக்கித் தின்னும் பெரும் பிணியும், - இம் மூன்றும்

கள்வரின் அஞ்சப்படும். 

 

விளக்கம்:உறுதியாக வரும் மூப்பு, நண்பரின் பிரிவு, உடம்பினை உருக்குகின்ற தீராத நோய், இம்மூன்றுக்கும் அஞ்சி எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும்.

 

வெண்பா:19

கொல் யானைக்கு ஓடும் குணமிலியும், எல்லில்

பிறன் கடை நிற்று ஒழுகுவானும், மறம் தெரியாது

ஆடும் பாம்பு ஆட்டும் அறிவிலியும், - இம் மூவர்,

நாடுங்கால், தூங்குபவர்.

 

விளக்கம்:யானைக்கு அஞ்சி ஓடுகின்ற வீரனும், அயலான் மனைவியை விரும்புபவனும், நச்சுப் பாம்பை ஆட்டுகின்றவனும், விரைவில் கெடுவர்.

 

வெண்பா:20

ஆசை பிறன்கண் படுதலும், பாசம்

பசிப்ப மடியைக் கொளலும், கதித்து ஒருவன்

கல்லான் என்று எள்ளப்படுதலும், - இம் மூன்றும்

எல்லார்க்கும் இன்னாதன.  

 

விளக்கம்:பிறரிடமுள்ள பொருளுக்கு ஆசைப்படுவதும், சோம்பி இருத்தலும், கல்லான் என்று இகழப்படுவதும் யாவருக்கும் துன்பம் தருபவைகளாகும்.

 

திரிகடுகம் தொடரும்.... ››››››

 

தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்:

திரிகடுகம் - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், மூவர், திரிகடுகம், கீழ்க்கணக்கு, பதினெண், மூன்றும், அஞ்சி, யானைக்கு, கல்லான், மூப்பு, கற்புடைய, சங்க, கற்புடையாள், அவர், வேண்டும்

வெளிச்சம் காட்டி இருட்டாக்கியது ஏனோ?

 


"அன்பே! உயிரே!! விட்டுப் பிரிகிறேன்

அருகில் வந்து அவமானப் படாமல்

அறம் அற்றவளாய் பார்ப்பதை விட  

அழகியே அறிவுடன் நானே விலகுகிறேன்!"

 

"நேற்று வரை உன்னை நம்பினேன்

நேசம் கொண்டவளாய் நீயும் காட்டினாய்

நேரார் போல் இன்று உதைக்கிறாய்

நேர்மை கொண்டு நானே ஒதுங்குகிறேன்!"

 

"குரங்கு போல் நீ இருப்பாயோ

மரம் விட்டு மரம் தாவுகிறாயோ

கரம் நீட்டி சந்திக்கக் கூப்பிட்டாயே  

தூரம் சொல்லி விலகியது சரியாச்சோ?"  

 

"அன்பு கொட்டி பாசாங்காய் அழைத்தாயோ  

அழகு காட்டி பொழுது போக்கினியோ

அடுத்தவனை தேடும் வரை தற்காலிகமோ

அடுப்புக்கு பொறுக்கும் விறகோ நான்!" 

 

"ஆசை தீர்க்க நண்பா என்றாயோ

ஆடி அடங்க வேறு தேடினியோ

ஆழமான நட்பென ஏமாந்தது நானோ   

ஆண்டாள் மாலையில் வண்டுகள் மேயுதோ?"

 

"வெற கொடிக்கப் போற பொண்ணே

வெட்கம் ஏது சொல்லு பெண்ணே

வெறுமையை எனக்கு தந்தது எனோ

வெளிச்சம் காட்டி இருட்டாக்கியது ஏனோ ?"

 

(நேரார் - பகைவர்; foes)

 

:-கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்

கடைசியாக வந்த திரைப்படங்கள் எப்படி?

 சுருக்கமான பார்வை 



‘’டிரைவர் ஜமுனா’’  விமர்சனம்  (Cinema Tamil Movie ' Driver Jamuna' Review)

கின்ச்ளின் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை எஸ்.பி. சௌத்ரி தயாரிக்க, ஜிப்ரான் இசையமைத்து,  தென் இந்திய மொழிகளில் வெளிவந்துள்ளது.

ஒரு பெண் வண்டி ஓட்டுநரின் கதை, நிழலான கையாட்கள் ஒரு கூட்டம் தனது வண்டியை வாடகைக்கு எடுக்கும்போது தன்னை ஒரு புதைகுழியில் சிக்கவைக்கும் கதை. இப்படத்தில் அபிஷேக் குமார், ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, இளைய பாண்டி மற்றும் மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வன்முறையினை நிரப்பி இரசிகர்களின் இதயத்தை புழியும் முயற்சி [2.5/5]

 

‘’பரோல்’’ விமர்சனம்  (Cinema Tamil Movie ' PAROLE' Review)

துவாரக் ராஜா இயக்கத்தில் லிங்கா, கல்பிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை மதுசூதனன் தயாரிக்க, ராஜ்குமார் அமல் இசையமைத்துள்ளார்.

அம்மா இறந்து விட, சிறையில் இருக்கும் அம்மாவுக்கு ரொம்ப பிடித்த அண்ணன் லிங்காவை எப்படியாவது பரோலில் வெளியே எடுக்க போராடும் தம்பி ஆர்.எஸ். கார்த்திக்கின் முயற்சியும் இருவருக்குள்ளும் இருக்கும் மோதல்கள் தான் இந்த பாரோல் படத்தின் கதை.

அதிகளவில் ஆபாச காட்சிகள்,  கெட்ட வார்த்தைகள் பல இடங்களில் வருவது படத்திற்கு பலமாக அமையவில்லை.[2.5/5]

 

''யசோதா'' விமர்சனம்  (Cinema Tamil Movie ' YASOTHA' Review)

 ஹரி & ஹரிஷ் இயக்கத்தில் சமந்தா, வரலக்ஷ்மி சரத்குமார், முரளி சர்மா என பலர் நடித்திருக்கும் திரில்லர் படத்திற்கு மணிஷர்மா இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னட மொழியில் ஒரு பான் இந்தியா படமாக வெளியாகியது.

தனது தங்கையின் ஆப்ரேஷனுக்காக வாடகை தாயாக மாறும் யசோதா மருத்துவமனைக்கு அழைத்து அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கு யசோதாவுக்கு குழந்தை பிறக்கும் வரை அங்கேயே இருக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தப் படுகிறார். ஆனால் ஒவ்வொரு நாளும் அந்த இடத்தில் சட்ட விரோதமாக பணம் சம்பாதிக்கும் நோக்கில் வாடகைத்தாயாக வரும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக போராடும் சக்தியாக உருவெடுக்கும் சமந்தா அங்கிருத்து தப்பித்தாரா? மற்ற பெண்களை காப்பாற்றினாரா? என்பது தான் யசோதா படத்தின் கதை.

பரபரப்புடன் பார்க்கலாம்[3/5]

 

 

‘’மிரள்’’ விமர்சனம்  (Cinema Tamil Movie 'MIRAL ' Review)

எம் சக்திவேல் இயக்கத்தில் பரத், வாணி போஜன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். தில்லி பாபு தயாரிக்க, பிரசாத் எஸ் என் இசையமைத்துள்ளார்.

ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் கே எஸ் ரவிக்குமார், மீராகிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி (சீரியல் நடிகை) என பலர் இணைந்து நடித்துள்ளனர்.

தன்னையும் கணவரையும் மர்ம நபர் கொள்வதுபோல் கனவுகண்ட வாணி போஜனுக்கு அவர்களை சுற்றி நடக்கும் சில சம்பவங்கள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.எனவே குலதெய்வம் வழிபாட்டிற்காக சொந்த ஊர் சென்று திரும்புகையில்  ஒரு காட்டில் மாட்டிக் கொள்கின்றனர்.  அவர்கள் மூவரையும் வாணிபோஜன் கனவில்  வந்த மர்ம நபர் கொல்ல முயற்சிக்கிறார். அது யார்? எதற்காக  கொல்ல நினைக்கிறார்? அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதே கதை.

படம் சிலரை கவரலாம், சிலரை கடுப்பாக்கலாம்.[3/5]

 

‘’ப்ரின்ஸ்’’ விமர்சனம்  (Cinema Tamil Movie 'PRINCE ' Review)

அனுதீப் கே.வி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், பிரேம்ஜி என தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் நகைச்சுவை & காதல் திரைப்படம். சோனாலி நரங், சுரேஷ் பாபு மற்றும் புஸ்குர் ராம் மோகன் ராவ் இணைந்து தயாரிக்க, தமன் எஸ் இசையமைத்துள்ளார்.

பள்ளி ஆசிரியர் அன்பரசனுக்கும் (சிவகார்த்திகேயன்), அதே பள்ளியின் ஆங்கில ஆசிரியை, பிரிட்டீஷ் பெண் ஜெசிகாவுக்கும் (மரியா) காதல். அன்பரசனின் தந்தை உலகநாதனுக்கு (சத்யராஜ்) பிரிட்டீஷ் என்றால் ஆகவே ஆகாது. ஜெசிகாவின் தந்தைக்கு இந்தியன் என்றாலே ஆகாது. இவர்கள் மோதலை மீறி அன்பு - ஜெசிகா காதல் எப்படி ஜெயிக்கிறது என்பது படம்.

குடும்ப ரசிகர்களுக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ள திரைக்கதை (3/5)

தொகுப்பு:செ.மனுவேந்தன்

 

 

 

 

எம்மை நோக்கி வரும் புதுமைகள்

 அறிவியல் /விஞ்ஞானம் 

- விண்வெளியில் அரிசியை அறுவடை செய்த சீனா

விண்வெளியின் சுற்று வட்ட பாதையில் நிரந்தர விண்வெளி நிலையம் ஒன்றை அமைக்கும் திட்டத்துடன் சீனா பணியாற்றி வருகிறது. இந்நிலையில், கட்டுமான பணி நிறைவடையாத சீன விண்வெளி நிலையத்தில், பூஜ்ய புவியீர்ப்பு விசை கொண்ட வென்சியான் என்ற ஆய்வகத்தில் விதைகளை கொண்டு நெற்பயிர்களை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.

அரிசி விதையானது 30 செ.மீ. உயரத்திற்கு வளர்ந்து விஞ்ஞானிகளை ஆச்சரியமடைய செய்துள்ளது. விண்வெளியில் கதிரியக்கங்கள் அதிக அளவில் இருக்கும். இந்த சூழலில், தாவரங்கள் எப்படி நடந்து கொள்கின்றன என்பது பற்றி புரிந்து கொள்வதற்காக சீன விஞ்ஞானிகள் வாழ்க்கை அறிவியல் பரிசோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

விண்வெளியில் தாவர விதைகள் பரிசோதனையில் சீனா ஈடுபடுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு ஜூலையில், விண்வெளியில் இருந்து திருப்பி கொண்டு வந்த விதைகளை வைத்து முதல் தொகுதி அரிசியை அறுவடை செய்தது. சொர்க்கத்தில் இருந்து வந்த அரிசி என பெயரிடப்பட்ட இந்த வகை அரிசிக்கான 40 கிராம் விதைகள், 7.6 லட்சம் கி.மீ. தொலைவுக்கு நிலவுக்கு கொண்டு செல்லப்பட்டு பின்பு பூமிக்கு திரும்பி கொண்டு வரப்பட்டது. அதிக கதிரியக்கங்கள், புவியீர்ப்பு விசையற்ற சூழல் போன்ற சுற்றுச்சூழலில் விண்வெளியில் சீன விஞ்ஞானிகள் அரிசியை உற்பத்தி செய்து இருப்பது விஞ்ஞான வளர்ச்சியின் அடுத்த நிலையாக உற்று நோக்கப்படுகிறது.

 

-தொங்கும் காந்த ரயில்

தெற்கு சீனாவில், ஸ்கை டிரெய்ன் என்ற தொங்கு ரயில் திட்டம் தற்போது வெள்ளோட்டத்தில் இருக்கிறது. இது காந்த ரயில் வகையை சேர்ந்தது, இந்த இரண்டுமே புதிதல்ல. ஏற்கனவே இருக்கும் தொழில்நுட்பங்கள் தான்.

ஆனால், ஸ்கை டிரெய்னில் பயன்படுத்தப்படும் காந்தம், மின் காந்தம் அல்ல. நிரந்தர காந்தத்தையே இதில் பயன்படுத்தியுள்ளனர் சீன ஆராய்ச்சியாளர்கள். இதில் உள்ள மிகப் பெரிய சாதகம், மேலே இருக்கும் தண்டவாளத்திற்கு மின்சாரம் தேவைஇல்லை என்பது தான்.

நிரந்தர காந்தத்திற்கான அரிய தாதுக்கள் சீனாவில் மலிவு. ஜியாங்சி மாநிலத்திலுள்ள ஜிங்குவோ நகரில், தொங்கு ரயில் சோதனை அண்மையில் நடந்தது. நிரந்தர காந்தத்தின் மேல் கொக்கி போன்ற அமைப்பில் சில ரயில் பெட்டிகள் தொங்கியபடி பயணிக்கின்றன.

ஆனால், காந்த துருவங்கள் விலக்கிக்கொள்வதால் பெட்டியின் கொக்கி, மேலே உள்ள காந்தத் தடத்தில் படாமல் நகரும். இதனால் வண்டி சத்தமில்லாமல், தேய்மானமில்லாமல் செல்லும்.

 

-சொல் பேச்சைக் கேட்கும் ரோபோக்கள்

மனிதர்களிடையே வேலை பார்க்கும் ரோபோக்களுக்கு, மனிதர்கள் சொல்வது புரிய வேண்டும். இதற்கென கூகுளின் மென்பொருளாளர்கள் அண்மையில் செயற்கை நுண்ணறிவு மொழியான 'பாம்-சேகேன்' என்ற மென்பொருளின் அடிப்படையில் ஒரு மொழி வடிவத்தை உருவாக்கியுள்ளனர்.

 

இந்த மொழியை, கூகுளின் தாய் அமைப்பான ஆல்பபெட்டின் ஒரு பிரிவான 'எவெரிடே ரோபோட்ஸ்' தயாரித்துள்ள ரோபோக்களுக்கு பயன்படும். எவெரிடே ரோபோட்ஸ் பிரிவு உருவாக்கியுள்ள 30 ரோபோக்கள், கூகுளின் மவுன்டெய்ன் வியூ அலுவலகத்தில் தற்போது வலம் வருகின்றன. அங்கு அவை கூப்பிட்ட குரலுக்கு வந்து, சொல்கிற வேலையை செய்யப் பழகி வருகின்றன.

 

கோப்பை பானங்களை எடுத்து வந்து கொடுப்பது, சிந்திய மேசையை துடைப்பது போன்று 100க்கும் மேற்பட்ட செய்திறன்கலை இந்த ரோபோக்கள் கற்றுள்ளன. அதேபோல கூகுள் பணியாளர்கள் இயல்பாக பேசும் மொழியை அந்த ரோபோக்கள் புரிந்துகொள்கின்றன.

பணியாளர்கள் சொல்வதைக் கேட்டு, 84 சதவீத தருணங்களில் சரியான பதிலை அந்த ரோபோக்கள் தந்துள்ளன. அதேபோல, பணியாளர்கள் இட்ட கட்டளைகளில் 74 சதவீத கட்டளைகளுக்கு சொன்னதை சரியாக செய்துள்ளன.

 

-சந்திரன் பிறந்தது எப்படி?

நிலாவில் ஹீலியமும், நியானும் உண்டு. இது எப்படி அங்கே வந்தது? சுவிட்சர்லாந்தின், பெடரல் தொழில்நுட்ப நிலையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், இதற்கு விடை கண்டறிந்துள்ளனர். பூமியின் மீது வேறு ஒரு பெரிய விண் பொருள் மோதியதில்தான் நிலாவே தனியாகப் பிரிந்து உருவாகிஇருக்கவேண்டும் என்கின்றனர் சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள். . பூமியின் மேற்பரப்பிலிருந்துதான் நிலாவுக்கு ஹீலியமும் நியானும் போயிருக்கின்றன என அவர்கள் கூறுகின்றனர்.

 

-மீண்டும் பார்வை தரும் மருத்துவம்

நோய் அல்லது விபத்தால் விழித்திரை பாதிக்கப்பட்டோருக்கு ஒரு ஆறுதலான சேதி. 'நேச்சர் பயோடெக்னாலஜி' இதழில் வெளிவந்துள்ள ஒரு ஆய்வின்படி, பன்றியிலிருந்து சேகரிக்கப்பட்ட கொலாஜென்களால் உருவாக்கப்பட்ட விழித்திரை மூலம், இழந்த பார்வையை மீண்டும் பெற முடியும். இந்த ஆய்வை செய்த விஞ்ஞானிகள், 20 மனித நோயாளிகளுக்கு, ஆய்வகத்தில் உருவாக்கிய விழித்திரையை பொருத்தியதில், அவர்களுக்கு பார்வை மீண்டும் கிடைத்துள்ளது.

 

இந்த ஆய்வு இன்னும் நிறைவடையவில்லை. என்றாலும், உலகெங்கும் ஆண்டுக்கு பத்து லட்சம் பேர் விழித்திரை பாதிக்கப்படும் நிலையில், அவர்களுக்கு இந்த ஆய்வு நம்பிக்கையை விதைத்துள்ளது. மேலும், பிறர் உடலிலிருந்து எடுத்து பொருத்தப்படும் உறுப்புகளை நோயாளியின் உடல் எதிர்க்கும்.

 

இதைத் தடுக்க, விழித்திரை பொருத்தப்பட்டோர், ஆண்டுக் கணக்கில் மருந்துகள் சாப்பிட வேண்டும். ஆனால், பன்றி கொலாஜனில் உருவாக்கப்பட்ட விழித்திரையை உடல் சில வாரங்களில் ஏற்றுக்கொள்வதாக, 'நேச்சர் பயோடெக்னாலஜி' இதழ் தெரிவித்துள்ளது.

தொகுப்பு:செ.மனுவேந்தன்