அறிவியல்
விஞ்ஞானம்
தானோட்டி லாரிகள் தயார்!
ஓட்டுனர் இல்லை, ஓட்டுனர் அறையும் இல்லை. இதோ, அமெரிக்காவில்
தானோட்டி லாரிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது. சுவீடனைச் சேர்ந்த எய்ன்ரைட் நிறுவனம்
2017, டி-பாட் டிரக்
என்ற லாரியை ஓட்டுனர் இன்றி வெற்றிகரமாக சோதித்தது.
அதையடுத்து நடந்த தொடர் ஆராய்ச்சிகளுக்குப் பின், டி-பாட் லாரிகளை
அண்மையில் அமெரிக்காவில் அறிமுகம் செய்ய விண்ணப்பித்தது எய்ன்ரைட். ஏற்கனவே, அமெரிக்காவின்
டெஸ்லா, 'செமி' என்ற லாரியை
சோதித்து வருகிறது.
டி-பாட் லாரியில், 'லிடார்' முதல் கேமராக்கள் வரை பல நவீன கருவிகள் உள்ளன.
என்றாலும், இந்த வண்டியை, தொலைவிலிருந்து
மனித ஓட்டுனர் கண்காணிப்பார் என எய்ன்ரைட் தெரிவித்துள்ளது. அமெரிக்க போக்குவரத்து
துறை அனுமதி கிடைத்ததற்கு காரணம் இதுதான். எனவே, தொழில்நுட்பப்
புரட்சித் தலைவர் எலான் மஸ்க் சற்று நிம்மதி பெருமூச்சு விடலாம். மஸ்கின்லாரி
முழுமையான தானோட்டி தொழில்நுட்பத்தால் இயங்கும்.
வலி நீக்கும் பட்டை
வலி ஏற்படுவதை தடுக்க, ஒரு சிறிய பட்டையை, அமெரிக்காவின் நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழக
ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துஉள்ளனர்.
எலாஸ்டோமர்களால் ஆன இப்பட்டை, வலி உணர்வை மூளைக்குக் கடத்தும் நரம்பைச்
சுற்றி வைக்கப்படும். உடலுக்கு வெளியே இப்பட்டையுடன் இணைந்துள்ள பம்ப், ஒரு திரவத்தையும், வாயுவையும்
செலுத்தும்.இதனால் குளிர்ச்சி உருவாக, நரம்பு மறத்து, வலி நீங்கும்.
இப்பட்டை தற்காலிக வலிகளை போக்க உதவும் என்கின்றனர், நார்த் வெஸ்டர்ன்
விஞ்ஞானிகள்.
காற்று மாசை உறி்ஞ்சும்
பாறாங்கல் பொடி!
விவசாய நிலங்களை, கார்பன் டையாக்சைடினை உறிஞ்சும் களங்களாக மாற்றலாம்!
இங்கிலாந்தின் ஷெப்பீல்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுப்படி, பாறைகளை பொடியாக்கி, விளை நிலங்களின் மீது துாவுவது, நல்ல தொடர் விளைவுகளை ஏற்படுத்தும்.
காற்றிலுள்ள கார்பன்டையாக்சைடு தோய்ந்த மழை
நீர், பாறைப் பொடி
கலந்த மண் மீது விழும்போது, வேதி வினை நிகழும். இதனால் மண் துகள்கள் நாள்படக் கரைந்து
பைகார்பனேட்டாக மாறும். பைகார்பனேட் கலந்த மண் மிக வேகமாக காற்றிலுள்ள கார்பன்டையாக்சைடை
உறிஞ்சிக்கொள்ளும். மேலும், இது விளை நில மண்ணில் சத்துக்களை அதிகரிக்கும்.
விளைநிலங்களிலிருந்து, மழை நீர் கிளம்பி, நதியில் சேர்ந்து, இறுதியில் கடலில் கலக்கும்போது, அத்துடன் ஏராளமான கார்பன்டையாக்சைடும் செல்லும். இது கடலில்
அதிகரித்து வரும் அமிலத் தன்மையை கணிசமாகக் குறைக்கும்.பாறைகளை பொடியாக்கி விளை
நிலத்தில் உரம் போலப் போடுவதை, அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் கடைபிடித்தாலே
பல்லாயிரம் டன் கார்பன்டையாக்சைடினை காற்றிலிருந்து அகற்ற முடியும் என ஷெப்பீல்ட்
பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஒலியால் இயங்கும் சில்லு!
முதலில் எலக்ட்ரானால் இயங்கும் கணினி சில்லுகள்
வந்தன. அடுத்து, ஒளியால் இயங்கும் அதிவேக போட்டோனிக் சில்லுகள், ஆய்வுக்கூடத்தைவிட்டு வெளியேறத் தயாராகி வருகின்றன.
இந்த நிலையில், அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒலியை
வைத்து சில்லுகளை தயாரிக்க முடியும் என்பதை சோதனை அளவில் செய்து காட்டியுள்ளனர்.
அவர்களது கருத்துப்படி, ஒலியால் இயங்கும் சில்லில், தகவல்களை பதியவும், பரிமாறவும், அதிவேகமாக அலசவும் முடியும்.
ஒலிச் சில்லில், 'லித்தியம் நியோபேட்' என்ற வேதிப் பொருள் வாயிலாக ஒலியைக் கட்டுப்படுத்தும்
அமைப்பை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். லித்தியம் நியோபேட் மீது மின்சாரம்
பாயும்போது, அது நெகிழ்வுத் தன்மை அடைந்து, ஒலி அலையை உண்டாக்குகிறது. மின்சாரத்தின் அளவை மாற்றுவதன்
மூலம், லித்தியம்
நியோபேட் உருவாக்கும் ஒலி அலையை மாற்ற முடியும்.
இந்த ஒலி அலை மூலம் தகவல்கள் ஒலியின் வேகத்தில்
கடத்த முடியும். ஒலி அலைகளும் ஒன்றை ஒன்று பாதிக்காமல் பயணிக்கக்கூடியவை. ஒலி
அலைகளை நியோபேட் வாயிலாக கட்டுப்படுத்த முடியும். எனவே, ஒலித் சில்லுகளை முழுவீச்சில் தயாரிக்க, ஹார்வர்டு விஞ்ஞானிகள் தயார்.
தொகுப்பு:செ.மனுவேந்தன்
0 comments:
Post a Comment