அறிவியல்
நிலாவில் அணு மின்சாரம்?
அமெரிக்கா மீண்டும் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பத் தயாராகிறது. அதுமட்டுமல்ல, சந்திரனில் ஆய்வு மையங்களை கட்டவும் திட்டமிட்டுள்ளது. அதற்கு சூரிய மின்சாரம் மட்டும் போதாது. எனவே, நிலாவில் அணு மின் நிலையத்தை அமைக்கஉள்ளது.
அண்மையில் அமெரிக்க விண்வெளி அமைப்பான 'நாசா' மூன்று அணு உலை மாதிரிகளைத் தயாரிக்கும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. வரும் 2030ல் இந்த அணு உலை மாதிரிகளில் ஒன்றை, நிலாவில் நிறுவி நாசா சோதிக்கும்.நிலாவில் நிரந்தர மனித முகாம்களை அமைக்கவும், அங்கிருந்து செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பவும் நிறைய மின்சாரம் தேவை. அதற்கு, குறைந்த எரிபொருளில், அதிக அளவு மின்சாரத்தை தயாரிக்க அணு உலை மட்டுமே தோதாக இருக்கும் என நாசா கருதுகிறது. மேலும், 40 கி.வா., மின்சாரம் தயாரிக்கும் ஒரு அணு உலை, சிறியதாகவும், எடை கம்மியாகவும் இருக்கும். இதனால், பூமியிலிருந்து நிலாவுக்கு எளிதாக அனுப்பலாம். தவிர, அணு உலைகள் 10 ஆண்டுகள் வரை இயங்கும்.எனவே தான், நிலாவுக்கும், செவ்வாய்க்கும் மனிதர்களை அனுப்ப அணு மின்சாரத்தை நாடுகிறது நாசா.
↭↭↭
சூரியக் கதிரைக் கவரும் 'லென்ஸ்'
சூரியக் கதிர்கள் எந்தக் கோணத்திலிருந்து வந்தாலும் அவற்றை, சூரிய ஒளி செல்கள் மீது குவிக்கும் லென்சை, அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
இதனால், சூரியன் உதித்தது முதல் மறையும் வரை இத்தகைய லென்ஸ் உள்ள பலகைகளால் மின்சாரத்தை அதிகமாக தயாரிக்க முடியும். கவிழ்த்தப்பட்ட பிரமிடு வடிவில் உள்ள இந்த லென்சிற்கு, 'அஜைல்' லென்ஸ் என்று பெயர். இதில் பல அடுக்கு கண்ணாடிகள் உள்ளன. மேல் அடுக்கு கண்ணாடி, சிதறலான, மங்கலான ஒளியை கீழ் அடுக்கை நோக்கி அனுப்புகிறது.அடுத்தடுத்துள்ள அடுக்குகள், உள் வரும் ஒளிக் கதிரை சிறிது சிறிதாக 'வளைத்து' கடைசியில், அக்கதிரை சக்திவாய்ந்ததாக மாற்றி குவியப்படுத்துகிறது.அப்படி குவிந்த ஒளி, மின்சாரம் தயாரிக்கும் சூரிய செல்கள் மீது படுகிறது. இதனால், அதிக மின்சாரத்தை செல்களால் உற்பத்தி செய்ய முடியும்.
↭↭↭
கறாரான களைக் கொல்லிகள்!
அறிவியல், விவசாயிகளுக்கு அளித்த பரிசு களைக்கொல்லிகள். ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக புதிய களைக்கொல்லிகள் வரவே இல்லை. இதனால், களைகள், களைக்கொல்லி மருந்துகளை எதிர்த்து வளரும் தன்மையைப் பெற்றுள்ளன. கடந்த 1980களில் 38 களைகளே விவசாயிகளின் எதிரிகளாக இருந்தன. ஆனால், 2022ல், அழிக்க முடியாத களைகளின் எண்ணிக்கை 513 ஆகியுள்ளது.
இந்நிலையில், புதிய களைக்கொல்லிகளை விரைவில் உருவாக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது, பிரிட்டனிலுள்ள எம்.ஓ.ஏ., நிறுவனம். ஒரு களைக்கொல்லி எப்படி களையின் செல்களை பாதித்து, அதன் வளர்ச்சியைத் தடுக்கிறது என்பதை, எம்.ஓ.ஏ.,வின் விஞ்ஞானிகள் கண்டறிகின்றனர். ஒரு வேதிப்பொருளுக்கு களைகளைக் கொல்லுமா என்பதை, களைகளின் செல்கள் வரை ஆராய்ந்து கண்டறிகிறது எம்.ஓ.ஏ.,வின் குழு. இதன் மூலம் புதிய களைக்கொல்லிகளை வேகமாக உருவாக்க முடியும். களைகளுக்கு முடிவுகாலம் ஆரம்பமாகிவிட்டது.
No comments:
Post a Comment