பழகத் தெரிய வேணும் – 42

பெண்களுக்கு அழகு எதற்கு?

சீனாவில் சாவோயாங் (Chaoyang) என்ற மிக ஏழ்மையான ஒரு கிராமம். அருகிலுள்ள நகரம் இருபது கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.

 

அக்கிராமத்து ஆண்கள் வேலை வாய்ப்பைத் தேடி நகர்ப்புறங்களுக்குச் சென்றுவிட, பெண்களும் குழந்தைகளும் மட்டுமே எஞ்சியிருந்தனர். பல ஆண்கள் வருடத்திற்கு ஒருமுறைதான் திரும்பி வருவார்கள்.

 

`நம் அழகைக் கண்டு ரசிக்க ஆண்கள் இல்லாத நிலையில் எதற்கு நல்ல ஆடைகளை அணிந்து, ஒப்பனையும் செய்துகொள்ள வேண்டும்?’ என்று பெண்கள் நினைக்கவில்லை. ஆனாலும், தம் புற அழகில் அசிரத்தையாக இருந்தார்கள்.

 

அவர்களுடைய ஓயாத வேலை அப்படி.

 

இஞ்சி, தர்பூசணி போன்றவைகளைப் பயிரிடுவதோடு, பன்றிகளையும் வளர்த்துவந்தார்கள். கடும்வெயிலைப் பொருட்படுத்தாது வேலை செய்துவிட்டு வந்தபின், குழந்தைகளையும் வீட்டு வேலைகளையும் கவனித்தாக வேண்டும்.

 

இந்நிலையில், தங்களுக்காகவும் நேரத்தை ஒதுக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றாமல் போனதில் அதிசயமில்லை.

 

அவ்வப்போது, நகர்ப்புறங்களில் வாழும் நாகரிகமான பெண்களுடன் தம்மை ஒப்பிட்டுக்கொண்டு, சிறுமை உணர்ச்சியுடன் காலந்தள்ளிவந்தார்கள்.

 

ஒரே ஒரு இளம்பெண்ணுக்கு மட்டும் இந்நிலையை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. அதைச் செயலாக்கினாள், பத்து ஆண்டுகளுக்குமுன்.

 

சீனாவின் தலைநகருக்குப் போய் ஒப்பனைக்கலையைக் கற்றுக்கொண்டு, அவளுடைய கிராமத்துக்கு அருகே இருந்த நகரில் ஓர் அழகுநிலையத்தைத் திறந்தாள்.

 

கடந்த பிப்ரவரி மாதம் கிராமத்திற்கு வந்தபோது, கோவிட் தொற்றுக் கட்டுப்பாட்டால் அங்கேயே தங்க நேர்ந்தது.

 

அவளுடைய நாகரிகமான ஆடையணிகளுடன் ஒப்பனையால் நேர்த்தியாக இருந்த முகமும் பிற பெண்களின் கவனத்தைத் தூண்டியது. ஒப்பனையைப்பற்றி அவளை விசாரித்தாலும், அவர்களுக்கு ஏதோ தயக்கம். அதைப் போக்க முடிவெடுத்தாள் அந்த அழகுக்கலை நிபுணர்.

 

அவளுடைய பாட்டிதான் அவளுடைய முதல் வாடிக்கையாளர்.

 

ஓய்வு, ஒழிச்சல் இல்லாத வேலையால் அங்கிருந்த பிறரைப்போலவே பாட்டியின் கைகளும் காய்த்துப்போயிருந்தன. கால்களும் வெடித்துப்போயிருந்தன. அவற்றை மிருதுவாக்க முயற்சி எடுத்தாள் பேத்தி Zhou. (இப்பெயரைத் தமிழில் எப்படி எழுதுவது? ஜௌ என்றா?)

 

பாட்டிக்கு முக ஒப்பனையும் உண்டு.

 

அந்த மாற்றத்தைக் கண்ட பிற பெண்களுக்கு ஆச்சரியத்துடன், ஆசையும் எழுந்தது: `நம்மால்கூட அழகாக மாறமுடியும் போலிருக்கிறதே!’

 

துணிந்து வந்தார்கள்

 

ஒப்பனை செய்துகொண்டதும், பண்டிகைக்காலங்களுக்கென்று வாங்கி வைத்திருந்த ஆடைகளை அணிந்து தம்மை அழகுபடுத்திக்கொண்டனர்.

 

Zhou தன் உபகரணங்களுடன் தயாராக வைத்திருந்த கண்ணாடியைக் காட்டி, அவர்களும் அழகுதான் என்ற நம்பிக்கையை ஊட்டினாள். (பல பெண்களிடம் முகம் பார்க்கும் கண்ணாடிகூட கிடையாது). அவர்களது மாற்றத்தைப் புகைப்படத்தில் எடுத்தாள்.

 

ஒரு பெண்மணிக்கு மட்டும் வீட்டில் எவ்வளவு தேடியும், நல்ல உடை எதுவும் கிடைக்கவில்லை.

 

`என் குடும்பத்திற்காகவே உழைத்து வந்ததில், என்னைப்பற்றிய சிந்தனையே எனக்கு இல்லாமல் போய்விட்டது,’ என்ற வருத்தம் எழ, `இனிமேல், எனக்காகவும் ஏதாவது செய்துகொள்ளப்போகிறேன். அழகான ஆடைகளை உடுத்தப்போகிறேன்,’ என்று தீர்மானித்தாள்.

 

இருபது பெண்களுக்கு மேற்பட்டவர்கள் அப்படி அழகாக மாறினார்கள். ஒப்பனை செய்துகொள்ள ஒவ்வொரு முறையும் ஒன்றரை மணிநேரம் செலவழிந்தாலும், அதனால் அவர்கள் மனநிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டது.

 

`இப்போது, `நாம் ஒன்றும் நகர்ப்புற மக்களைவிட தாழ்ந்தவர்கள் இல்லை என்ற தன்னம்பிக்கை பிறந்துவிட்டது,’ என்ற ஒரு பெண்மணி, எப்போதோ விழுந்திருந்த பல்லுக்கு மாற்றுப்பல் பொருத்திக்கொண்டாளாம்!

 

அலங்காரம் ஆண்களுக்காக அல்ல

 

`ஆண் மயில் தோகை விரித்து ஆடுவது பெண் மயிலை மயக்கத்தான்! அதுபோல், பெண்கள் அலங்கரித்துக்கொள்வது ஆண்களுக்காகத்தான்!’ என்பது பெரும்பாலான ஆண்களின் கருத்து.

 

`யாருக்காக இப்படி அழகாக அலங்கரித்துக்கொண்டிருக்கிறாய்?’ என்று மனைவியைப் பார்த்து ஒரு கணவன் கேட்டால், அவன் முட்டாள். பெண்களைப் புரிந்துகொள்ளத் தெரியாத, அல்லது விரும்பாத, ஆணாதிக்கவாதி.

 

இரண்டே வயதான பெண்குழந்தைகூட ஒரு புதிய ஆடையோ, வளையோ அணிந்துகொண்டவுடன் கண்ணாடியை நோக்கி ஓடும் — தன்னை அழகுபார்த்துக்கொள்ள. யாரையும் கவர வேண்டும் என்பது அக்குழந்தையின் நோக்கமல்ல. தான் அழகாக இருக்கிறோம் என்பதில் ஒரு மகிழ்ச்சி.

 

நான் அழகா இருக்கேன். இல்லே?” என்று பெருமைப்பட்டுக்கொள்ள, தன்னம்பிக்கை கூடும்.

 

பொதுவாகவே, பெண்கள் தம் மகிழ்ச்சிக்காகத்தான் அலங்கரித்துக்கொள்கிறார்கள்.

 

`கல்யாணம் ஆகிவிட்டது. இனி எதற்கு அழகு?’

 

`முப்பது வயதுக்குமேல் அலங்காரம் செய்துகொண்டால், பிறர் என்ன சொல்வார்களோ!’

 

`நிமிர்ந்து நடப்பதும், உடலழகைப் பராமரிப்பதும் விமானப் பணிப்பெண்களுக்குத்தான்!’

 

ஏதோ பயமே பெண்களை அப்படிப் பேசவைக்கிறது.

 

அத்துடன், அழகைப் பராமரிக்க அளவான உணவு, உடற்பயிற்சி என்று உடலை வருத்திக்கொள்ள வேண்டியிருக்கிறதே! (சிறு வயதில் போதிய ஆகாரம் கிடைக்காது அவதிப்பட்டவர்கள் வசதி கிடைத்ததும், அளவுக்கு அதிகமாக உண்பார்கள்).

 

தன்னம்பிக்கை வளர உணவைக் கட்டுப்படுத்து

 

நான் எந்த மருத்துவரிடம் போனாலும், `எடையைச் சற்றுக் குறைக்கலாம்,’ என்பார், நைச்சியமாக.

 

நாற்பத்து ஐந்து வயதுக்குமேல் உடற்பயிற்சி மட்டும் போதவில்லை. ஆகாரத்தையும் பாதியாகக் குறைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஐந்து வருடங்களுக்குப்பின், இன்னும் குறைத்துக்கொண்டேன். இல்லாவிட்டால், எடை ஏறிக்கொண்டே போனதை இடுப்பில் தொங்கிய சதை பறைசாற்றியது.

 

கனமான வேலை செய்யாததாலும், உடல் வளர்ச்சி குன்றியதாலும் ஒரே அளவு ஆகாரமே எடையைக் கூட்டியது.

 

`குண்டானால் என்ன!’ என்ற அலட்சியம் ஏற்படவில்லை. கால்வலி, சோம்பல், ஓயாத அசதி என்று எழுந்த வேண்டாத உபாதைகளைப் பொறுத்துப்போவதைவிட உணவுக் கட்டுப்பாடு உகந்ததாகப்பட்டது. பழங்களை நிறையச் சாப்பிட்டு, சர்க்கரையையும் வெகுவாகக் குறைத்துக்கொண்டேன்.

 

எனக்கோ, இனிப்பு வகைகள் மிகவும் பிடிக்கும். முதலில், `நான் பாவம்!’ என்ற தன்னிரக்கம் ஏற்பட்டது. ஆனால், சுறுசுறுப்பு அதிகரிப்பது போலிருக்க என் `தியாகம்’ பெரிதாகப்படவில்லை.

 

சீனக் கிராமத்துப் பெண்கள் தம் நலனைப் பெரிதாகக் கருதாது, கடமை உணர்வையே பெரிதாக மதித்ததால் அவர்களுடைய தன்னம்பிக்கை எப்படிப் பாதிக்கப்பட்டுவிட்டது, பார்த்தீர்களா?

 

தனிப்பட்ட காரணங்களுக்காக நான் என் உடலைப் பராமரித்ததால் பிற பெண்களின் பொறாமைக்கு ஆளாக நேரிடும் என்று நினைத்ததில்லை.

 

கதை:

 

மேற்பயிற்சிக்காக என்னைத் தலைநகரிலிருந்து மலேசியாவின் வடபகுதியிலிருந்த ஊருக்கு அனுப்பியிருந்தார்கள். எப்போதும்போல் இல்லாவிட்டால், புது இடத்தில் வெறுமை, சலிப்பு என்று ஏதாவது வரும் என்று தயாராகப் போயிருந்தேன்.

 

மற்ற ஊர்களிலிருந்து வந்தவர்கள் என்னைப்பற்றி நிறைய வம்பு பேசினார்கள். உதட்டுச்சாயமும் காலணிகளும்கூட என் புடவை வண்ணத்தில் இருந்தது கண்டு அவர்களுக்கு ஆச்சரியம். மருதோன்றி உபயத்தில், தலைமயிர் சிவப்பு நிறத்தில் மின்னியது!

 

நாற்பது வயதுக்கு மேற்பட்ட அந்த மலாய்பெண்கள் மத போதனைக்கான பாடத்தைக் கற்பிக்கிறவர்கள். கை, கால் இரண்டிற்கும் உறை அணிந்திருப்பார்கள். தலைமயிரும் வெளியில் தெரியாதபடி `தூடோங்’கால் (TUDUNG) மறைத்திருப்பார்கள்.

 

வெளித்தோற்றத்தில் நான் வெகுவாக மாறுபட்டிருந்ததால்  அவநம்பிக்கை.

 

அவர்களில் ஒருத்தி வயிற்றுவலியால் துடிக்க, “என்னால் உதவ முடியும். செய்யட்டுமா?” என்று கேட்டுவிட்டு, அவளுடைய விரல்களைப் பிடித்து அழுத்தி, சிகிச்சை அளித்தேன். சில நிமிடங்களில் குணமாகியது.

 

பிறகு, ஒருத்தி ரகசியமாகத் தெரிவித்தாள்: “நீ அழகாக அலங்கரித்துக்கொள்வது ஆண்களைக் கவரத்தான் என்று நாங்கள் நினைத்துக்கொண்டிருந்தோம்!”

 

நான் தலையில் அடித்துக்கொள்ளாத குறை.

 

அதன்பின், என்னைக் கண்டால் முகமலர்ந்து, கட்டி அணைத்துக்கொள்வார்கள்!

 

உதவி செய்ததில் வித்தியாசங்கள் மறைந்துபோய்விட்டன!

:-நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.

தொடரும்.... 
👉அடுத்தப்பகுதி வாசிக்க... அழுத்துக
👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக 

0 comments:

Post a Comment