மகாவம்சத்தில் புதைந்துள்ள….(பகுதி 15)

உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்

 


துட்ட கைமுனு, எல்லாளன் கதைக்கு வந்தால், தீபவம்சத்தில், எல்லாளன், சோழ அரசன் என்றோ, அல்லது வெளியில் இருந்து வந்தவன் என்றோ ஒரு குறிப்பும் இல்லை, உதாரணமாக, தீபவம்சம்  / அத்தியாயம் 18 / பிக்குணி வம்சத்தில் [Dipavamsa / XVIII. / The Bhikkhuni Lineage], 49 ,50 ,54 ஆம் பாடல்களில், எல்லார [எல்லாளன்] என்ற பெயருடைய இளவரசன், மூத்தசிவனின் மகன்களுள் இளையவனான அசேல [அசேலன்] என்ற மன்னனை கொன்று, 44 ஆண்டுகள் நீதியாக அரசாட்சி செய்தான் என்கிறது [A prince, Eḷāra by name, having killed Asela, reigned righteously forty-four years]. நாலு தீய பாதைகளான காமம், வெறுப்பு, பயம், அறியாமை போன்றவற்றை தவிர்த்து, இந்த ஒப்பிடமுடியாத அரசர் நீதியாக ஆட்சி செய்தார் என்றும் [Avoiding the four evil paths of lust, hatred, fear, and ignorance, this incomparable monarch reigned righteously], அபயன் அல்லது அபய [துட்டைகைமுனு அல்லது துட்டகாமினி] என்ற பெயரை கொண்ட, இளவரசன், முப்பத்தி இரண்டு [தமிழ்] அரசர்களை ஒன்றின் பின் ஒன்றாக கொன்று இருபத்தி நாலு ஆண்டுகள் ஆட்சி புரிந்தான் என்றும் [put thirty-two kings to death and alone continued the royal succession. This prince reigned twenty-four years] மேலும் கூறுகிறது. 

 


அதே போல, மகாவம்சம் / இருபத்தி யொன்றாவது அத்தியாயம் 'ஐந்து அரசர்கள்' பகுதியில், சோழ நாட்டிலிருந்து ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக இங்கு வந்த, உயர் குடியில் பிறந்த, தமிழன் எல்லாளன் (Ellai = border; Aalan = ruler), அசேலனத் தோற்கடித்து நாட்டைப் பிடித்து நாற்பத்து நான்கு வருடம் ஆண்டான். அவன் எதிரிகள், நண்பர்கள் என்ற பேதா பேதம் இன்றி, நீதியின் முன் எல்லோரையும் சமமாக நடத்தி வந்தான். அவனின் படுக்கை அறையில், தலைக்கு மேலாக ஒரு மணி நீண்ட கயிற்றுடன் கட்டித் தொங்கவிடப் பட்டிருந்தது. அவனிடம் நீதி கோரி வருபவர்கள் யாராயினும் அந்த மணியை அடிக்கலாம். அரசனுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் மட்டுமே இருந்தனர்.

ஒருநாள் ஒரு தேரில் திசாவாவியை நோக்கி எல்லாளனின் மகன் பயணப்பட்டபோது, வழியில் பசுவுடன் படுத்திருந்த கன்றின் கழுத்தின் மேல் அறியாமல் தேர்ச் சில் ஏறியதால், கன்று அவ்விடத்தில் இறந்து விட்டது. துக்கம் தாளாது பசு அரண் மனைக்கு வந்து மணியை அடித்தது. தன் மகனுடைய கழுத்தின் மீது தேரை ஓட்டி, அரசன், தலையைத் துண்டிக்கச் செய்தான்.

பனை மரத்தில் அமர்ந்திருந்த பறவைக் குஞ்சு ஒன்றைப் பாம்பு ஒன்று விழுங்கி விட்டது. தாய்ப் பறவை ஓடி வந்து மணியை அடித்தது. அரசன் அந்தப் பாம்பைத் தன் முன்பு கொண்டு வரச்செய்தான். அதன் வயிற்றைக் கீறிக் குஞ்சை வெளியே எடுத்த பின்பு, அதை மரத்தின் மீது தொங்க விட்டான்.

ஒரு வயோதிப மாது வெயிலில் அரிசியைக் காயப் போட்டிருந்த போது, பருவம் தப்பிப் பொழிந்த மழையால் அரிசி முழுவதும் பழுதடைந்து போனது. அவள் எல்லாளனிடம் முறையிட்ட போது, அவன் வருணனிடம் வாரத்திற் கொருதடவை இரவில் மட்டும் மழை பொழிய வேண்டுதல் விடுத்ததாக மகாவம்சம் வருணிக்கிறது.



இந்த அரசன் தவறான நம்பிக்கைகளை [சிவ வழிபாடு]  கைவிடாத போதிலும், தீய வழியில் நடக்கும் குற்றத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டவனாக இருந்ததால் தான் இத்தகைய அற்புத சக்திகளை பெற முடிந்தது.

ஒரு முறை புத்த சங்கத்தினரை அழைப்பதற்காக எல்லாளன் தேரிலேறி சேத்தியகிரி நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, அறியாமல், தேரின் அச்சு தாதுகோபமொன்றில் [அல்லது தூபி ஒன்றில்] பட்டு தாதுகோபத்திற்குச் சேதத்தை ஏற்படுத்தியது. மன்னன் தேரினின்றும் கீழே குதித்து, தனது தலையை உடனடியாகச் சீவி விடுமாறு, அமைச்சர்களிடம் கூறினான் என்கிறது..

 

அதே போல மகாவம்சத்தில், 'துஷ்ட காமனியின் வெற்றி' என்ற அத்தியாயத்தில் அவனின் தமிழர்களுக்கு எதிரான போர்களைப் பற்றி பல விபரங்களுடன் மிக விரிவாக சொல்லப்பட்டுள்ளது. உதாரணமாக, "பிறகு நதியைக் கடந்து வந்த அரசன் துட்டகாமினி, ஒரே நாளில் ஏழு தமிழர்களை [அரசர்களை] வெற்றி கொண்டு அமைதியை நிலை நாட்டினான். போரில் கொள்ளையடித்த பொருள்களைத் தனது படை வீரர்களுக்குக் கொடுத்தான் ...   மேலும் அவன் தன்னுடைய ஆதிக்கத்தை அதிகரித்துக் கொள்வதற்காக இச் சிரமத்தை தான் மேற் கொள்ளவில்லை என்றும், சம்புத்தருடைய [Sambuddha] மார்க்கத்தைப் பரப்பவே அப்படி செய்தேன் என்றும் .. தான் எப்போதும் அதற்காக பாடுபடுவேன் என்றும் கூறினான். தமிழரின் மற்றும் ஒரு நகரமான, விஜித நகரத்தில் [Vijitanagara], மூன்று அகழ்களும், உயரமான கோட்டைச் சுவரும் இருந்தன என்றும், எதிரிகளால் அழிக்கமுடியாத விதத்தில் பலமான இரும்புக் கதவுகள் வாசல்களுக்குப் பாதுகாப்பாக இருந்தன என்றும் ... கோட்டை மதிலின் மீது நின்று கொண்டிருந்த தமிழர்கள் எல்லாவிதமான ஆயுதங்களையும் எறிந்தனர் என்றும் ,..   பழுக்கக் காய்ச்சிய இரும்புக் குண்டுகளையும், உருக்கிய உலோகக் குழம்புகளையும் எறிந்தனர் என்றும் ....  அரசன் நான்கு மாத காலத்தில் விஜித நகரத்தை அழித்து அங்கிருந்து கிரிலகக்துக்குச் [Girilaka] சென்று கிரியன் என்ற தமிழனைக் [Damila Giriya] கொன்றான் என்றும்  ....  இறுதியில் எல்லாளனையும் நேருக்கு நேர் சண்டையில் கொன்றான் என்றும் மகாவம்சம் கூறுகிறது.

 

போர் முடிந்ததும், நகரில் முரசறைந்து ஒரு ஜோசனை சுற்றளவுக்குள் இருந்த மக்கள் எல்லோரையும் ஒன்று  திரட்டி, அரசன் துஷ்ட காமனி, எல்லாளனின் இறுதிச் சடங்குகளை நடத்தினான். அவன் போரிட்டு விழுந்த இடத்திலேயே அவனுடைய உடலை எரித்து, அந்த இடத்தில் ஒரு நினைவுச் சின்னமும் எழுப்பி அதற்கு வழிபாடுகள் நடத்தச் செய்தான். இன்றும் கூட [5ஆம் 6ஆம் நூறாண்டில்] இலங்கையின் அரசர்கள் அந்த இடத்தைக் கடந்து செல்லும் போது, இசையை நிறுத்தி விட்டு மெளனமாக வணங்கி விட்டுப் போவார்கள். இவ்வாறு முப்பத்திரண்டு தமிழ் மன்னர்களை வெற்றிகொண்டு துஷ்ட காமனி  இலங்கையை ஒராட்சியின் கீழ் ஒன்று படுத்தினான் என்கிறது [In the city he caused the drum to be beaten, and when he had summoned the people from a yojana around he celebrated the funeral rites for king Elara. On the spot where his body had fallen he burned it with the catafalque, and there did he build a monument and ordain worship. And even to this day the princes of Lanka,  when they draw near to this place, are wont to silence their music because of this worship. When he had thus overpowered thirty-two Damila kings  DUTTHA  GAMANI ruled over Lanka in single sovereignty]. 

:-கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்

பகுதி: 16 தொடரும்அடுத்த பகுதி வாசிக்க அழுத்துக  Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள.....(பகுதி 16 ):

ஆரம்பத்திலிருந்து வாசிக்க, அழுத்துக Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள.../ பகுதி 01:

0 comments:

Post a Comment