‘’இன்னா நாற்பது’’ -/08/-உலகத்தில் கூடாதவை என்னென்ன...

 

‘’இன்னா நாற்பது’’ என்னும் நூல் ‘கபிலர்’ என்னும் புலவரால் இயற்றப்பட்டது. நாற்பத்தொரு பாடல்களைக் கொண்ட இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூற்றொகுதியுள் அடங்குவது. உலகத்தில் கூடாதவை என்னென்ன என்பது பற்றிக் கூறி நீதி உரைப்பது இந்நூல். இது கி. பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த நூலாகும். இந்நூல் இன்னிசை வெண்பாக்களால் ஆனது. இதில் நூற்று அறுபத்து நான்கு கூடாச் செயல்கள் கூறப்பட்டுள்ளன.

 

‘’இன்னா நாற்பது’’தொடர்கிறது...

 


வெண்பா:36

பொருள் இலான் வேளாண்மை காமுறுதல் இன்னா;

நெடு மாட நீள் நகர்க் கைத்து இன்மை இன்னா;

வரு மனை பார்த்திருந்து ஊண் இன்னா; இன்னா,

கெடும் இடம் கைவிடுவார் நட்பு.  

 

விளக்கம்: செல்வமில்லாதவன் பிறருக்கு உதவி செய்ய ஆசைப்படுதல் துன்பமாம். நெடிய மாடங்களையுடைய பெரிய நகரத்தில் பொருள் இன்றி இருத்தல் மிகவும் துன்பமாகும். சென்ற வீட்டில் உள்ளவரை எதிர்பார்த்து உணவு உண்ணுதல் துன்பமாம். வறுமையுள்ள இடத்தில் கை விட்டு நீங்குவாரது நட்பு துன்பத்தைத் தரும்.

 

வெண்பா:37

நறிய மலர் பெரிது நாறாமை இன்னா;

துறை அறியான் நீர் இழிந்து போகுதல் இன்னா;

அறியான் வினாப்படுதல் இன்னா; ஆங்கு இன்னா,

சிறியார் மேல் செற்றம் கொளல்.  

 

விளக்கம்: வாசனை இல்லாத நல்ல மலர் துன்பமாகும். கரையைத் தெரியாதவன் நீரில் இறங்கிச் செல்லுதல் துன்பமாம். அறியாதவன் கற்றவர்களால் வினாப்படுதல் துன்பமாம். அவ்வாறே சிறியவர்கள் மீது கோபம் கொள்ளுதல் துன்பமாம்.

 

வெண்பா:38

பிறன் மனையாள் பின் நோக்கும் பேதைமை இன்னா;

மறம் இலா மன்னர் செருப் புகுதல் இன்னா;

வெறும் புறம் வெம் புரவி ஏற்று இன்னா; இன்னா,

திறன் இலான் செய்யும் வினை.   

 

விளக்கம்: பிறன் மனைவியை விரும்பித் தொடர்வது துன்பமாம். வீரமில்லாதவன் போர்க்களத்தில் செல்லுதல் துன்பமாம். விரைந்து செல்லும் கடிவாளம் இல்லாத குதிரையின் முதுகில் ஏறுதல் துன்பமாம். செய்யத் தெரியாதவன் செய்யும் காரியம் துன்பமாம்.

 

வெண்பா:39

கொடுக்கும் பொருள் இல்லான் வள்ளன்மை இன்னா;

கடித்து அமைந்த பாக்கினுள் கல் படுதல் இன்னா;

கொடுத்து விடாமை கவிக்கு இன்னா; இன்னா,

மடுத்துழிப் பாடா விடல்.  

 

விளக்கம்: பொருள் இல்லாதவனுடைய வள்ளன்மை துன்பமாம். கடிய பாக்கினுள் கல்படுதல் துன்பமாம். புலவனுக்குப் பரிசு கொடுக்காமை துன்பமாம். தடைப்பட்ட இடத்தில் பாடல் பாடாமல் விடுதல் துன்பமாம்.

 

வெண்பா:40

அடக்கம் உடையவன் மீளிமை இன்னா;

தொடக்கம் இலாதவன் தற்செருக்கு இன்னா;

அடைக்கலம் வவ்வுதல் இன்னா; ஆங்கு இன்னா

அடக்க, அடங்காதார் சொல்.   

 

விளக்கம்: அடக்கமுடையவனின் செருக்கு துன்பமாம். முயற்சி இல்லாதவன் தன்னைத்தானே புகழ்தல் துன்பமாம். பிறர் அடைக்கலமாக வைத்தப் பொருளை கவர்ந்து கொள்ளுதல் துன்பமாம். அவ்வாறே அறிவுடையோர்கள் அடக்கமில்லாதவனுக்குக் கூறும் சொல் துன்பமாம்.

 

இன்னா நாற்பது முற்றும்.

 

தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்:

இன்னா நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இன்னா, துன்பமாம், பொருள், இலக்கியங்கள், நாற்பது, பதினெண், கீழ்க்கணக்கு, கொள்ளுதல், அவ்வாறே, பிறன், செல்லுதல், பாக்கினுள், சொல், தெரியாதவன், வள்ளன்மை, செய்யும், மலர், நட்பு, இலான், சங்க, துன்பமாகும், இடத்தில், ஆங்கு, வினாப்படுதல், அறியான், இல்லாத

No comments:

Post a Comment