‘’இன்னா நாற்பது’’ -/07/-உலகத்தில் கூடாதவை என்னென்ன...


‘’இன்னா நாற்பது’’ என்னும் நூல்கபிலர்என்னும் புலவரால் இயற்றப்பட்டது. நாற்பத்தொரு பாடல்களைக் கொண்ட இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூற்றொகுதியுள் அடங்குவது. உலகத்தில் கூடாதவை என்னென்ன என்பது பற்றிக் கூறி நீதி உரைப்பது இந்நூல். இது கி. பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த நூலாகும். இந்நூல் இன்னிசை வெண்பாக்களால் ஆனது. இதில் நூற்று அறுபத்து நான்கு கூடாச் செயல்கள் கூறப்பட்டுள்ளன.

‘’இன்னா நாற்பது’’தொடர்கிறது...



வெண்பா:31

பண் அமையா யாழின்கீழ்ப் பாடல் பெரிது இன்னா;

எண் அறியா மாந்தர் ஒழுக்கு நாள் கூற்று இன்னா;

மண் இல் முழவின் ஒலி இன்னா; ஆங்கு இன்னா,

தண்மை இலாளர் பகை. 

 

விளக்கம்: இசைக்க முடியாத யாழில் பாடுதல் துன்பமாம். சோதிடம் தெரியாதவர்கள் முகூர்த்தம் பார்த்தல் துன்பமாம். தாளம் இல்லாத மத்தளத்தின் ஓசை துன்பமாம். அவ்வாறே தன்மை இல்லாதவரது பகையானது துன்பமாம்.

 

வெண்பா:32

தன்னைத் தான் போற்றாது ஒழுகுதல் நன்கு இன்னா;

முன்னை உரையார் புறமொழிக் கூற்று இன்னா;

நன்மை இலாளர் தொடர்பு இன்னா; ஆங்கு இன்னா,

தொன்மை உடையார் கெடல்.

 

விளக்கம்: தன்னைத்தானே காத்துக்கொள்ளாது இருத்தல் மிகவும் துன்பமாம். முன்னே சொல்லாமல் பின்னால் பேசுபவர்களின் சொல் மிகவும் துன்பமாம். நல்ல குணமில்லாதவரது நட்பு துன்பமாம். அவ்வாறே பழைமையுடையவர் கெடுதல் துன்பமாம்.

 

வெண்பா:33

கள் உண்பான் கூறும் கருமப் பொருள் இன்னா;

முள்ளுடைக் காட்டில் நடத்தல் நனி இன்னா;

வெள்ளம் படு மாக் கொலை இன்னா; ஆங்கு இன்னா,

கள்ள மனத்தார் தொடர்பு.       

 

விளக்கம்: கள் குடிப்பவன் சொல்கின்ற காரியத்தின் பயன் துன்பமாம். முட்களையுடைய காட்டில் நடத்தல் மிகவும் துன்பமாம். வெள்ளத்தில் அகப்பட்ட விலங்கு கொலையுண்டல் துன்பமாம். அவ்வாறே வஞ்ச மனத்தினை யுடையவரது தொடர்பு மிகவும் துன்பமாம்.

 

வெண்பா:34

ஒழுக்கம் இலாளர்க்கு உறவு உரைத்தல் இன்னா;

விழுத்தகு நூலும் விழையாதார்க்கு இன்னா;

இழித்த தொழிலவர் நட்பு இன்னா; இன்னா,

கழிப்பு வாய் மண்டிலம் கொட்பு.   

 

விளக்கம்: நல்ல ஒழுக்கம் இல்லாதவரிடத்தே தமக்கு உறவு உள்ளதாகக் கூறுதல் துன்பமாம். சீரிய நூலினை விரும்பிக் கல்லாதார்க்குத் துன்பமாம். இழிவான தொழில் செய்பவனின் தொடர்பு துன்பமாம். நல்லவரால் விலக்கப்பட்ட இடத்தில் இருத்தல் துன்பமாம்.

 

வெண்பா:35

எழிலி உறை நீங்கின் ஈண்டையார்க்கு இன்னா;

குழல் இல் இயமரத்து ஓசை நற்கு இன்னா;

குழவிகள் உற்ற பிணி இன்னா; இன்னா,

அழகுடையான் பேதை எனல்.

 

விளக்கம்: மேகம் மழையைத் தராவிட்டால் துன்பமாம். புல்லாங்குழலைப் போல இனிய மரத்தினது ஓசை துன்பமாம். (மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று உராயும் போது தீப்பற்றிக்கொள்ளும்) குழந்தைகள் அடைந்த நோய் மிகவும் துன்பமாகும். அறிவில்லாதவன் அழகாயிருத்தல் மிகவும் துன்பமாம்.

 

‘’இன்னா நாற்பது’’தொடரும்

 

தேடல் தொடர்பான தகவல்கள்: /இன்னா நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இன்னா, துன்பமாம், மிகவும், இலக்கியங்கள், தொடர்பு, பதினெண், நாற்பது, அவ்வாறே, ஆங்கு, கீழ்க்கணக்கு, காட்டில், நடத்தல், ஒழுக்கம், உறவு, நட்பு, நல்ல, சங்க, இருத்தல், இலாளர், கூற்று

No comments:

Post a Comment