‘’இன்னா நாற்பது’’ என்னும் நூல் ‘கபிலர்’
என்னும் புலவரால் இயற்றப்பட்டது. நாற்பத்தொரு பாடல்களைக் கொண்ட இது பதினெண்
கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூற்றொகுதியுள்
அடங்குவது. உலகத்தில் கூடாதவை என்னென்ன என்பது பற்றிக் கூறி நீதி உரைப்பது இந்நூல்.
இது கி. பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த நூலாகும். இந்நூல் இன்னிசை
வெண்பாக்களால் ஆனது. இதில் நூற்று அறுபத்து நான்கு கூடாச் செயல்கள்
கூறப்பட்டுள்ளன.
‘’இன்னா நாற்பது’’தொடர்கிறது...
வெண்பா:26
பெரியாரோடு யாத்த தொடர் விடுதல் இன்னா;
'அரியவை செய்தும்!' என உரைத்தல் இன்னா;
பரியார்க்குத் தாம் உற்ற கூற்று இன்னா; இன்னா,
பெரியார்க்குத் தீய செயல்.
விளக்கம்:பெரியவருடன் கொண்ட நட்பினை விடுதல் துன்பமாம். செய்தற்கரிய காரியங்களைச் செய்வோம் என்று கூறிக் கொண்டிருப்பது துன்பமாம். அன்பு கொள்ளாதவர்களுக்குத் தாம் அடைந்த துன்பங்களைச் சொல்வது துன்பமாகும். பெருமையுடையவர்களுக்குத் தீயவற்றைச் செய்தல் துன்பமாகும்.
வெண்பா:27
பெருமை உடையாரைப் பீடு அழித்தல் இன்னா;
கிழமை உடையாரைக் கீழ்ந்திடுதல் இன்னா;
வளமை இலாளர் வனப்பு இன்னா; இன்னா,
இளமையுள் மூப்புப் புகல்.
விளக்கம்:பெருமையுடையோரை இகழ்ந்து கூறுதல் துன்பம். உரிமையுடையோரை நீக்கி விடுதல் துன்பமாம். செல்வம் இல்லாதவருடைய அழகு துன்பமாம். இளமைப்பருவத்தில் முதுமைக்குரிய தன்மைகள் புகல் துன்பமாகும்.
வெண்பா:28
கல்லாதான் ஊரும் கலிமாப் பரிப்பு இன்னா;
வல்லாதான் சொல்லும் உரையின் பயன் இன்னா;
இல்லாதார் வாய்ச் சொல்லின் நயம் இன்னா; ஆங்கு இன்னா,
கல்லாதான் கோட்டி கொளல்.
விளக்கம்:குதிரையேற்றம் தெரியாதவன் குதிரையில் செல்லுதல் துன்பமாம். கல்வி இல்லாதவன் சொல்லுகின்ற சொல்லின் பொருள் துன்பமாம். பொருள் இல்லாதவர் பேசும் நயமான பேச்சு துன்பமாம். அவ்வாறே கல்வியறிவு இல்லாதவன் கற்ற அவையில் ஒன்றைக் கூறுதல் துன்பமாகும்.
வெண்பா:29
குறி அறியான் மா நாகம் ஆட்டுவித்தல் இன்னா;
தறி அறியான் கீழ் நீர்ப் பாய்ந்தாடுதல் இன்னா;
அறவு அறியா மக்கள் பெறல் இன்னா; இன்னா,
செறிவு இலான் கேட்ட மறை.
விளக்கம்:பாம்பினை அடக்கத் தெரியாதவன் பெரிய பாம்பினை ஆடச் செய்தல் துன்பமாம். உள்ளிருக்கும் ஆழத்தை அறியாமல் நீரில் பாய்ந்து விளையாடுதல் துன்பமாம். அறிய வேண்டுவனவற்றை அறியமாட்டாத பிள்ளைகளைப் பெறுதல் துன்பமாம். அடக்கமில்லாதவன் கேட்ட இனிய உரை துன்பமாம்.
வெண்பா:30
நெடு மரம் நீள் கோட்டு உயர் பாய்தல் இன்னா;
கடுஞ் சின வேழத்து எதிர் சேறல் இன்னா;
ஒடுங்கி அரவு உறையும் இல் இன்னா; இன்னா,
கடும் புலி வாழும் அதர்.
விளக்கம்:நெடிய மரத்தின் உச்சிக் கிளையிலிருந்து கீழே குதித்தல் துன்பமாம். மிக்க கோபத்தினையுடைய யானையின் எதிரே செல்லுதல் துன்பமாம். பாம்பு புற்றில் கை வைத்தல் துன்பமாம். கொடிய புலிகள் வாழும் வழியில் செல்லுதல் துன்பமாம்.
‘’இன்னா நாற்பது’’தொடரும்…
தேடல் தொடர்பான தகவல்கள்:
இன்னா நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இன்னா, துன்பமாம், துன்பமாகும், இலக்கியங்கள், செல்லுதல், விடுதல், நாற்பது, பதினெண், கீழ்க்கணக்கு, இல்லாதவன், தெரியாதவன், பொருள், அறியான், பாம்பினை, கேட்ட, வாழும், செய்தல், கல்வி, சங்க, தாம், புகல், கல்லாதான், கூறுதல், சொல்லின்
No comments:
Post a Comment