'ஸ்மார்ட் வாட்ச்' போல வருகிறது 'ஸ்மார்ட்- காண்டாக்ட் லென்ஸ்’: வசதிகள், சிக்கல்கள் என்ன?
இப்படிக் கற்பனை செய்து பாருங்கள்.
நீங்கள் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றத் தயாராக இருக்கிறீர்கள். ஆனால், அது குறித்து நீங்கள் எழுதி வைத்துள்ள குறிப்புகளைப் பார்ப்பதற்காக நீங்கள் குனிய வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, உங்கள் கண்களிலேயே நீங்கள் படிக்க வேண்டிய குறிப்புகள் திரையில் ஓடுவதைப் போல ஓடுகின்றன. இது எப்படி இருக்கும்?
எதிர்காலத்தில் இதுவும் நடக்கும் என்கிறார்கள் ஸ்மார்ட் 'காண்டாக்ட் லென்ஸ்' ( contact lenses) தயாரிப்பாளர்கள்.
"நீங்கள் ஓர் இசைக் கலைஞர். உங்கள் கண்ணிலேயே பாடல்வரிகளோ அல்லது ஸ்வரங்களோ ஓடுகின்றன. அல்லது, நீங்கள் ஒரு தடகள வீரராக இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான பயோமெட்ரிக்ஸ், நீங்கள் ஓடிய தூரம் மற்றும் உங்களுக்கு தேவையான விவரங்கள் கிடைக்கின்றன. நினைத்துப் பாருங்கள்," என்று ஸ்மார்ட் 'காண்டாக்ட் லென்ஸ்களை' உருவாக்கிவரும் மோஜோ நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்டீவ் சின்க்ளேர் கூறுகிறார்.
அவரது நிறுவனம் மனிதர்கள் மீது ஸ்மார்ட் காண்டாக்ட் லென்ஸ்கள் பயன்படுத்தி சோதனையைத் தொடங்க உள்ளது. இதை அணிபவர்களுக்கு, அவர்கள் கண்கள் முன் வரிகள் மிதப்பது போல இருக்கும்.
இந்த தயாரிப்பின் ஸ்க்லரல் லென்ஸ் (Scleral Lens) (கண்ணின் வெள்ளைப்பகுதி வரை நீண்டு இருக்கும் ஒரு பெரிய லென்ஸ்) பயனரின் பார்வையை சரி செய்கிறது. இதில் ஒரு சிறிய மைக்ரோ எல்இடி டிஸ்ப்ளே (MicroLED Display), ஸ்மார்ட் சென்சார்கள் மற்றும் திட-நிலை பேட்டரிகள் ஆகியவற்றையும் இருக்கும்.
"உண்மையில் பயன்படுத்தப்படும், அணியக்கூடிய அம்சங்கள் கொண்ட 'முழுமையான' ஸ்மார்ட் கான்டாக்ட் லென்சை நாங்கள் உருவாக்கியுள்ளோம் . விரைவில் அதை நாங்கள் சோதிக்க இருக்கிறோம்," என்கிறார் சின்க்ளேர்.
"இப்போது இதில் ஒரு சுவாரசியமான விஷயம் உள்ளது. நாங்கள் இதன் செயல்திறனை மேம்படுத்தத் தொடங்குகிறோம். நாள் முழுவதும் நாம் இதை அணியலாம் என்று நிரூபிக்க இதை நீண்ட நேரம் பயன்படுத்தி பார்ப்போம்," என்கிறார்.
ஒருவரது உடல்நிலை குறித்த தரவுகளைச் சேகரிக்க மற்ற ஸ்மார்ட் லென்ஸ்கள் உருவாக்கப்படுகின்றன.
இந்த லென்ஸ்கள் "ஒருவரது உடல்நலம் குறித்த சுய கண்காணிப்பு, கண் அழுத்தம் மற்றும் குளுக்கோஸைக் கண்காணிக்கும் திறனை உள்ளடக்கியிருக்கலாம், " என்று கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஆப்டோ மெட்ரிக் அறிவியல் பயிற்றுவிப்பாளர் ரெபேக்கா ரோஜாஸ் கூறுகிறார். உதாரணமாக, நீரிழிவு நோயாளிகளுக்கு அவர்களின் குளுக்கோஸ் அளவை கண்காணித்துக்கொண்டு இருக்க வேண்டும்.
நீரிழிவு நோய் முதல் கண் நோய் வரை உள்ள நோய்களுக்கு, அவர்களின் நோய்களை கண்டறிந்து சிகிச்சையளிக்கக்கூடிய லென்ஸ்களை உருவாக்கும் ஆராய்ச்சியும் நடந்து வருகிறது. புற்றுநோய் இருப்பவர்களுக்கு, புற்றுநோய் தொடர்பான மூலக்கூறுகள், குளுக்கோஸ் அளவு போன்ற பயோ மார்கர்களை கண்காணிக்கவும் இது உதவலாம்.
சர்ரே பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு குழு, ஒரு ஸ்மார்ட் 'காண்டாக்ட் லென்ஸை' உருவாக்கியுள்ளது. அதில், ஒளியியல் தகவல்களை பெறுவதற்கான போட்டோ-டிடெக்டர்கள் (photo detector), கருவிழி தொடர்பான நோயைக் கண்டறிவதற்கான வெப்பநிலை சென்சார், கண்ணீர் திரவத்தில் குளுக்கோஸ் அளவைக் கண்காணிக்கும் குளுக்கோஸ் சென்சார் ஆகியவை உள்ளன.
"மிக மெல்லிய அடுக்குடன் நாங்கள் அதை மிகவும் தட்டையாக உருவாக்குகிறோம். மேலும் சென்சார் லேயரை நேரடியாக காண்டாக்ட் லென்ஸில் வைக்கலாம். ஆகவே, அது நேரடியாக கண்ணை தொடும், என்று சர்ரே பல்கலைக்கழகத்தில் பயோ எலக்ட்ரானிக்ஸ், ஆற்றல் சேமிப்பு பிரிவின் விரிவுரையாளர் யுன்லாங் சாவோ கூறுகிறார்.
"இது வளையும் தன்மை கொண்டதால், இதை அணிவது மிகவும் வசதியாக இருப்பதைப் போல உணர்வீர்கள். மேலும் நேரடி தொடர்பு இருப்பதால், இது மிகவும் துல்லியமான உணர்திறன் முடிவுகளை அளிக்க முடியும், " என்று டாக்டர் சாவோ கூறுகிறார்.
இந்த ஸ்மார்ட் லென்ஸ் தொழில்நுட்பம் குறித்து கேட்க நன்றாக இருந்தாலும், இது இன்னும் பல தடைகளை கடக்க வேண்டும்.
அதில் ஒன்று, பேட்டரிகள் மூலம் அவற்றை இயக்குவது தொடர்பான சவால். இவை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சிறியதாக இருக்க வேண்டும். அப்படி சிறியதாக இருக்கும்போது அது பயன்படும் வகையில் இருக்குமா என்பதையும் பார்க்க வேண்டும்.
மோஜோ அதன் தயாரிப்பை இன்னும் சோதித்து வருகிறது. ஆனால் வாடிக்கையாளர்கள் அவர்களின் லென்ஸ்களை ரீசார்ஜ் செய்யாமல் நாள் முழுவதும் அணிய வேண்டும் என்றும் அந்த நிறுவனம் விரும்புகிறது.
"நீங்கள் லென்ஸ்கள் மூலம் தகவல்களை தொடர்ந்து பெறாமல், நாள் முழுவதும் சிறிது நேரம் அவ்வப்போது பெற வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு. அது உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது ஸ்மார்ட் வாட்ச் போலவே, ஒரு பேட்டரியின் திறன் எப்படி, எவ்வளவு முறை பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்தது. " என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் விளக்குகிறார்.
இதில் இருக்கும் மற்றொரு விஷயம் என்னவென்றால், 2014 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம், ஸ்மார்ட் கண்ணாடிகளை அறிமுகப்படுத்தியதில் இருந்து தனியுரிமை பற்றிய பிற விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். கூகுளின் இந்த முயற்சி தோல்வியும் அடைந்தது.
"முகத்திற்கு முன்னே இருக்கும் கேமராவை கொண்ட எந்தவொரு சாதனமும் பயனர் படங்களை எடுக்க அல்லது வீடியோவை பதிவுசெய்ய அனுமதிக்கும். இது எதிரில் இருப்பவர்களின் தனியுரிமைக்கு ஆபத்தை விளைவிக்கிறது," என்கிறார் ஆக்சஸ் நவ் (Access Now) என்ற டிஜிட்டல் உரிமைகள் விழிப்புணர்வு குழுவின் மூத்த கொள்கை ஆய்வாளர் டேனியல் லியூஃபர்.
"ஸ்மார்ட் கண்ணாடிகள் மூலம், சுற்றி இருப்பவர்களைப் பதிவு செய்யும்போது, அவர்களுக்கு சமிக்ஞை அளிக்க சில வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக, சிவப்பு எச்சரிக்கை ஒளி. ஆனால் காண்டாக்ட் லென்ஸ்கள் மூலம் அத்தகைய அம்சத்தை எவ்வாறு செயல்படுவது என்பதைப் பார்ப்பது மிகவும் கடினம்," என்கிறார் அவர்.
இது தவிர, அதன் தயாரிப்பாளர்ள் லென்ஸ் அணிந்தவர்கள் பற்றிய தரவு-பாதுகாப்பு குறித்த கவலைகளையும் கொண்டிருப்பார்கள்.
ஸ்மார்ட் லென்ஸ்கள் பயனரின் கண் அசைவுகளைக் கண்காணித்தால் மட்டுமே அவற்றின் செயல்பாட்டைச் செய்ய முடியும். மேலும் இதுவும் அவர்களைப் பற்றய மற்ற தரவுகளை அதிக அளவில் வெளிப்படுத்தும்.
"இந்தச் சாதனங்கள் நான் எதைப் பார்க்கிறேன், எவ்வளவு நேரம் அவற்றைப் பார்க்கிறேன், ஒரு குறிப்பிட்ட நபரைப் பார்க்கும்போது என் இதயத் துடிப்பு அதிகரிக்கிறதா அல்லது ஒரு குறிப்பிட்ட கேள்வியைக் கேட்டால் எவ்வளவு வியர்க்கிறது என்பதைப் பற்றிய தரவுகளைச் சேகரித்து பகிர்ந்தால் என்ன செய்வது?," என்று லியூஃபர் கேட்கிறார்.
"எங்கள் பாலியல் நிலைப்பாடு முதல் விசாரணையின் கீழ் நாங்கள் உண்மையைச் சொல்கிறோமா என்பது வரை தனிப்பட்ட விஷயங்கள் அனைத்தும் சேகரிக்கப்படும்," என்று அவர் மேலும் கூறுகிறார்.
ஏஆர் (ஆக்மென்டட் ரியாலிட்டி) கண்ணாடிகள் அல்லது ஸ்மார்ட் காண்டாக்ட் லென்ஸ்கள் போன்ற சாதனங்கள் மிகவும் தனிப்பட்ட தரவுகளின் சாத்தியமான களாமக பார்க்கப்படும் என்பது எனது கவலை." என்கிறார்
கூடுதலாக, வழக்கமான லென்ஸ்க்கள் அணியும் எவருக்கும் நன்கு தெரிந்த தயாரிப்பு பற்றிய கவலைகளும் உள்ளன.
"எந்த வகை கான்டாக்ட் லென்ஸும் சரியாகப் பராமரிக்கப்படாவிட்டாலோ அல்லது சரியாகப் பொருத்தப்படாவிட்டாலோ கண் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
மற்ற மருத்துவ சாதனங்களைப் போலவே, நோயாளிகளின் ஆரோக்கியத்திற்கும் முன்னுரிமை அளிக்கப்படுவதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். மேலும் எந்த சாதனம் பயன்படுத்தினாலும் ஆபத்தை விட அதிக நன்மைகள் இருப்பவையாக இருக்க வேண்டும்." என்கிறார் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரோஜாஸ்.
"லென்ஸ் பராமரிப்பை முறையாக செய்யாமல் இருந்தல், நீண்ட நேரம் அணிந்திருப்பது பற்றி நான் கவலையடைகிறேன். இவை எரிச்சல், வீக்கம், தொற்றுகள் அல்லது கண் ஆரோக்கியத்திற்கு ஆபத்து போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும்", என்கிறார்.
மோஜோவின் லென்ஸ்கள் ஒரே நேரத்தில் ஒரு வருடம் வரை பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சின்க்ளேர் இது கவலைக்குரியது என்று ஒப்புக் கொள்கிறார்.
ஆனால், ஸ்மார்ட் லென்ஸ் என்றால் அது போதுமான அளவு சுத்தம் செய்யப்படுகிறதா என்பதைக் கண்டறியவும், அதை மாற்ற வேண்டியிருக்கும் போது பயனர்களை எச்சரிக்கவும் திட்டமிட முடியும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இது தொடர்பாக கண் மருத்துவர்களுடன் சேர்ந்து பணியாற்றவும் இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
"நீங்கள் ஒரு ஸ்மார்ட் காண்டாக்ட் லென்ஸ் போன்ற ஒன்றைத் தயாரிக்கத் தொடங்கி, முதல் நாளிலேயே அனைவரும் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம்" என்கிறார் சின்க்ளேர்.
"எல்லா புதிய நுகர்வோர் தயாரிப்புகளைப் போலவே இது ஏற்கப்படுவதற்கும் சிறிது காலம் எடுக்கும். ஆனால் நம் லென்ஸ்கள் அனைத்தும் இறுதியில் 'ஸ்மார்ட்' ஆகப் போவது தவிர்க்க முடியாதது என்று நாங்கள் நினைக்கிறோம்." என்கிறார்.
:எம்மா வூல்லாகாட்-/-தொழில்நுட்பம் மற்றும் வணிகச் செய்தியாளர் /பிபிசி
No comments:
Post a Comment