நகங்கள் வெள்ளையாக, மஞ்சளாக, நீலமாக மாறினால் அதற்கு என்ன பொருள்?
நகங்களைப் பராமரிப்பது, அழகு நிலையம் அல்லது நெயில் சலூனுக்கு செல்வதை விட மிகவும் முக்கியம். உடலின் இந்தப் பகுதியானது உங்கள் உடல்நலம் மற்றும் பல உடல்நலப் பிரச்னைகளின் அறிகுறிகளை முன்கூட்டியே தெரிவிக்கிறது.
எனவே, நகங்களின் நிறம் மற்றும் அதில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நகங்களில் புள்ளிகள் அல்லது அவை உடைதல் அல்லது வேறு ஏதாவது அறிகுறிகள் தோன்றுவது, வரவிருக்கும் நோய்க்கான எச்சரிக்கையாக இருக்கலாம்.
இப்படி ஏற்பட்டால் ஒரு தோல் மருத்துவரை அணுகுவது நல்லது. இதனால் மருத்துவர் நோயாளியின் நிலையை ரத்த பரிசோதனைகள் மற்றும் பிற முறைகள் மூலம் புரிந்து கொள்ள முடியும்.
மேலும் தீவிரமான சந்தேகம் ஏற்பட்டால், நிபுணர் ஒரு பயாப்சி மேற்கொள்ளும்படி கேட்கலாம்.
நம் உடலின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாகங்களை பாதிக்கும் நோய்களும் உள்ளன. பெரும்பாலான உடல்நலப் பிரச்னைகள் சிறுநீரகம், தோல், கல்லீரல், நாளமில்லா சுரப்பி (எண்டோகிரைன் சுரப்பி), ஊட்டச்சத்து மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையவை.
நல்ல விஷயம் என்னவென்றால், நகத்தின் எந்த ஒரு மாற்றமும் எப்போதும் கடுமையான உடல்நலப் பிரச்னையைக் குறிக்கும் என்பது இல்லை. சில சமயங்களில் இது சாதாரணமாகவும் ஏற்படுகிறது.
"கால் நகங்கள் அவ்வளவு நன்றாக பராமரிக்கப்படுவதில்லை என்பதால் சில நேரங்களில் அவற்றில் அதிக பிரச்சனைகள் ஏற்படும். உதாரணமாக, அவை மஞ்சள் நிறமாகி, கரடுமுரடானதாக மாறும்" என்கிறார் தோல் மருத்துவர் வலேரியா சானெல்லா ஃபிரான்சென்.
வரவிருக்கும் சிக்கல்களைக் குறிக்கின்ற மற்றும் கவனிக்கப்பட வேண்டிய சூழ்நிலைகளில் சிலவற்றைப் பார்ப்போம்.
வெள்ளை நகங்கள்
தனது நகங்களில் ஏதேனும் அசாதாரண மாற்றம் ஏற்படுவதாக யாராவது உணர்ந்தால், முதலில் அதன் நிறத்தைப் பார்க்க வேண்டும்.
நகத்தின் நிறம் வெண்மையாக இருந்தால், அது மைக்கோசிஸ், சொரியாசிஸ், நிமோனியா மற்றும் இதய நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.
ஊட்டச்சத்து குறைபாடு, குறைந்த புரத உணவு போன்றவையும் இதற்கு காரணமாக இருக்கலாம்.
"நகங்கள் நிறமிழந்தால் அது ரத்த சோகையின் அறிகுறியாக இருக்கலாம். உடலில் இரும்புச்சத்து இல்லாமல் இருந்தால் நகங்கள் ஸ்பூன் வடிவமாகவும், குழிவாகவும் இருக்கும்," என்று சரும மருத்துவ நிபுணர் ஜூலியானா பிக்வெட் கூறுகிறார்.
நகங்களில் வெள்ளைத்திட்டுகள் தோன்றும் லுகோனிகியா போன்ற ஒரு நிலையும் உள்ளது. ஆனால் அது எந்தத் தீங்கும் விளைவிப்பதில்லை. அவை உடலில் எந்த மாற்றத்தையும் குறிக்காது.
இந்த நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க, மருத்துவர்கள் பொதுவாக நோயாளிகளிடமிருந்து பிரச்சினையின் உண்மையான காரணத்தைக் கண்டறிய முயற்சி செய்கிறார்கள்.
உங்கள் நகங்களின் நிறம் வெண்மையாகத் தெரிய ஆரம்பித்தால், தோல் மருத்துவரிடம் சென்று, அவர் ஏதேனும் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளும்படி சொன்னால் கண்டிப்பாகச் செய்துகொள்ளுங்கள். தேவைப்பட்டால் சிறப்பு மருத்துவரைத் தொடர்புகொள்ளலாம்.
மஞ்சள் நகங்கள்
நகங்கள் மஞ்சள் நிறமாக மாறுவது மரபணு ரீதியாகவும் இருக்கலாம் அல்லது வயோதிகமும் அதற்கு காரணமாக இருக்கலாம். இந்த நிலையில் நகங்கள் பருமனாகும், அவற்றில் மஞ்சள் நிறமும் காணப்படும்.
பூஞ்சை தொற்று காரணமாகவும் இது நிகழலாம். மேலும் சில கடுமையான சூழல்களில் இது சொரியாஸிஸ், எச்.ஐ.வி மற்றும் சிறுநீரக நோயைக் குறிக்கிறது.
அதிகம் புகைப்பிடிப்பவர்களின் நகங்கள் சிகரெட்டுடன் நேரடித்தொடர்பில் வருவதால் மஞ்சள் நிறமாகத் தெரிய ஆரம்பிக்கும்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மஞ்சள் நிறமானது கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரலில் அதிகமாக காணப்படுகிறது.
நகங்களில் வெள்ளை புள்ளிகள்
தோல் சிறப்பு மருத்துவர்கள் இதை 'பீட்டிங்' என்பார்கள். இவை நகங்களில் சிறிய புள்ளிகள் போல் இருக்கும். பெரும்பாலும் ஒரு நகத்தில் ஒன்றுதான் இருக்கும்.
இது அடோபிக் டெர்மடிடிஸ் (ஒரு வகை அரிக்கும் தோலழற்சி), சொரியாஸிஸ் அல்லது வேறு ஏதேனும் தோல் நோய் அல்லது முடி பிரச்சனையுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
"நகங்களில் வெள்ளைப் பகுதி தெரிந்தால், அது அலோபீசியா அரேட்டாவுடன் (திடீர் முடி உதிர்தல்) தொடர்புடையதாக இருக்கலாம். இந்த நிலையில் முடிக்கான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்," என்று ஃபெடரல் யூனிவர்சிட்டி ஆஃப் சாவ் போலோவின் தோல் மருத்துவரான ஜூலியானா டோமா கூறுகிறார்,
சில நேரங்களில், இது சிபிலிஸ் எனப்படும் பாலியல் ரீதியாக பரவும் நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
நீல நகங்கள்
சில மருந்துகளின் பயன்பாடு காரணமாக நீல நகங்கள் ஏற்படலாம்.
முகப்பரு அல்லது மலேரியாவுக்கு மருந்துகளைப் பயன்படுத்தும் நபர்களின் நகங்களில் இத்தகைய நிறம் காணப்படுகிறது.
இது நிகழும்போது, ஒரு குறிப்பிட்ட மருந்தை நிறுத்த வேண்டிய அவசியம் உள்ளதா அல்லது சிகிச்சையை மாற்ற வேண்டிய அவசியம் உள்ளதா என்பதை மருத்துவர் பார்க்க வேண்டும்.
நகத்தில் மீண்டும் மீண்டும் பூஞ்சை தொற்று
மைக்கோசிஸ் பூஞ்சை தொற்று காரணமாக ஏற்படுகிறது . சிகிச்சை நிறுத்தப்பட்டால் அது மீண்டும் ஏற்படலாம். இது சரியாக கண்காணிக்கப்படாவிட்டால், அது மீண்டும் மீண்டும் வெளிப்படும்.
இந்த பிரச்சனை பெரும்பாலும் கால் நகங்களில் ஏற்படுகிறது. ஒருமுறை சிகிச்சையைத் தொடங்கினால், ஆறு மாதங்களுக்குத் தொடர வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இது கையில் ஏற்பட்டால் மூன்று முதல் நான்கு மாதங்கள் சிகிச்சை செய்யப்பட வேண்டும். நோயாளி சரியான நேரத்தில் மருந்தை உட்கொள்ள வேண்டும். மருத்துவர் சொன்னால் மட்டுமே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.
இறுக்கமான காலணிகள் அணிவதை தவிர்க்கவேண்டும். நீச்சல் குளம் மற்றும் சோனா போன்ற தொற்று ஏற்படக்கூடிய இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவேண்டும் அறிவுறுத்தப்படுகிறது.
நகங்கள் மீது கோடுகள்
இவை 'பியோஸ் லைன்ஸ்' என்றும் அழைக்கப்படுகின்றன. அவை நகத்தின் மீது கிடைமட்ட கோடுகள் போலத்தோன்றும்.
அதிக காய்ச்சல் அல்லது கீமோதெரபி சிகிச்சைக்குப் பிறகு இது பொதுவாகக் காணப்படுகிறது.
இந்த கோடுகள் கருமை நிறத்தில் தோன்றி ஒரு விரலில் மட்டும் தெரியும் போது, அது மெலனோமாவின் அறிகுறியாக இருக்கலாம்.
மெலனோமா என்பது ஒரு வகை தோல் புற்றுநோயாகும்.
நகங்களில் உலர்வு
ரசாயனப் பொருட்களுடன் நகங்கள் தொடர்பில் வந்தால் அவை உடையும் அல்லது விழுந்துபோகும் அளவிற்கு உலர்ந்துவிடும்.
இப்படி இருந்தால் மருத்துவரின் ஆலோசனையுடன் கிரீம் போன்றவற்றின் மூலம் உடலின் அந்த பகுதியில் ஈரப்பதத்தை பராமரிக்கவேண்டும்.
உணவில் புரதம், பயோட்டின் (B7) மற்றும் பிற பி வைட்டமின்கள் இல்லாமை போன்ற காரணங்களாலும் பலவீனமான நகங்கள் ஏற்படலாம்.
சைவ உணவு உண்பவர்கள் வைட்டமின் பி 12 மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை போதுமான அளவு உட்கொண்டால், நகங்கள் உடைவதைத் தவிர்க்கலாம்.
பிரிசில்லா
கார்வால்ஹோ-/-பிபிசி பிரேசில் செய்தியாளர்
0 comments:
Post a Comment