இலங்கையின் வடக்கில் ஏற்பட்ட போரின் காரணமாக, பிள்ளைகளின் நலம் கருதி, எமது வீட்டை
பூட்டி விட்டு, புத்தளத்தில் வேலை எடுத்துக்கொண்டு,
எனக்கு தந்த ஊழியர் விடுதியில் நாம் வாழ்க்கையை ஆரம்பித்தோம். அங்கு யாழ் நகர் போல் நல்ல தரமான பாடசாலைகள் இல்லா விட்டாலும், மனிதனுக்கு முக்கியமாக தேவைப்படும், பயமின்றி எங்கும் போய் வருதல், பாதுகாப்பான வீடு மற்றும் தட்டுப்பாடு இல்லா உணவுப் பொருட்கள் இருந்தன, படிப்பின் தரம் அன்று பாடசாலையில் குறைவு என்றாலும், அதை தரமாக நிவர்த்தி செய்ய தேவையான படிப்பும், ஆற்றலும் என்னிடமும் மனைவியிடமும் இருந்தன. ஆகவே அது பெரும் பிரச்சனையாக தோன்றவில்லை. என்றாலும் எமக்கு ஒரே ஒரு கவலை , எம் வீட்டின் நிலை ,எப்படி காலம் போக போகும் என்று!
வடக்கில் பெரும் போர் நடந்து கொண்டு இருந்த காலம் என்பதால், எமக்கு அறிந்தவர்கள் பற்றிய மற்றும் எம் இடம் பற்றிய செய்திகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வரும். எமது அயலில், வங்கியில் வேலை செய்துகொண்டு இருந்த ஈஷ்வரன் அண்ணா, ஷெல் தாக்குதலில் உயிர் இழந்ததும், அங்கு இரண்டு மூன்று வீடுகள் உடைந்து சிதறியதும் அறிந்தேன். எம் வீடு இதுவரை தப்பி உள்ளது. என்றாலும் அது ராணுவத்தால், கதவுகள் உடைக்கப்பட்டு தேடுதல் நடந்ததாக மட்டும் அறிந்தேன். வீடு இப்ப எப்படி என்று போய் பார்க்க ஆவல் இருந்தாலும், அந்த நிலவரத்தில், கொஞ்சம் பொறுத்து போவதே நல்லது என்று தோன்றியது.
எம் வீட்டில், எனக்கு அறிந்தவரையில் இரகசியம் என்று ஒன்றும் இல்லை, அப்படி என்றால் ராணுவம் எதை தேடினார்கள் என்பது ஒரு ஆச்சரியமாக இருந்தது. அதை போனால் தான் அறியலாம். இங்கிருந்து ஒன்றும் செய்ய முடியாது, ஆகவே ஒரு தருணம் வரும் வரை காத்திருந்தேன்.
2002 இறுதியில், அங்கு ஒரு சமாதான காலம் ஆரம்பிக்க தொடங்கியது. எனவே 2003 நடுப்பகுதியில் நாம் எல்லோரும் அங்கு சென்று வீட்டின் நிலவரம் பார்க்க முடிவு செய்தோம். என்னை விட என் பிள்ளைகளுக்கு கூட ஆவல். அவர்களின் விளையாட்டு சாமான்களுக்கு எதாவது நடந்ததோ என?.
நாம் காரை விட்டு இறங்கும் பொழுதே , எமக்கு ஒரே அதிர்ச்சி! வீட்டுக்கு முன், பின், பக்க கதவு மூன்றும் இல்லை. அவை உடைத்து கிணத்துக்குள் போடப்பட்டு இருப்பதை பின் கண்டோம். ஊரில் உள்ள
தெரு நாய்கள் , காகம் எல்லாம் வீட்டுக்குள் இருந்து வருவதை கண்டோம். வீட்டை சுற்றி ஒரே பத்தை பத்தையாகக் காணப்பட்டன. முற்றம் எல்லாம் ஒரே குப்பை! வீடு வெயில், மழை எல்லாம் கண்டு பாழடைந்து இருந்தது. நாமும் பயணக் களைப்பு. ஆகவே வீட்டுக்குள் போகவில்லை. ஆனால் உள்ளுக்குள் இருந்து யாரோ கதைப்பது போல ஒரு சத்தமும் கேட்டுக்கொண்டு இருந்தது. ஆகவே பிறகு என் ஊர் நண்பர்களுடன் வந்து, அது என்ன சத்தம் என்ற மர்மத்தையும் ஆராய்ந்து, வீட்டையும் வளவையும் துப்பரவாக்க வேண்டும் என்ற முடிவுடன், என் அம்மாவின் வீட்டிற்கு சென்று அன்று இரவை கழித்தோம்.
அடுத்த நாள் நானும், மனைவியும் மற்றும்
நண்பர்களுடன், துப்பரவாக்க தேவையான
உபகரணங்களுடன், அங்கு சென்றோம். முதலில் வீட்டிற்குள் உள்ள நிலவரம் அறியவே ஆவலாக இருந்தது, அதிலும் அந்த சத்தம் என்ன என்பதே முதன்மையாக இருந்தது. அது தான் ராணுவத்தை அதிகமாக சந்தேகப்பட வைத்திருக்கலாம்? வீட்டு நுழைவாயிலை துப்பரவாக்கிக் கொண்டு எமது நாலு அறைகளையும், சமையலறை, கழிப்பறை மற்றும் குளியல் அறைகளை ஒவ்வொன்றாக சரிபார்ப்பது என்பது தான் எங்கள் எண்ணம். அதிலும் சத்தம் கேட்டுக்கொண்டு இருக்கும் மூத்த மகளின் அறை முதலில். அதன் பின்பு தான் மற்றவை.
நானும், என் நண்பனில் ஒருவனும் அந்த அறைக்குள் நுழைந்தோம். எமக்கு ஒரே சிரிப்புதான். மகளின் சிறிய வானொலி, அது மின்சாரத்தில், வேலை செய்வதால், அதை நிறுத்த மறந்து நாம் புத்தளம் சென்றதால், வந்த வினை என்று உணர்ந்தேன். எமது 'பாழடைந்த வீட்டுக்குள் இரகசியம்', நல்ல காலம் மர்மமாக இருக்கவில்லை. அதையிட்டு நாம் எல்லோருமே மகிழ்வு, என்றாலும், நான் எழுதி சேகரித்த கதை, கவிதைகள், எம் பாடசாலை, பல்கலைக்கழக புத்தகங்கள், எம் பாடசாலை, பல்கலைக்கழக, திருமண புகைப் பட தொகுப்புக்கள் எல்லாம் குப்பையில் மிகவும் அழிந்த நிலையில் அல்லது துப்பரவாக இல்லாத நிலையில் இருந்தது மிக மிக கவலையாக இருந்தது. ராணுவம் வீட்டை சோத்தித்து அவைகளை வெளியே எறிந்துவிட்டு போய் உள்ளான் என்பது புலப்பட்டது. எது எப்படி ஆகினும் அந்த சத்தத்தின் மர்மம், எம் நண்பர்கள் எல்லோருக்குமே சொல்லி சொல்லி சிரிப்பை உண்டாக்கியது இன்று வரை தொடர்கிறது!
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
0 comments:
Post a Comment