பழகத் தெரிய வேணும் – 38

 


அன்பைக் காட்டும் வழி: சுதந்திரம் அளிப்பது

குழந்தைப் பருவத்திலிருந்து மனிதனுக்கு இரு முரணான குணங்கள் இயற்கையிலேயே அமைந்திருக்கின்றன.

 

உண்பது, தன் துணியை தானே மடித்து வைத்துக்கொள்வது போன்ற விஷயங்களைத் தாங்களே செய்ய வேண்டும் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால், எதையாவது கண்டு பயந்தாலோ, கீழே விழுந்துவிட்டாலோ, ஓடி வந்து தாயைக் கட்டிக்கொள்வார்கள்.

 

சிறுவர்களாக இருக்கும்போது மட்டுமல்ல, எல்லா வயதிலும் சுதந்திரமும் வேண்டும், பாதுகாப்பும் வேண்டும்.

 

`என் உரிமை!’ என்று முழக்கமிடும் பதின்ம வயதினர் `சுதந்திரம்’ என்று எண்ணுவது தான்தோன்றித்தனமாக நடப்பது.

 

அவர்களுக்குச் சகல வசதிகளும் அளித்து, செலவழிக்கப் பணமும் கொடுக்க வேண்டிய பெற்றோர், `இது எப்படி சுதந்திரம் ஆகும்?’ என்று அலுத்துக்கொள்வதில் நியாயம் இருக்கிறது.

 

ஒருவர் தன் வாழ்க்கையைத் தானே அமைத்துக்கொள்வதுதான் சுதந்திரம். அது பிறர் அளிப்பதல்ல; சுய முயற்சியால் பெறுவது.

 

சில குடும்பங்களில், வயதில் மூத்தவர்கள் சொல்வதை அப்படியே கேட்டு நடக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உண்டு. அங்கு இளையவர்களுக்கு பேச்சு சுதந்திரம் கிடையாது. வேறு விதமாக யோசிப்பதே குற்றம் என்பதுபோல் வளர்க்கப்படுவார்கள்.

 

பெண்களுக்கோ! கேட்கவே வேண்டாம்.

 

கதை:

கூட்டுக் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டாள் காவேரி. திருமணமாகி, இரு குழந்தைகளுக்குப் பின் மேற்படிப்பைத் தொடர்ந்து, பட்டங்களும் பெற்றாள்.

ஆரம்பப் பள்ளி ஒன்றில் அவளை அழைத்தார்கள், தலைமைப் பதவியை ஏற்க.

மாமியாரோ, `நீ வேலைக்குப் போய்விட்டால், குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள என்னால் முடியாது,’ என்று திட்டவட்டமாகக் கூறினாள்.

பெரியவர்களை எதிர்த்துப் பழக்கமில்லாத காவேரி அடிபணிந்தாள்.

பல ஆண்டுகள் கழிந்தபின், தனக்குப் பொருளாதாரச் சுதந்திரம் கிடைக்காமல் போய்விட்ட வருத்தம் எழுந்தது. `குழந்தைகளையாவது நல்ல விதமாக வளர்க்க முடிந்ததே!’ என்ற சிறு ஆறுதல் கொண்டாள்.

 

அவள் துணிந்திருந்தால், குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள பணிப்பெண்ணை அமர்த்தி இருக்கலாம். இல்லையேல், தனிக்குடித்தனம் போயிருக்கலாம்.

 

நம் திறமைக்கேற்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. ஆனால், பலருக்கும் தானே சிந்திப்பதைவிட, பிறரைத் தொடர்வது எளிது.

 

அப்படி அவள் தனிக்குடித்தனம் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும்?

 

`பெரியவர்களை விட்டுவிட்டு, உனக்கு அப்படி என்னடி வாழ்க்கை?’ என்று ஆசாரமான அவள் குடும்பத்தாரே பழித்திருப்பார்கள்.

 

`பிறர் என்ன சொல்வார்களோ!’ என்று சுயமாகச் சிந்திக்கவே பயந்தால், வாழ்வில் மகிழ்ச்சியோ, பிடிப்போ இல்லாமல் போய்விடுமே!

 

தான் விரும்பியதைப் பிறருக்காக விட்டுக் கொடுத்து, தன் திறமையை முழுவதாக வெளிப்படுத்த முடியவில்லையே என்ற ஏக்கமும் கையாலாகாத உணர்வும் மேலிட வாழ்கிறவர்கள் எத்தனை பேர்!

 

(நாடு தழுவிய நிலையிலும் இதேதான். நம் கருத்து பிடிக்காவிட்டாலும், `பிழைத்துப் போ!’ என்று நம்மைத் தண்டிக்காது விட்டால், அதுவே சுதந்திரம் என்று மகிழ வேண்டியதுதான்).

 

காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்ட பழக்க வழக்கங்களையோ, எண்ணங்களையோ ஏற்றுக்கொள்ளாது, தன்னம்பிக்கையுடன் நடக்க முயலும் எவருக்கும் கஷ்டங்கள் தவிர்க்க முடியாதவை. அவற்றுக்குப் பொறுப்பேற்கத் தயாராக இருக்கவேண்டும். அதற்கான துணிச்சல் அவசியம்.

 

கதை:

அப்போது நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன்.

அப்போது விரிவுரையாளராக இருந்த மிஸ் சுந்தரவல்லி, “உங்களிடம் படித்த மாணவிகளில் சிறப்பானவள் என்று நீங்கள் யாரை நினைக்கிறீர்கள்?” என்று என் பள்ளித் தமிழ் ஆசிரியை திருமதி கோமளாம்பாளிடம் விசாரித்திருக்கிறாள். (அது தனியார் பள்ளியான கமலாபாய் பெண்கள் பள்ளி. பெங்களூரில்).

பத்து வருடங்களுக்கு ஒரு முறைதான் நிர்மலா போன்ற ஒரு மாணவி கிடைப்பாள்!” என்ற பதில் கிடைத்ததாம்.

மிஸ் சுந்தரவல்லியே இதை என்னிடம் கூறி, “பரீட்சைகளில் நீ அப்படி ஒன்றும் சிறப்பாக எழுதுவதில்லையே! ஏம்மா? தலைவலியா?” என்று போலிப் பரிவுடன் ஒவ்வொரு முறையும் விசாரித்தபோது, எனக்குப் பதிலளிக்கத் தெரியவில்லை.

பல வருடங்களுக்குப் பின் புரிந்தது, அவ்விரு ஆசிரியைகளுக்கும் இடையே இருந்த வேறுபாடு.

 

பள்ளிக்கூடத்தில் எனக்குள் இயற்கையாகவே அமைந்திருந்த எண்ணச் சுதந்திரம் தடை செய்யப்படவில்லை. மாறாக, அது வளரும் விதத்தில் ஊக்கம் அளிக்கப்பட்டது.

 

`நான் சொல்லியது மட்டுமல்லாது, பரீட்சைத்தாளில் சுயமாகக் கருத்து சொல்வதற்கு இவளுக்கு என்ன திமிர் இருக்கவேண்டும்!’ என்று ஆத்திரப்பட்டிருப்பாள் மிஸ் சுந்தரவல்லி.

 

(பட்டப் பரீட்சையில் நானும், இன்னொரு பெண்ணும் மட்டுமே தமிழில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தோம்).

 

கல்வி கற்பதன் நோக்கமே ஒருவர் எதையும் கூர்ந்து கவனித்து, ஆராய்ந்து, ஒரு முடிவுக்கு வருவதுதான்.

 

இது புரியாது, சுயமாகச் சிந்திப்பவர்களை மரியாதை கெட்டவர்கள், கர்வம் கொண்டவர்கள் என்பதுபோல் தண்டித்தால், அது என்ன கல்வி?

 

பெண் எழுத்தாளர்களும் சுதந்திரமும்

ஆண்கள் எப்படி எழுதினாலும் ஏற்கலாம். ஆனால், தமிழ்ப் பெண்களின் எழுத்து ஒரு வரையறைக்குள்தான் இருக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி.

 

(ஆங்கிலத்தில் எழுதும் பெண்களுக்குப் பூரண எழுத்துச் சுதந்திரம் உண்டு. அவர்களது உள்ளுணர்வை விவரித்தால் அது தவறாகக் கருதப்படுவதில்லை).

 

கற்பனை விரியும்போது, அதைத் தணிக்கை செய்யாது, அப்படியே எழுத்தில் வடிக்கும்போதுதான் நிறைவு ஏற்படுகிறது.

 

`இது சரியா?’

 

`இப்படி எழுதினால், என் பெயர் கெடுமோ?’

 

இவ்வாறு கலக்கத்துடன் யோசித்து, ஒவ்வொரு வரியையும் திருத்திக்கொண்டே இருந்தால், நாம் எழுதுவதில் முழு மனத்துடன் ஆழ்ந்துபோக முடியுமா? கதையில்தான் என்ன சுவை இருக்கும்?

 

கதைகளில், பெண்கள் முறை தவறி நடக்கிறார்கள் என்பதுபோல் எழுதினால், அந்த எழுத்தாளினியின் நடத்தையில் சந்தேகம் எழுப்புவார்கள்.

 

படைத்தவரின் கைவண்ணத்தைவிட்டு, ஒரு கலைஞரையே வேண்டாத விமரிசனத்திற்கு உள்ளாக்குவது பொறாமையால்தான் என்று தெளிந்தால் போதும். துணிச்சல் அதிகரிக்கும்.

 

அத்தகையவர்களுக்குப் பயந்து, பிறர் மதிக்கவேண்டும் என்றே ஒவ்வொரு செயலையும் புரிவது, அல்லது ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து பேசுவது என்று பழகிக்கொண்டால், முன்னேறுவது எப்படி?

 

என்னைச் சில பெண்கள் கேட்டிருக்கிறார்கள், “ஆண்களின் சில போக்கைக் கேலி செய்து நீங்கள் (ஆங்கிலத்தில்) எழுதுகிறீர்களே! உங்கள் கணவர் கோபிப்பதில்லையா?” என்று.

 

எரிச்சலுடன், “நான் – எழுத்தாளர்! எனக்குத் தோன்றுவதை, எனக்குச் சரியென்று படும் விதத்தில் எழுதுகிறேன்,” என்று பதிலளிப்பேன்.

 

அன்பும், காதலும்

 

வளர்ந்த பிள்ளைகளோ, தம்பதியரோ, ஒருவர் தான் சொல்கிறபடியே நடக்கவேண்டும் என்று அவரைக் கெட்டியாகப் பிடித்திராது, அவர் போக்கில் விட்டால், அப்படி அளிக்கும் சுதந்திரத்தையே அன்பு என்பேன்.

 

`ஐ லவ் யூ’ என்று வாய்வார்த்தையாகச் சொல்பவர்கள் எத்தனை பேர் இதைக் கடைப்பிடிக்கிறார்கள்?

:நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.

தொடரும்.... 

👉அடுத்தப்பகுதி வாசிக்க... அழுத்துக
👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக 

No comments:

Post a Comment