‘’இன்னா நாற்பது’’ என்னும் நூல் ‘கபிலர்’ என்னும் புலவரால் இயற்றப்பட்டது. நாற்பத்தொரு பாடல்களைக் கொண்ட இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூற்றொகுதியுள் அடங்குவது. உலகத்தில் கூடாதவை என்னென்ன என்பது பற்றிக் கூறி நீதி உரைப்பது இந்நூல். இது கி. பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த நூலாகும். இந்நூல் இன்னிசை வெண்பாக்களால் ஆனது. இதில் நூற்று அறுபத்து நான்கு கூடாச் செயல்கள் கூறப்பட்டுள்ளன.
‘’இன்னா நாற்பது’’-தொடர்கிறது...
வெண்பா:06
அற மனத்தார் கூறும் கடு மொழி இன்னா;
மற மனத்தார் ஞாட்பில் மடிந்து ஒழுகல் இன்னா;
இடும்பை உடையார் கொடை இன்னா; இன்னா,
கொடும்பாடு உடையார் வாய்ச் சொல்.
விளக்கம்: அறத்தை விரும்பும் நெஞ்சத்தினர் கூறும் கடும் மொழியும் துன்பமாம். வீரத்தன்மையுடையவர்கள் போரில் சோம்பலுடன் இருத்தல் துன்பமாம். வறுமை உடையவரது கொடை தன்மை துன்பமாகும். கொடுமையுடையாரது வாய்சொல்லும் துன்பமாகும்.
வெண்பா:07
ஆற்றல் இலாதான் பிடித்த படை இன்னா;
நாற்றம் இலாத மலரின் அழகு இன்னா;
தேற்றம் இலாதான் துணிவு இன்னா; ஆங்கு இன்னா,
மாற்றம் அறியான் உரை.
விளக்கம்:
வலிமையில்லாதவன் கையிற்பிடித்த ஆயுதம் துன்பமாகும். மணமில்லாத மலரின் அழகு துன்பமாகும். தெளிவு இல்லாதவன் செய்யும் வேலை துன்பமாகும். அவ்வாறே சொற்களின் நுட்பத்தை அறியாதவனது சொல்லும் துன்பமாகும்.
வெண்பா:08
பகல் போலும் நெஞ்சத்தார் பண்பு இன்மை இன்னா;
நகை ஆய நண்பினார் நார் இன்மை இன்னா;
இகலின் எழுந்தவர் ஓட்டு இன்னா; இன்னா,
நயம் இல் மனத்தவர் நட்பு.
விளக்கம்:
ஞாயிறு போலும் நெஞ்சத்தை உடையவர்கள் பண்பில்லாமல் இருத்தல் துன்பமாகும். நகுதலையுடைய நட்பினர் அன்பில்லாதிருத்தல் துன்பமாகும். போரிலே புறமுதுகிடுதல் துன்பமாகும். நீதியில்லாத மனத்தினை உடையவர்களது நட்பு துன்பமாகும்.
வெண்பா:09
கள் இல்லா மூதூர் களிகட்கு நற்கு இன்னா;
வள்ளல்கள் இன்மை பரிசிலர்க்கு முன் இன்னா;
வண்மை இலாளர் வனப்பு இன்னா; ஆங்கு இன்னா,
பண் இல் புரவிப் பரிப்பு.
விளக்கம்:
கள் இல்லாத மூதூரில் கள்ளுண்டு களிப்பார்க்கு மிகவும் துன்பமாகும். வள்ளல்கள் இல்லாதிருத்தல் இரவலர்க்கு மிகவும் துன்பமாகும். ஈகைக் குணமில்லாதவர்களுடைய அழகு துன்பமாகும். அவ்வாறே சேணம் இல்லாத புரவி தாங்குதல் துன்பமாகும்.
வெண்பா:10
பொருள் உணர்வார் இல்வழிப் பாட்டு உரைத்தல் இன்னா;
இருள் கூர் சிறு நெறி தாம் தனிப்போக்கு இன்னா;
அருள் இல்லார் தம் கண் செலவு இன்னா; இன்னா,
பொருள் இல்லார் வண்மை புரிவு.
விளக்கம்:
பொருள் அறியும் அறிவுடையார் இல்லாத இடத்தில் பாட்டுரைத்தல் துன்பமாகும். இருள் நிறைந்த சிறிய வழியில் தனியாகப் போகுதல் துன்பமாகும். அருள் இல்லாதவர்களிடம் இரப்போர் செல்லுதல் துன்பமாகும். அதுபோலப் பொருள் இல்லாதவர்கள் ஈதலைப் புரிதல் துன்பமாகும்.
‘’இன்னா நாற்பது’’ தொடரும்.... ››››››
தேடல் தொடர்பான தகவல்கள்:
இன்னா நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இன்னா, துன்பமாகும், இலக்கியங்கள், பொருள், நாற்பது, அழகு, இன்மை, பதினெண், இல்லாத, கீழ்க்கணக்கு, அருள், நட்பு, இருள், வள்ளல்கள், இல்லார், வண்மை, போலும், மிகவும், மலரின், உடையார், கூறும், மனத்தார், சங்க, கொடை, துன்பமாம், ஆங்கு, இலாதான், இருத்தல், அவ்வாறே
No comments:
Post a Comment