''நான் பொல்லாதவன்.'' (குறுங்கதை)


அன்று அதிகாலை டொரோண்டோ நகரம் வழமைபோல் இருக்கும் என நம்பிப்   படுக்கையால் எழுந்தபோது  ,என் தங்கையின் தொலைபேசி செய்தியில் அம்மாவின் மரணம்  என்ற அலறல், எனக்குப் பேரதிர்ச்சியினை கொடுத்தது.


அம்மாவை ஸ்பொன்சரில் கனடாவுக்கு அழைத்து 30 வருடங்கள் எப்படி கடந்தது என்று புரியவில்லை. ஆனால் அம்மாவை பொறுத்தவரையில் ''நான் பொல்லாதவன்.''


அதற்காக என் அம்மாவில்  நான்  கோவித்துக்கொண்டதில்லை. அம்மா என்னைக் கருவில் சுமந்து தாங்கிய வலிகளோடு பார்க்கையில்,  அம்மாவின் குற்றச்சாட்டுகள் என்றைக்கும் எனக்கு வலித்ததில்லை. இருந்தாலும் என் அம்மா.... என்னை ஒரு குற்றவாளியாகவே தன் நெஞ்சில் பதித்து சென்றுவிட்டார் என எண்ணும்போது, என்னால் அம்மாவின் பிரிவு  தாங்க முடியாமல் இருந்தது

''அம்மா நான் அந்த உண்மையை எப்படி உங்களிடம் சொல்லுவேன்.''

👈👈👈👈👈👈👈


''மாமி இந்த சனி ,ஞாயிறு வீட்டுக்கு வாருங்கோவன், இவரை அனுப்பிறன்''


தொலை பேசியில் என் மனைவியின் வேண்டுகோளை என் அம்மா கேட்டு, இப்படி எத்தனை நாள் மனம் உருகியிருப்பார். அவளின் சொல்லினை தட்டிடாமல் ,உடனே கிளம்பிவிட ஆயத்தமாகும்  அம்மா ,அதற்குமுதல் எத்தனைபேருக்கு தன் மருமகளின் அன்பினை பற்றித் தொலைபேசியில் ஊர் முழுக்க அள்ளித் தெளித்திருப்பார் என்பது ஊர் அறிந்த விஷயம் மட்டுமல்ல, ஊர் முழுக்க அம்மா பறை அடிப்பார் என்பதுவும், என் மனைவியும் அறிந்த விஷயம்.

 

தொலைபேசியில் அம்மாவுடன் பேசிக்கொண்டே, என் மனைவி கையுடன் அம்மாவுக்கு கேட்கக்கூடியதாக 'இஞ்சாருங்கோ மாமியை இந்த சனிக்கிழமை காலையில கூட்டிக்கொண்டு வந்திடுங்கோ'என்று கூறுவதும் ,நான் அந்த கோரிக்கைக்கு 'ஆமா' போடுவதும் ,அம்மா அழைக்கப்படும், ஒவ்வொரு முறையும் வழக்கமாகிவிட்டது.

 

அதேவேளையில்  , நான் சென்று அம்மாவை காரில் அழைத்து வரும்பொழுது, ''எடே ,நீ என்ர  பிள்ளை ,எப்பாவது வீட்டுக்கு வா எண்டு கூப்பிட்டிருக்கிறியே , பாத்தியே மருமேளை, யாரோ பெற்ற பிள்ளை '' என்று அம்மா புகழ் பாடுவதும் வழமையான தேவாரமாகிவிட்டது.

 

வீட்டுக்கு அம்மா வந்தால் என் மனைவி எந்த குறையுமில்லாமல் அம்மாவை கவனிப்பதுவும்ஞாயிறு இரவு நான் அம்மாவை கூட்டிச்சென்று தங்கைச்சியின் வீட்டில் விட்டு வருவதுவும் வழக்கமானவை தான். அப்பவும் கூட அம்மாவின் மருமகள் புராணம் தவறியதில்லை.

 

நான் என் தங்கையின் வீடு சென்று அம்மாவை  விட்டுத் திரும்பி  வந்தபின் எங்கள் வீட்டில் நடக்கும் பெரும் பூசை, வெளியில் யாருக்குத்தான் தெரியும்.

 

''என்னப்பா,உங்கட அம்மாவுக்கு கொஞ்சம் கூட மனச்சாட்சி கிடையாதே? வேலைக்குப் போறனாங்கள்,சனி,ஞாயிறு நாட்களில  செய்யவேண்டிய வேலையள் எவ்வளவு இருக்கு. எதோ ஒரு கதைக்கு வாருங்கோ எண்டால், உடன வெளிக்கிட்டு வந்திடுறதே? அவாவுக்கெண்டு வேற சமைக்கவேணும், பணிவிடை செய்யவேணும்.   சீ ,சீ இதென்ன வாழ்க்கை!!

 

அம்மாவிடம் உண்மையினை கூறினால், விளைவு , அம்மா இதை, இந்த உலகமெலாம் விதைத்தாலோ, அல்லது 'நீங்க தானே அம்மாவை கூட்டி வரச்சொன்னது' என்று நான் மனைவியிடம் எதிர் வாதம் செய்தாலோ, இந்த வரவேற்பும் அம்மாவுக்கு கிடையாமல் போய்விடுமோ  என்ற ஏக்கம், என்னை மெளனமாக்கியது.

 

 அதேவேளை,அம்மாவை இந்த கிழமை கூட்டி வரட்டோ’ என்று நானாக  கேட்டால், அடியோடு மறுத்துஉரத்துப்  பேசும் என் மனைவியின் கதையும் , நான் மெளனமாக இருந்த  வரையில்  அம்மா அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.


இப்படி என் மனைவி அரங்கேற்றும் பல நாடகங்களை உண்மையென நம்பி அம்மா என்னை கடிந்துகொண்ட பல சம்பவங்கள் இருந்தாலும், நான் அம்மாவின் சந்தோசம் கருதி மெளனமாகவே வாழ்ந்துவிட்டேன்.

 👉👉👉👉👉👉👉

ஆனால்....இன்றோ அம்மா .....என்னைத் தவறாகவே கணித்துக்கொண்டு போய்விட்டார் எனும் துக்கம் என் தொண்டையினை மிகவும் ஆழமாக  அழுத்திக்கொள்ள ,அம்மாவின் பாதங்களில், அழுது தீர்ப்பதை தவிர எனக்கு வேறு வழியொன்றும் இருக்கவில்லை.

ஆக்கம் :-செ.மனுவேந்தன்

No comments:

Post a Comment