பழகத் தெரிய வேணும் – 32

என் செல்லமே!

குழந்தைகளுக்குச் செல்லம் கொடுக்கலாமா, மாமி?” ஓர் இளம் தாய் என் அம்மாவைக் கேட்டாள்.

பதில்: “படிப்பிலே மட்டும் கூடாது”.

எது எதற்கோ வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால், சரியான முறையில் ஒரு குழந்தையை எப்படி வளர்ப்பது என்பது பலருக்கும் தெரிவதில்லை.

ஒரு குழந்தையைப்போல் இன்னொன்றை நடத்தமுடியாது. இது இன்னொரு குழப்பம்.

அன்பைக் கொட்டி வளர்க்கப்படும் குழந்தை நல்லவனாக வளர்வான் என்றால், எத்தனை அன்பு என்ற கேள்வி எழுகிறது.

சில குடும்பங்களில் மூத்த குழந்தை செல்லமாக வளரும். ஒரு தலைமுறைக்கு முன்புதான் வீட்டில் குழந்தை தவழ்ந்திருக்கும். அதனால், இது வரவேற்கத்தக்க அனுபவமாகிவிடுகிறது.

என் மூத்த பிள்ளைக்குப் பத்து விரல்களிலும் தங்க மோதிரம் போட்டு அருமையாக வளர்த்தேம்மா. இப்படிக் கெட்டுவிட்டானே!” என்று ஒரு முதியவர் என்னிடம் சொல்லிப் புலம்பினார்.

அதனால்தான்!” என்றேன், அசுவாரசியமாக.

சிறு வயதிலிருந்தே அந்தப் பையன் என்ன செய்தாலும் யாரும் கண்டிக்கவில்லை. அத்துடன், அவன் கேட்டபோதெல்லாம் பணம் கிடைத்தது. அதனால், மனம் போனபடி வளர்ந்து, பதின்ம வயது முடிவதற்குள் எல்லாவித தீய பழக்கங்களும் வந்தடைந்தன.

அளவுக்கு மிஞ்சினால்என்று சொல்லிவைத்திருப்பது அமுதத்திற்கு மட்டுமல்ல.

ஆனால், குழந்தைகளே அப்படிக் கவனிக்கப்பட்டால்தான் பிறருக்குத் தன்மேல் அன்பு என்று தவறாக நினைப்பார்கள். கண்டிக்கும் உறவினர்கள், வேண்டாதவர்கள் ஆகிவிடுவார்கள்.

அவர்களுக்குத்தான் அறியாமை என்றால், பெரியவர்களுக்கு புத்தி எங்கே போயிற்று?

கதை:

சிறு வயதில் காரமாக ஏதாவது சாப்பிடுகையில், குடிக்க நீர் வேண்டுமென்று அலறுவேன்.

ஓரிரு முறை அம்மா கொண்டுவந்து கொடுத்தாள். அதன்பின், “முதலிலேயே எடுத்து வைச்சுக்கறதுக்கென்ன?” என்றுவிட்டாள்.

எங்கள் குடும்ப வழக்கப்படி, பாதி சாப்பிடும்போது கண்டிப்பாக எழுந்திருக்கக் கூடாது. ஒவ்வொருமுறையும் எனக்கும் முன்னேற்பாடாக குடிநீர் எடுத்து வைத்துக்கொள்ளவும் தோன்றாது.

இப்படியே பலமுறை ஆனபிறகு, நான் சாப்பிடும்போது இடையில் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தையே விட்டுவிட்டேன்.

அம்மா காட்டியது ஆக்ககரமான கட்டொழுங்கு. மறைமுகமாக, `எல்லாவற்றிற்கும் பிறரை நம்பிக்கொண்டு இருக்காதே!’ என்று போதித்திருக்கிறாள்.

வேறு சிலர் தாம் வளர்க்கும் குழந்தைகள் எந்த ஒன்றிற்கும் தம்மை எதிர்பார்ப்பது பெருமைக்குரிய விஷயம் என்று நினைக்கிறார்கள், அது எங்கு கொண்டுவிடும் என்று உணராது.

கதை:

ஒரு வயசிலிருந்தே பாபு  எங்கிட்டதான் இருக்கான். அவன் அம்மா இங்கே வந்திருந்தபோது, அவகூட போகமாட்டேன்னு என்னைக் கெட்டியாப் பிடிச்சுண்டான்,” என்று பெருமை பேசுவாள் பாட்டி.

அந்த வயதுக் குழந்தைக்கு அவ்வளவெல்லாம் தெரியுமா என்பது சந்தேகம்தான்.

பாபுவின் தாய் அகாலமாக இறந்தது பாட்டிக்கு சௌகரியமாகப் போயிற்று. தனக்குத் தோன்றியபடி வளர்த்தாள். அவன் கேட்டதெல்லாம் கிடைத்தது.

என்ன தவறு செய்தாலும், `குழந்தைதானே!’ என்ற மன்னிப்பு கிடைத்துவிடும். அதுவே அசட்டுத்துணிச்சலுக்கு வழிகோலியது.

அரை மணிக்கு ஒருமுறை கேட்டு, காப்பி குடித்தான். ஆனால், சுறுசுறுப்பு கிடையாது. அவனுடன் சோம்பலும் வளர்ந்தது. சற்றே பெரியவனாக ஆனதும், அவனால் செய்யக்கூடிய எளிய வேலைகளைக்கூட பாட்டிதான் செய்யவேண்டும்.

கெஞ்சறான். பாவமா இருக்கு!” என்பாள் பாட்டி.

தான் பார்ப்பவர்கள் எல்லாரும் தன்னை அப்படி நடத்தமாட்டார்கள் என்று புரிந்தபோது, பாபுவிற்குத் தன்னிரக்கம் மிகுந்தது.

ஏனோ என்னை யாருக்குமே பிடிக்கவில்லை,’ என்று அழுவான்.

செல்லமான வளர்ப்புஎன்ற பெயரில் தன்னைப் பிறரது ஏளனத்திற்கு ஆளாகும்படிச் செய்த பாட்டியின்மேல் வெறுப்புதான் எழுந்தது.

தான் எங்கு தவறிழைத்தோம் என்று அந்த பாட்டிக்குப் புரியவில்லை. `எவ்வளவு அருமையா வளர்த்தேன்!’ என்று புலம்பினாள்.

பாபுவைப்போல் வளர்க்கப்படும் குழந்தைகளால் சிறிய மனப்பளுவைக்கூடத் தாங்கமுடியாமல் போய்விடும். எப்போதும் யாரையாவது சார்ந்து இருந்தால்தான் தைரியமாக உணர்வார்கள். இதனாலேயே நிறைய வாய்ப்புகளை இழக்க நேரிடலாம்.

எவருக்கும் சில சமயங்களில் பிறரை நாட வேண்டியிருக்கும். அதற்காக, எப்போதும் பிறரை நாடுவது ஏமாற்றத்தில்தான் கொண்டுவிடும்.

கதை:

ஆயிஷா எங்கள் பக்கத்து வீட்டுப்பெண். ஆறு அண்ணன்மார்களுக்குப்பிறகு பிறந்த குழந்தை. தன்னைக் கொஞ்சிய தந்தையிடம் அவளும் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவாள்.

மூத்தவர்கள் உள்பட, குடும்பத்தில் அனைவரும் அவளைத் தாங்கினார்கள். மகாராணிபோலவே நடந்துகொண்டாள். ஒரு அண்ணனை மரியாதையின்றி பேசுவதையும், அவன் பொறுத்துப்போவதையும் பார்த்திருக்கிறேன்.

பிடிவாதம், சோம்பல் என்று பல வேண்டாத குணங்கள் வந்தபோதும், யாருக்கும் அவளை தரக்குறைவாக நினைக்கத் தோன்றவில்லை.

ஆண்களிடம் எப்படிக் குழைந்து நடப்பது என்று புரிந்திருந்ததால் அப்பாவி ஒருவனை மயக்குவது ஆயிஷாவுக்குக்  கடினமாக இருக்கவில்லை.

பாவம்!’ என்று நாங்கள் அவனுக்காகப் பரிதாபப்பட்டோம்!

நான் உனக்காக எதுவும் செய்யமாட்டேன். எப்போதும் நீதான் விட்டுக்கொடுக்க வேண்டும்,’ என்று தம்பதியரில் ஒருவர் மட்டும் அதிகாரமாக நடந்தால், தாம்பத்தியம் எப்படி மகிழ்ச்சியாக இருக்கும்?

கதை:

இடம்: பள்ளிக்கூட ஆசிரியர்களின் அறை.

வம்புக்கான நேரம். (பெண்கள் பொது அறிவு பெறுதல், ஒருவருடன் ஒருவர் பழகக் கற்பது என்றுகூட வைத்துக்கொள்ளலாம்)

பிரசவமானதும் பத்தியச் சாப்பாடு, உடல் நோவு, ஓய்வே இல்லாமல் சிசுவைக் கவனிக்க வேண்டியிருப்பது என்று நாங்கள் எதிர்மறையாகவே அடுக்கியபோது, மிஸஸ் சிங் மட்டும் மாற்றுக்கருத்து தெரிவித்தாள்:

பிள்ளை பெற்றபிறகு எல்லாரும் என்னை மிகுந்த கரிசனத்துடன் நடத்துவார்கள். எனக்குப் பிடித்த விஷயம் அது!” என்று அவள் கூற, உடன் இருந்தவர்கள் எல்லாரும் சிரித்தோம்.

சிறு வயதிலேயே தாயை இழந்தவள் அவள். தந்தை மறுமணம் செய்துகொண்டு, அவளை ஏதோ காப்பகத்தில் விட்டுவிட்டார். மாதாமாதம் பணம் கட்டுவதோடு அவருடைய பொறுப்பு முடிந்தது என்று எண்ணியிருந்திருப்பார்.

அவள் வளர்ந்தபோது, அத்தியாவசியத் தேவைகள் கிடைத்தன. ஆனால், அன்புடன் கவனிக்க ஒருவரும் இல்லையே என்ற ஏக்கம் அவளுக்குள் இருந்திருக்கிறது.

கரிசனமான கணவன்

அன்பான கணவன்அவ்வப்போது

மனைவியின் உடல்நலம் கெட்டிருக்கும்போது அவள்மீது பரிவு காட்டி, `ஐயோ! உனக்கு ஏதாவது ஆகிவிட்டால், என் கதி!’ என்று கணவன் கலங்குவது அவளுக்குப் பெருமையை அளிக்கலாம்.

ஆனால், பிற சமயங்களில் அதிகாரமாக, இல்லை, அலட்சியமாக நடத்தும் அவன் அப்போது மட்டும் அன்பாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டால், அவள் நிரந்தர நோயாளியாகிவிடும் அபாயமும் உண்டு.

பணமே பலம்

குழந்தைக்காகச் செலவிட நேரம் கிடைக்கவில்லை,’ என்ற குற்ற உணர்ச்சியைப் போக்கிக்கொள்ள பணத்தால் ஈடு செய்கிறார்கள் பல பெற்றோர்.

இதனால் குழந்தை புரிந்துகொள்வது: என்ன தவறு செய்தாலும் பணத்தால் ஈடுகட்டிவிடலாம்.

தேவைக்கு அதிகமாகப் பணம் கொடுப்பதோ அவனுக்காகச் செலவழிப்பதோ அன்பில்லை. அது நம் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் வழி.

அன்புடன் கண்டிப்பும் சேர்ந்திருந்தால்தான் ஒரு குழந்தை சுயநலம் ஒன்றே குறிக்கோளாக இல்லாது, பிறர் மதிக்க வளரும்.

என் குழந்தை ஒரு நாள் பெரியவனாக ஆவான். அப்போது, அவனுக்கு இந்தக் குணங்கள் வேண்டியிருக்கும்என்று சற்றே யோசித்தால், நல்ல பழக்கங்களை விதைக்கமுடியுமே!

அப்படி வளர்த்தவர்களை அவன் என்றும் மறக்கமாட்டான். நன்றியுடன் நினைவுகூர்வான்.

-:நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர்-/- சமூக ஆர்வலர் :-மலேசியா.

தொடரும்.... 
👉அடுத்தப்பகுதி வாசிக்க... அழுத்துக 
👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக 

No comments:

Post a Comment