பழகத் தெரிய வேணும் – 31

தன்னம்பிக்கை கொண்ட பெண்ணா? ஐயோ!

அம்மாவின் பாராட்டு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் ஒரு சின்ன உதவி செய்துவிட்டு, “நான் சமத்து, இல்லே?” என்று கேட்பான் நான்கு வயதான அக்குழந்தை.

 

திரும்பத் திரும்பநான் குட் பாய், இல்லே?’ என்னும் குழந்தையிடம், `உனக்கு ஆனாலும் ரொம்பத்தான் கர்வம்!’ என்று பழிப்பவர்கள் குழந்தைகளின் மன வளர்ச்சியைப் புரிந்துகொள்ளாதவர்கள்.

 

அக்குழந்தை பிறரைத் தாழ்த்தவில்லை. தான் எப்படிப்பட்டவன் என்று பிறர் சொல்லித்தான் தெரியவேண்டிய நிலை அப்பிராயத்தில்.

 

பாராட்டு கிடைத்தால், தன்னம்பிக்கையும் அவனுடன் வளரும்.

 

ஆனால், பெரியவர்களாகியும் பிறரைத் தாழ்த்தி, தன்னை உயர்த்திக் கொள்பவர்கள்தாம் அகங்காரம் (ஈகோ) பிடித்தவர்கள்.

 

ஆண் ஒருவன் பிறர் தன்னை அவமானப்படுத்தும்போது எதிர்த்தால், ‘தன்னம்பிக்கை உடையவன்என்று பாராட்டும் இவ்வுலகம்.

 

ஆனால், தன்னம்பிக்கை கொண்ட பெண் அப்படிச் செய்யும்போது, கர்வி, அகங்காரம் பிடித்தவள் என்று பலவாறான பழிச்சொற்களுக்கு ஆளாகிறாள். எல்லாம், ஆணாதிக்கவாதிகளின் கைங்கரியம்தான்!

 

சில சமயங்களில், நம் கௌரவத்தை நிலைநாட்டிக்கொள்ள கர்வமாக இருப்பதுபோல் நடக்க வேண்டியிருக்கிறது.

 

கதை:

கோலாலம்பூரில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், சங்கத் தலைவர் ஒருவர் ஆணித்தரமாகக் கூறியது: ”எல்லாப் பெண்களுக்கும் தம் கணவரைக் கொல்லவேண்டும் என்ற எண்ணம் உண்டு. அதனால்தான் தொலைக்காட்சியில் வரும் தமிழ் சீரியல்களை விரும்பிப் பார்க்கிறார்கள்!”

பெண்களை மட்டம் தட்டுவது அவருக்கு வேண்டுமானால் பெருமை அளிக்கும் விஷயமாக இருக்கலாம்.

ஆனால், எல்லாப் பெண்களும் தலையைப் பக்கவாட்டில் அசைத்து, நெற்றியைச் சுருக்கியபடி ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.

எனக்கும் அவர் கருத்தில் உடன்பாடில்லை.

நம்மை அவமானப்படுத்திவிட்டாரே!’ என்று குமுறிய பெண்கள் சார்பில் நான் மேடையேறி, “நான் சீரியல் பார்ப்பதில்லை,” என்று ஆரம்பித்தேன்.

எதிர்ப்பு எழலாம் என்பதையே எதிர்பாராதிருந்தவர் அவசரமாக, “அப்போ, உங்க திருமண வாழ்க்கையிலே பிரச்னை இல்லை,” என்று குறுக்கிட்டு, சமாளிக்கப் பார்த்தார்.

 

தான் எப்படிப்பட்டவன் என்பது புரியாதவனுக்குத்தான், ‘நீங்கள் என்னைப்போல் இல்லை!’ என்று வெளிப்படையாகவே பிறரைத் தாழ்த்திப் பேசும் குணம் எழுகிறது.

 

எனக்குத் தெரிந்த அன்பான பெண்களும் பார்ப்பதுண்டு. ‘இப்படிக்கூட பெண்கள் இருப்பார்களா!’ என்ற மலைப்பு எழ, இத்தகைய நாடகங்களைத் தொடர்ந்து பார்க்கிறார்கள் என்று நினைக்கிறேன்,” என்று விவரித்துவிட்டு, “இது ஒரு பெண்ணின் கண்ணோட்டம்,” என்று முடித்தேன்.

 

அரங்கத்தில் சிரிப்பு.

 

பிறரைப் பற்றி மரியாதைக் குறைவாகப் பேசுகிறவர்கள் தன்னம்பிக்கை இருப்பதுபோல் காட்டிக்கொள்பவர்கள்.

 

எல்லாரும், எப்போதும், தம் அதிகாரத்திற்குப் பணிவார்கள் என்று தப்புக் கணக்குப் போட்டு, மரியாதையை எதிர்பார்ப்பவர்கள்.

 

என்னைப் போல் சிலர், ‘நம்மை மதிக்காதவர்களை நாம் என் மதிக்கவேண்டும்?’ ‘யாரும் நம்மைத் தாழ்த்த விடக்கூடாது,’ என்று சிந்தித்து, அதன்படி நடப்பதை எதிர்பாராதவர்கள்.

 

தன்னம்பிக்கை அகங்காரமில்லை

 

பெரியவர்களானதும், தம்மைத் தாமே மதிப்பவர்களுக்கு, பிறரது பாராட்டு அவசியமில்லை. வெற்றி, தோல்வி இரண்டையும் ஒரே மாதிரி ஏற்பது இத்தகையவர்களின் குணம்.

 

வேறு பலர் பிறர் புகழ்வதை எதிர்பார்த்துத்தான் ஏதாவது செய்கிறார்கள்.

 

வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக்கூடாதுஎன்று யாரோ, என்றோ சொல்லியிருப்பது இவர்களுக்குப் பொருந்தாது. கொஞ்சமாகச் செய்தாலும், அவர்களது `ஆற்றல்பலருக்கும் தெரியும்படி செய்வார்கள். அப்போதுதானே பிறர் புகழ்வார்கள்!

 

வெற்றி பெறுவது கடினம். அதைவிடக் கடினம் அதைப் பற்றித் தம்பட்டம் அடிக்காமல் இருப்பது!என்று கூறுகிறார் திரு.அனுபவசாலி.

 

அடக்கம் என்பது..

 

ஒருவர் தன்னைப்பற்றிய உண்மையை ஒத்துக்கொள்வதுதான் அடக்கம்.

 

அமெரிக்காவில் பேராசிரியையாக இருக்கும் என் மகள், “நான் முன்னுக்கு வந்த காரணம் என் தாய்தான். பள்ளிக்கூடமும் பெரிதளவில் உறுதுணையாக இருந்தது,” என்று சொல்லக் கேட்டு அங்குள்ளவர்கள், “உன் வெற்றிக்கு நீ மட்டும்தான் காரணம். அதில் ஏன் பிறருக்குப் பங்கு அளிக்கிறாய்?” என்று கோபித்தார்களாம்.

 

இவ்வாறு நன்றியைக் கொன்றுதான் அகங்காரம் வளர்கிறது. இங்கு நேர்மைக்கோ, எளிமைக்கோ இடமில்லை.

 

காலம் மாறும்போது

 

மனைவி இருக்க, வேறொரு பெண்ணை நாடினான் அவன்.

 

நீங்கள் ஏதோ செய்துகொள்ளுங்கள். ஆனால், என்னை விட்டுப் போய்விடாதீர்கள்!” என்று மனைவி கதறியதாகப் பெருமையுடன் எழுதிக்கொண்டான்.

 

பெண்கள் ஆண்களை எதிர்ப்பது தகாத குணம், அவர்களைச் சார்ந்து இருப்பதுதான் அழகு என்று காலம் காலமாக நம்ப வைத்திருக்கிறார்கள். அவள் ஏன் கதறமாட்டாள்?

 

காலப் போக்கில் சமூகமும் மாறிக்கொண்டு வருகிறது. தன்னை மிதியடிபோல் பாவிக்கும் கணவருடன் வாழ விரும்பாது, அத்தகைய பந்தங்களிலிருந்து விலகுகிறார்கள் பெண்கள்.

 

இந்த நூதனப் போக்கு ஆண்களை அதிரவைக்கிறது.

 

என் மாமியாரே மனைவிக்குப் போதிக்கிறாள், ‘விவாகரத்து வாங்கிவிடு,’ என்று. வயதானவர்கள் புத்தி சொல்லவேண்டாமா?” என்று ஒருவர் என்னிடம் புலம்பினார்.

 

குடும்பச் செலவுக்குப் பணமே கொடுப்பதில்லை என்று அவர்மேல் புகார் என்று மட்டும் தெரிவித்தார்.

 

பின், கிடைக்கும் சம்பளம் எந்த வழியில் செலவழிகிறது? அதை நான் கேட்கவில்லை.

 

வேண்டாத பாடம்

 

குழந்தைகள் நல்லது, கூடாதது இரண்டையும் பெரியவர்களிடமிருந்துதான் கற்கிறார்கள்.

 

கதை:

பாட்டியின்  மருமகளான, தன் தாயை மட்டமாக நடத்துவதையும், அவள் அதைப் பொறுத்துப்போவதையும் பார்த்தே வளர்ந்தவள் பிருந்தா.

அவளோ பாட்டிக்குச் செல்லம். அதனால், தான்தான் உயர்த்தி, அம்மாவிடம் ஏதோ குறை என்று தோன்றிப் போயிற்று அந்த எட்டுவயதுப் பெண்ணுக்கு. அவளுடைய அகங்காரம் பெற்ற தாயையே தாக்கும் அளவுக்கு வளர்ந்தது.

 

ஒரு முறை, பாட்டியைப் போலவே அச்சிறுமியும் அலட்சியமாக, அவமரியாதையாக தன் அம்மாவை நடத்த முற்பட்டதைக் கண்டுவிட்ட நான், “நம் குழந்தைகளே நம்மை மதிக்காவிட்டால் எப்படி? இனிமே இப்படிப் பேசினா, வாயில ரெண்டு போடு,” என்றேன் கோபமாக. (சும்மா ஒரு பேச்சுக்குத்தான்!)

 

குழந்தைதானே!’ என்ற அன்புடன், மகளே தன்னைச்  சிறுமைப்படுத்துவதைப் பொறுத்துக்கொண்டாள் தாய்.

 

மிகவும் தாழ்ந்து போய்விட்டால், நமக்கே நம்மைப் பிடிக்காமல் போய்விடும் அபாயம் இருக்கிறதே!

 

அன்புக்காக சுயகௌரவத்தை விட்டுக் கொடுக்கலாமா?

 

:-நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர்-/-சமூக ஆர்வலர்:- மலேசியா.

தொடரும்.... 
👉அடுத்த பகுதியினை வாசிக்க...அழுத்துக 
👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக 

0 comments:

Post a Comment