பழகத் தெரிய வேணும் – 30

-செயலும் விளைவும்-

ஒரு செயல் எண்ணத்திலிருந்து பிறக்கிறது. எண்ணமோ உணர்ச்சியிலிருந்து ஆரம்பிக்கிறது.

அண்மையில் சீனாவில் நடந்தது இது.

கதை:

பெற்றோர் இணங்காததால், ஃபூவும் (Foo) அவன் காதலியும் பிரிய நேரிட்டது. இருவருமே பெற்றோர் நிச்சயித்தவர்களைத் திருமணம் செய்துகொண்டு, ஆளுக்கு ஒரு பிள்ளையும் பெற்றார்கள்.

பல வருடங்களுக்குப்பின் அவர்கள் மீண்டும் சந்திக்க, பழைய காதல் துளிர்த்தது. விவாகரத்து பெற்று, திருமணம் செய்துகொண்டார்கள்.

முதல் திருமணத்தில் பெற்ற குழந்தைகளை இருவருமே உதறித் தள்ளினார்கள். ஃபூவின் மகள் தாயுடனும், மனைவியின் மகன் தந்தையுடனும் வசிக்க ஏற்பாடு செய்துவிட்டு, தனியாக இன்புற்றிருந்தார்கள்.

சில வருடங்கள் கழித்து, தன் மனைவியைக் காணோம் என்று கண்ணீருடன் காவல்துறையினரிடம் புகார் செய்தான் ஃபூ.

விசாரித்துப் பார்த்ததில், அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் நடைபெற்றுக்கொண்டே இருந்தது தெரியவந்தது.

ஒரு பெண் கொலை செய்யப்பட்டாலோ, காணாமல் போனாலோ, முதலில் கணவன்மீதுதான் சந்தேகம் எழும்.

ஃபூவின் வீட்டைச் சுற்றித் தோண்டியபோது, மனைவியின் கை, கால் முதலியவை தனித்தனியாக அகப்பட்டன. உடலோ, கழிவு நீர் சேகரிக்கும் தொட்டிக்குள் (septic tank).

இருவரும், அவர்களுக்கு இருந்த சொத்து தத்தம் குழந்தைகளுக்குத்தான் சேரவேண்டும் என்று சண்டை பிடித்திருக்கிறார்கள். ஆத்திரத்தில், காதல் மனைவியைக் கொன்றுவிட்டான் ஃபூ.

ஆத்திரத்தில் புரியும் செயலால் ஏற்படும் விளைவுகளைப்பற்றி முதலிலேயே யோசிக்காவிட்டால் இப்படித்தான் ஆகும்.

-அதிகாரம் அஞ்சாமையை அளிக்குமோ?

உலகம் முழுவதிலும், எத்தனை அரசியல்வாதிகள் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்திருக்கிறார்கள்!


அரசியலில் ஈடுபட்டால், இவ்வளவு சீக்கிரம் செல்வந்தர்களாக முடியுமா? மக்களை முட்டாளாக்குவது இவ்வளவு எளிதா! எத்தனை அதிகாரம்!’ என்று யோசித்தே பலரும் இத்துறையைத் தேர்ந்தடுக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

 

சற்றே யோசித்துச் செயல்பட்டிருந்தால், ‘பிடிபட்டு விடுவோமோ!’ என்ற அச்சத்துடனேயே ஒவ்வொரு நாளையும் கடத்த வேண்டிய அவசியம் இருக்காது. ஓடி ஒளிந்திருக்கவேண்டிய நிலையும் சிலருக்கு ஏற்பட்டிருக்காது.

 

அரசியலில் முதல் கொள்ளைக்காரர்என்று வர்ணிக்கப்படுகிறார் பிலிப்பீன்ஸ் அதிபராக இருந்த மார்கோஸ். அவரையும், அவரது மனைவியையும் எதிர்த்து நாட்டில் கலகம் விளைந்தது. மக்களை ஏழ்மையில் உழல வைத்துவிட்டு, பெட்டி பெட்டிகளாக ரொக்கப்பணம், நகை, தங்கக்கட்டி என்று சுருட்டிக்கொண்டு, 1986 -ல் தலைமறைவானார்கள் இத்தம்பதியர்.

 

ஹவாயி தீவில் மார்கோஸ் இறந்தபின்னும், அவருடைய உடலை சொந்த நாட்டிற்குக் கொண்டுவர அனுமதி கிடைக்கவில்லை.

 

அவர்களது பேராசையால் நாட்டு மக்கள் ஏழ்மையில் தவித்து, பிழைப்பைத் தேடி வெளிநாட்டுக்குச் செல்லவேண்டிய அவலம். (மலேசியாவில், பிலிப்பீன் நாட்டுப் பெண்கள் வீட்டுப் பணிப்பெண்களாகவோ, அழகு நிலையங்களிலோ வேலை பார்க்கிறார்கள்).

 

பயமும் அசட்டுத்தனமும்

இன்னொரு சாரார், ‘இதைச் செய்தால் என்ன ஆகுமோ!’ என்று அஞ்சி, புதிதாக எதையும் செய்யத் தயங்குவார்கள்.

 

யோசியாமல், அசட்டுத்தனமாக நடக்கிறவர்களும் உண்டு.

 

ஒரு பெண்மணி மின்சாரத்தில் இயங்கிக்கொண்டிருந்த மிக்ஸியின் மூடியைக் கழற்றிவிட்டு, தன் நாக்கை உள்ளேவிட்டு, அரைபட்டுவிட்டதா என்று சோதித்துப்பார்த்தாளாம்! நாக்கு துண்டானதுதான் பலன்.

 

விளைவு தெரிந்தபோதும்..

எந்த விளையாட்டாக இருந்தாலும் உடலின் கை, கால், இடுப்பு என்று ஏதாவது ஒரு பாகத்தில் அடிபட்டுத்தான் ஆகும். தீவிரமாக அதில் ஈடுபடுகிறவர்கள் அதற்கெல்லாம் அஞ்சுவதில்லை. தங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கால் கிடைக்கும் மகிழ்ச்சிக்காக சில காலம் உடல்குறைவுடன் அவதிப்படுவதை சாதாரணமாக ஏற்பார்கள்.

 

நீச்சலா? ஐயோ!

சீனப்பெண்கள் ஒருவரையொருவர் பார்த்து, “நீ நல்ல கலராக இருக்கிறாய்! (You are very fair, lah!)” என்று பாராட்டிக்கொள்வார்கள்.

 

நீச்சல் கற்க ஆரம்பித்த பல சீனப் பெண்மணிகள் முகம் கறுக்கிறதென்று உடனே நிறுத்திவிட்டார்கள்.

 

பல பெண்கள் நின்றுவிட்டார்களே! கறுப்பாகிவிடுவோமோ என்ற பயம் உங்களுக்குக் கிடையாதா?” என்று ஓர் இளைஞன் கேட்டான்.

 

ஆரம்பிக்குமுன், `நீச்சலா! கறுப்பாயிடுவியே!’ என்று சிலர் எச்சரிக்கை செய்ய, ‘அதனால என்ன?’ என்று அலட்சியம் செய்தேன்.

 

விளைவு முதலிலேயே தெரிந்திருந்ததால், கலக்கம் உண்டாகவில்லை. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்திற்கும் ஈடு கொடுக்க முடிந்தது.

 

இயற்கைச் சீற்றத்தை வேடிக்கை பார்ப்பது

பூகம்பம், வெள்ளம் போன்ற இயற்கையின் சீற்றத்தின்போது துணிந்து படம் எடுக்கச் சென்ற புகைப்படக்காரர்களில் சிலர் அதற்குப் பலியாகி உள்ளார்கள். அதுதான் தொழில் என்ற நிலையில், எந்த நிமிடமும் ஆபத்து விளையலாம் என்று அவர்களுக்கும் தெரியும்.

 

ஆனால், ‘புதிய அனுபவம் கிடைக்குமே!’ என்ற ஆர்வத்துடன் யாராவது அதை வேடிக்கை பார்க்கச் செல்வார்களா?

 

பிறருக்காகச் செய்யும்போது

நேர்மையானவர்கள் பிறரது நலனைக் கருதி சில காரியங்கள் செய்யும்போது அது அவர்களுக்கே பாதகமாக முடியும் வாய்ப்பு உண்டு.

 

இருப்பினும், ‘இப்படிச் செய்தால் என்ன ஆகும்?’ என்று யோசித்துச் செயல்பட்டால், எந்த விளைவையும் துணிவுடன் ஏற்க முடியும்.

 

கதை:

மனநிலை சரியாக இல்லாது, தன்கீழ் வேலைபார்த்த எல்லாரையும் பொறுக்கமுடியாத அளவுக்கு அவமரியாதையாக நடத்திய எங்கள் தலைமை ஆசிரியைப்பற்றி நான் விரிவாக ஆங்கில தினசரியில் எழுதினேன்.

அது பிரசுரமானதும், ‘இனி எப்படி நீ அவளிடம் வேலை பார்க்க முடியும்?’

உன் வேலை போய்விடப்போகிறது!’ என்று பலரும் அச்சுறுத்த முயன்றார்கள்.

நமக்கு இல்லாத தைரியம் இவளுக்கு மட்டும் ஏன்?’ என்ற பொறாமைதான் காரணம். அவளைப் பொறுக்க முடியாதிருந்த நிலைதான் பலருக்கும். ஆனால், அவர்களுக்கு அவளை எதிர்க்கும் துணிச்சல் இருக்கவில்லை.

அடுத்த சில மாதங்கள் மேலிடத்திலிருந்து என்னை மிரட்டிப்பார்த்தார்கள். நான் மசியவில்லை.

 

நான் செய்த காரியத்தால் தலைமை ஆசிரியை என்மீது காதல் கொள்வாள் என்று நான் எதிர்பார்க்கவில்லைதான். ஆனால், நான் எதிர்ப்படும்போதெல்லாம் என்னை வெறுப்புடன் பார்த்தது மிகை.

 

(இறுதியில், அவளுக்கு பதவிகுறைப்பு செய்யப்பட்டது).

 

லவ் யு

காதலர்களோ, தம்பதியரோ, நிறைய சண்டை போட்டுவிட்டு, இந்த மந்திரத்தை உச்சரித்தால், சமாதானமாகிவிடுவார்கள்.

 

இது தமிழ்த்திரைப்படங்கள் நமக்குக் கற்றுக்கொடுக்கும் முட்டாள்தனமான பாடங்களுள் ஒன்று.

 

சொல்லும் செயலும் ஒன்றாக இருந்தால்தான் நம்பிக்கை பிறக்கும்.

மனைவியை அடித்துவிட்டு, ` லவ் யுஎன்று அவளைக் கொஞ்சி சமாதானப்படுத்த முயன்றால், அது அன்பில் சேர்த்தியா?

அவசரம் சுறுசுறுப்பாகாது

அதிவேகமாக எதையோ செய்வதுபோல் ஒருவர் நடந்துகொண்டால், அவர் சுறுசுறுப்பானவர், செயல்வீரர் என்றாகாது.

ஒருவரது செய்கையால் ஏதேனும் மாற்றம் நிகழவேண்டும்.

கதை:

நீங்கள் தினசரியில் ஏதேதோ எழுதுகிறீர்களே! என்ன பயன்?” ஆண்களும் பெண்களும் கேலியாக என்னைக் கேட்டிருக்கிறார்கள்.

நாம் சமூகத்துடன் ஒட்டி நடக்கவேண்டும்,” என்ற அறிவுரை வேறு!

சகஆசிரியர் ஒருவர் மாணவியை மானபங்கம் செய்ய முயன்றார் என்றெழுதியபோது, என்னமோ, நான்தான் கெட்டவள் என்பதுபோல் என்னைத் திரும்பத் திரும்ப குறுக்கு விசாரணை செய்தார்கள் மேலிடத்திலிருந்து.

 

நம் செய்கையால் அநீதியான எதையாவது மாற்ற நினைத்தால், பலரையும் சிந்திக்க வைக்கிறோம். அதுதான் பயன்.

 

இருபத்தைந்து வருடங்களுக்குப்பின், மகளை, மாணவியை, பலாத்காரம் செய்ய முயன்ற ஆண்களுக்கு இருபது ஆண்டுகளுக்குக் குறையாமல் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது என்பது மகிழ்ச்சிகரமான விஷயம்.

உடனுக்குடன் எதுவும் மாறுவதில்லை. அதற்காக, முயற்சி செய்யாமல் இருந்துவிடலாமா?

:-நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர்-/-சமூக ஆர்வலர்-/-மலேசியா.

தொடரும்.... 
👉அடுத்த பகுதியினை வாசிக்க...அழுத்துக 

👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக 

0 comments:

Post a Comment