இனியவை நாற்பது/08/இனிது,இனிது இவை இனிது


[இனியவை நாற்பது-இதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார் எனப்படுவர். இவர் தந்தையார் மதுரைத் தமிழாசிரியர் பூதன். இவர் வாழ்ந்த நாடு பாண்டி நாடு.இவரது காலம் கி.பி.725-750 எனப்பட்டது.இனியவை நாற்பது 40 வெண்பாக்களைக் கொண்டது.]


இனிது,இனிது இவை இனிது- தொடர்கிறது.....

வெண்பா 36:

அவ்வித் தழுக்கா றுரையாமை முன்இனிதே

செவ்வியனாய்ச் செற்றுச் சினங்கடிந்து வாழ்வினிதே

கவ்வித்தாங் கொண்டுதாங் கண்டது காமுற்று

வவ்வார் விடுதல் இனிது.     

விளக்கம்மனக்கேடான பொறாமைச் சொற்களைச் சொல்லாமை இனிதாகும். மனக்கேடு இல்லாமல் சினத்தை விடுத்து வாழ்வது இனிதாகும். தனக்கு வேண்டிய பொருளை அபகரிக்காமல் அதனை மறந்து விடுதல் இனிது.

 

வெண்பா 37:

இளமையை மூப்பென் றுணர்தல் இனிதே

கிளைஞர்மாட் டச்சின்மை கேட்டல் இனிதே

தடமென் பணைத்தோள் தளிரிய லாரை

விடமென் றுணர்தல் இனிது.

விளக்கம்தனக்குள்ள இளமைப் பருவத்தை மூப்பென்று உணர்தல் இனிது. சுற்றத்தாரிடம் இனிய சொற்களைக் கேட்பது இனிதாகும். மூங்கிலை யொத்த தோள்களையும் தளிரையொத்த மென்மையையும் உடைய மகளிரை விஷம் என்று உணர்தல் இனிது.

 

வெண்பா 38:

சிற்றா ளுடையான் படைக்கல மாண்பினிதே

நட்டா ருடையான் பகையாண்மை முன்இனிதே

எத்துணையும் ஆற்ற இனிதென்ப பால்படுங்

சுற்றா உடையான் விருந்து.   

விளக்கம்ஆயுதங்களைக் கொண்ட இளம் வீரர்கள் படை இனிது. சுற்றத்தை உடையவனின் பகையை அழிக்கும் தன்மை இனிது. கன்றோடு பொருந்திய பசுவுடையவனது விருந்து எல்லா வகையினும் இனியது.

 

வெண்பா 39:

பிச்சைபுக் குண்பான் பிளிறாமை முன்இனிதே

துச்சி லிருந்து துயர்கூரா மாண்பினிதே

உற்றபே ராசை கருதி அறனொரூஉம்

ஒற்கம் இலாமை இனிது.      

விளக்கம்பிச்சையெடுத்து உண்பவன் கோபம் கொள்ளாதிருத்தல் இனிது. துன்பத்தில் இருந்தாலும் துன்பம் கூறாது இருப்பவனின் பெருமை இனிது. மிக்க பேராசையைக் கொண்டு அறவழியிலிருந்து நீங்காதிருக்கும் உறுதி இனிது.


வெண்பா 40:

பத்துக் கொடுத்தும் பதியிருந்து வாழ்வினிதே

வித்துற்குற் றுண்ணா விழுப்பம் மிகஇனிதே

பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய

கற்றலிற் காழினியது இல்.   

விளக்கம்:பத்துப் பொருள் கொடுத்தாயினும் உள்ளூரிலிருந்து வாழ்தல் இனிது. விதைக்கென வைத்த தானியத்தை உண்ணாதிருத்தல் இனிது. பல நாட்களுக்கு நன்மையைச் சொல்லும் நூல்களைக் கற்பதைப்போல இனிதான செயல் வேறு ஒன்று இல்லை.

இனியவை நாற்பது முற்றிற்று-ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துங்கள்👉 Theebam.com: இனியவை நாற்பது /01/இனிது,இனிது இவை இனிது:

தேடல் தொடர்பான தகவல்கள்:

இனியவை நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இனிது, இனியவை, இலக்கியங்கள், நாற்பது, இனிதாகும், கீழ்க்கணக்கு, பதினெண், முன்இனிதே, உணர்தல், விருந்து, இனிதே, மாண்பினிதே, வாழ்வினிதே, சங்க, விடுதல், றுணர்தல்.


0 comments:

Post a Comment