இனியவை நாற்பது/06/இனிது,இனிது இவை இனிது

 [இனியவை நாற்பது-இதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார் எனப்படுவர். இவர் தந்தையார் மதுரைத் தமிழாசிரியர் பூதன். இவர் வாழ்ந்த நாடு பாண்டி நாடு.இவரது காலம் கி.பி.725750 எனப்பட்டது.இனியவை நாற்பது 40 வெண்பாக்களைக் கொண்டது.]

இனிது,இனிது இவை இனிது- தொடர்கிறது.....

 

வெண்பா 26:

நச்சித்தற் சென்றார் நசைகொல்லா மாண்பினிதே

உட்கில் வழிவாழா ஊக்கம் மிகஇனிதே

எத்திறத் தானும் இயைவ கரவாத

பற்றினின் பாங்கினியது இல்.         

 

விளக்கம்: ஒரு பொருளை விரும்பித் தன்னை அடைந்தவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுதல் இனிது. மதிப்பு இல்லாதவிடத்து வாழாதவனின் மனவெழுச்சி இனிது. எப்படியானாலும் பிறருக்குக் கொடுக்கும் பொருளை மறைக்காதவனின் அன்பு மிகப்பெரியது.

 

 

வெண்பா 27:

தானங் கொடுப்பான் தகையாண்மைமுன் இனிதே

மானம் படவரின் வாழாமை முன்இனிதே

ஊனங்கொண் டாடார் உறுதி உடையவை

கோள்முறையாற் கோடல் இனிது. 

 

விளக்கம்: அபயம் கொடுப்பவனின் ஆண்மை மிக இனிது. மானம் இழந்து வாழாமை இனிது. குற்றம் கூறாதவரின் உறுதி இனிது. நன்மையானவற்றை முறைப்படிப் பெறுதல் இனிது.

 

 

வெண்பா 28:

ஆற்றாமை யாற்றென் றலையாமை முன்இனிதே

கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வனிதே

ஆக்க மழியினும் அல்லவை கூறாத

தேர்ச்சியின் தேர்வினியது இல்.      

 

விளக்கம்: ஒரு வேலையைச் செய்யத் தெரியாதவனிடத்து ஒரு வேலையைக் கொடுக்காமை இனிது. எமனின் வருகையை எதிர்பார்த்து வாழ்வது இனிது. செல்வம் இழந்தாலும் பாவச் சொற்களைக் கூறாதிருப்பது எல்லாவற்றையும் விட இனியது.

 

 

வெண்பா 29:

கயவரைக் கைகழிந்து வாழ்தல் இனிதே

உயர்வுள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே

எளியர் இவரென் றிகழ்ந்துரையா ராகி

ஒளிபட வாழ்தல் இனிது.      

 

விளக்கம்: கீழ் மக்களை நீக்கி வாழ்தல் இனியது. தன் உயர்வினை நினைத்து ஊக்கத்துடன் வாழ்தல் இனிது. வறியவர் என்று இகழாது புகழ்பட வாழ்தல் இனிதாகும்.

 

 

வெண்பா 30:

நன்றிப் பயன்தூக்கி வாழ்தல் நனிஇனிதே

மன்றக் கொடும்பா டுரையாத மாண்பினிதே

அன்றறிவார் யாரென் றடைக்கலம் வெளவாத

நன்றியின் நன்கினியது இல். 

 

விளக்கம்: ஒருவர் செய்த உதவியினை நினைத்து வாழ்தல் இனிது. நீதி சபையில் நடுநிலை தவறாமல் இருத்தலின் பெருமை இனிது. யாருக்கும் தெரியாது என்று அடைக்கலமாய் வந்த பொருளை அபகரிக்காமல் இருத்தல் இனிதின் இனிது.

 

இனியவை நாற்பது 

பகுதி: 7 வாசிக்க அழுத்துங்கள்👉Theebam.com: இனியவை நாற்பது /07/இனிது,இனிது இவை இனிது:

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துங்கள்👉 Theebam.com: இனியவை நாற்பது /01/இனிது,இனிது இவை இனிது:

 

தேடல் தொடர்பான தகவல்கள்:

இனியவை நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இனிது, வாழ்தல், இலக்கியங்கள், இனியவை, இனிதே, பொருளை, பதினெண், நாற்பது, கீழ்க்கணக்கு, உறுதி, இனியது, நினைத்து, முன்இனிதே, மானம், ஊக்கம், சங்க, மாண்பினிதே, வாழாமை

No comments:

Post a Comment