ரோபோவுக்கென தயாராகும் தோல்!
தொடு உணர்வுள்ள செயற்கைத் தோலை உருவாக்க ஆராய்ச்சிகள் நடக்கின்றன. இங்கிலாந்தின் கிளாஸ்கோ பல்கலைக்கழக பொறியாளர்கள், அத்தகைய மின்னணு தோலை வடிவமைத்துள்ளனர்.
'இ-ஸ்கின்' எனப்படும் அந்த செயற்கைத் தோல், மனிதத் தோலில் தொடு உணர்வைத் தரும் நியூரான்களை காப்பியடித்து உருவாக்கப்பட்டுள்ளது.ஒரு ரோபோவின் கையில் பொருத்தப்பட்ட இ-ஸ்கின்னின் மீது ஒரு பொருள் பட்டால், அதை உணரும் உணரிகள், தொட்ட இடத்திற்கு அருகே உள்ள பிற உணரிகளுக்கு தகவலை அனுப்புகின்றன. இந்த உணரிகளுக்கு கணினித் திறன் உண்டு.
எனவே, ஒரு சிலிக்கன் சில்லுக்கு தகவலை அனுப்பாமல், அருகில் உள்ள உணரிகளே அந்தப் பொருளை விட்டு விலகுவதா அல்லது பிடித்துக்கொள்வதா என்று முடிவெடுத்து தகவலை அனுப்பிவிடுகின்றன. அதன்படி, ரோபோ கையும், விரல்களும் செயல்படுகின்றன. அதாவது, செயற்கை இ-ஸ்கின் பூராவும் மூளை தான். 'சயின்ஸ் ரோபோடிக்ஸ்' இதழில் இந்த கண்டுபிடிப்பு வெளிவந்துள்ளது.
பறவை விரட்டும் ட்ரோன்!
பயிர்களை நாசமாக்கும் பறவைகளை விரட்ட, சோளக்கொல்லை பொம்மை, படபடக்கும் ரிப்பன் போன்றவை பலனளிப்பதில்லை. எனவே, இதற்கு தானியங்கி ட்ரோன்கள் தான் சரி என்கின்றனர், அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக் கழக விஞ்ஞானிகள். ட்ரோன்களுக்கு கழுகு போன்ற பறவைகளின் தோற்றத்தைத் தருவது, சுழலும் விசிறிகளுக்கு மின்னும் வண்ணம் பூசுவது போன்ற உத்திகளை அவர்கள் முயன்று வருகின்றனர். பறவைகளைக் கொல்லாமல், அருகே சென்றாலே, அவற்றின் மிரட்டலான 'உய்ங்' ஓசையால் பறவைகள் மிரண்டு பறந்துவிடும்.
சூப்பரான சூப்பர் கணினி!
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்திலுள்ள, ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வகத்தில் இருக்கிறது, 'பிரான்டியர்' என்ற கணினி. இதை உலகிலுள்ள அதிதிறன் கணினிகளை பட்டியலிடும் 'டாப் 500' என்ற இணையதளம், உலகின் முதலாவது 'அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்' என்று மதிப்பிட்டு உள்ளது. அது மட்டுமல்ல, உலகின் முதலாவது 'அதிவேக செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட கணினி' என்ற சிறப்புப் பட்டத்தையும் டாப் 500 தளம், பிரான்டியருக்கு வழங்கியுள்ளது.
'திருந்த' நினைக்கும் டிக் டாக்!
இந்தியாவில் 'டிக் டாக்'கிற்குத் தடை. ஆனால், அமெரிக்கா போன்ற நாடுகளில் அது கோலோச்சுகிறது. அண்மையில் சில அமெரிக்க மாநிலங்களின் அரசுகள், டிக் டாக் பயனாளிகள் மத்தியில் ஒரு ஆய்வை துவங்கியுள்ளனர்.
இளம் வயதினரின் உடல், உள்ளம் ஆகியவற்றின் மேல் டிக் டாக் ஏற்படுத்தும் தாக்கத்தை அவர்கள் ஆராய்வர். குறிப்பாக, டிக் டாக்கின் அடிமைப்படுத்தும் தன்மை குறித்தும் ஆய்வு நடக்கும்.எனவே, திரை நேரக் கட்டுப்பாட்டுவசதியை டிக் டாக் அறிமுகப்படுத்தி உள்ளது.
பயனாளிகள் ஒரு நாளைக்கு 40 நிமிடம் முதல் 60 நிமிடம் வரைதான் டிக் டாக்கை பயன்படுத்துவது என்று சுய வரம்பை வைக்கலாம். கூடுதல் நேரம் பார்க்க முயன்றால், 'அக்கரையுள்ள' அறிவுறுத்தல்களை டிக் டாக்கே அனுப்பும். இதே போன்ற வசதியை, பல மாதங்களுக்கு முன்பே, கூகுள், ஆப்பிள், நெட்பிளிக்ஸ்,இன்ஸ்டாகிராம் போன்றவை கொடுத்துவிட்டன. டிக் டாக் லேட்.
சாலையில் கிடைக்கும் மின்சாரம்!
மின் வாகன மின் கலன்களில் மின்னேற்றம் செய்ய ஆகும் நேரம், பெட்ரோல் போட ஆகும் நேரத்திற்குள் இருக்கவேண்டும். இதுதான் மின் வாகன பயனாளிகள் எதிர்பார்ப்பு. ஒரே மின்னேற்றத்தில், சில நுாறு கி.மீ தொலைவுக்கு மின் வாகனம் செல்லவேண்டும் என்பதும் அவர்களது எதிர்பார்ப்பு.
இதற்கு தீர்வாக மின்கலன்களில் புதுமைகள் செய்வதற்கு பதில், சாலைகளையே மின்னேற்றத்திற்கு பயன்படுத்தலாம் என்கிறது இத்தாலியின் ஸ்டெல்லான்டிஸ் நிறுவனம்.
உலகின் ஐந்தாவது பெரிய வாகன தயாரிப்பாளரான இது, இத்தாலியில் 1,050 மீட்டர் நீள சாலையை அமைந்து, தனது டைனமிக் வயர்லெஸ் பவர் டிரான்ஸ்பர் என்ற தொழில்நுட்பத்தை சோதித்து வருகிறது.
இந்த சாலையின் நடுவே, கம்பியின்றி மின்சாரத்தை செலுத்தும் தகடுகள் பதிக்கப்பட்டுஉள்ளன. அதேபோல மின் வாகனங்களின் அடியில் மின் வாங்கிகள் பொருத்தப்பட்டிருந்தால், சாலையில் அவை பயணிக்கும்போதே மின் கலனில் மின்னேற்றம் நடக்கும்.
இதனால், ஒரு மின் வாகனம், மின்னேற்றத்திற்காக எங்கும் நிற்க வேண்டியதில்லை. மின் கலனில் சார்ஜ் கம்மியாக உள்ளதே என்ற கவலையும் தேவையில்லை. சோதனைகளில் வெற்றி கண்டுள்ள ஸ்டெல்லான்டிஸ், விரைவில் இந்த நுட்பத்தை நடைமுறைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டு வருகிறது.
படித்ததில் பிடித்தது
No comments:
Post a Comment