'தனிமை' (சிறுகதை)


தனிமை என்பது எதோ தனிய காலம் கழிப்பது அல்ல, சிலவேளை எம்மை சுற்றி பலர் இருப்பார்கள், என்றாலும் சில காரணங்கள் எம்மை அவர்களில் இருந்து மனதளவில் தனிமை படுத்துவதும் உண்டு. வெளியில் பேசி கதைத்தாலும் உள்ளுக்குள் தனிமை வாட்டிக்கொண்டுதான் இருக்கும். ஒவ்வொருவருக்கும் சில கருத்துக்கள், நடவடிக்கைகள், நம்பிக்கைகள் இருக்கும். அதற்கு புறம்பானவர்கள் உன்னை முழுதாக சூழ்ந்து இருக்கும் பொழுது நீ தனிமையாகி விடுவாய்!. அப்படித்தான் என் பாடசாலை வாழ்வும் அமைந்தது.

 

நான் யாழ் மத்திய கல்லூரியில் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது, அதற்கு முன்னால் அமைந்து இருந்த யாழ் நூலகத்திற்கு போவது வழமை. இது  தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாக அன்று திகழ்ந்தது. இது 1981 ஆம் ஆண்டு ஜூன் முதலாம் திகதி, 97,000 அரிய நூல்களுடன் அரச காடையர்களால் எரிக்கப்பட்டு, யாழ் இளைஞர்களைப் படிப்பில் இருந்து தனிமை படுத்த எடுத்த கொடூரமான நிகழ்வு இன்றும் என் மனதில் உண்டு. அங்கு பல நூல்களை வாசிக்க தொடங்க, சமயம், சம்பந்தமாக பல கேள்விகள் என் மனதில் எழ தொடங்கின. இதுவரையும் கேள்வி கேட்க்காமல் நம்பி இருந்த பல விடயங்கள், கேள்விகளாக என் மனதை துளைத்தன. அதனால் என்னிலும் சில மாற்றம் ஏற்படுவது என்னால் உணர முடிந்தது.

 

அம்மாவின் கையை பிடித்துக்கொண்டு இன்னும் ஆலயத்துக்கும் சமய பிரசங்கங்களுக்கு போனாலும், எனக்கு அங்கு முழுதாக ஈடுபடமுடியாமல் இருந்தது. என்னை சுற்றி அம்மா, அப்பா  இப்படி பல கூட்டங்கள். இருந்தாலும், அவர்களின் சமய சம்பந்தமான கதைகள், நடவடிக்கைகள் போன்றவற்றின் காரணங்கள் அறிய அறிய, அவை  என்னை அந்த கூடத்தில் இருந்து தனிமை படுத்த தொடங்கின. நான் என் ஆதங்கத்தை கேள்விகளாக கேட்க்கத் தொடங்க,  இவன் உருப்படமாட்டான் என்று அதற்கு பதில் சொல்லாமல், விலத்தி போக தொடங்கினார்கள். இது மேலும் மேலும் தனிமையை கூட்டிகொண்டே போனது. உதாரணமாக, கல்லூரிக்கும் முதல் முதல் போகும் ஒருவன், அவனை சுற்றி பலர் இருந்தாலும், அவன் தொடக்கத்தில் ஒரு தனிமை அவனை வாட்டிக்கொண்டு இருக்கும். அப்படித்தான் எனக்கும் இருந்தது.

 

தனிமை ஒரு வெறியாக, மேலும் மேலும் என் பாட்டில் நூலகம் போய் ஆய்வுகள் செய்ய தொடங்கினேன். இப்ப நானே என்னை தனிமையாக்க தொடங்கிவிட்டேன். நான் அறிந்தவற்றை உதாரணங்களுடனும் காரணங்களுடனும் வாதாடவும் தொடங்கினேன். இது பலரை எண்ணில் இருந்து தூர தூர விலக தூண்டியது. அப்பொழுது தான் எனக்கு புரிந்தது எவ்வளவுக்கு நிறைய விடயங்களை காரணம் அறியாமலே, பகுத்தறியாமலே, நம்பிக்கைகளை வளர்த்துள்ளார் என்பது. இதில் வேடிக்கை என்னவென்றால், எமக்கு பௌதிகவியலில் கிரகங்கள் எப்படி உண்டாகின்றன என படிப்பித்த ஆசிரியை, கிரகணத்தின் போது  இராகு கேது என அழைக்கப்படும் கற்பனை கிரகங்களை சுற்றி வந்து வழிபடுவது தான்!. இது என் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உழைப்புக்காக எதோ பாடம் படிப்பிக்கிறார்கள் போல் தான் எனக்கு தோன்றியது. ஆனால் அவர்களின் நம்பிக்கை வேறு எங்கோ ?

 

என்னை சுற்றி பலர் இருந்தாலும், நான் மனத்தளவில் , எண்ணங்களில் விலகி விலகி போவது, என் தனிமை உணர்வை மேலும் மேலும் கூட்டியது. நானும் அவர்கள் மாதிரி, வேலை வேறு, வீடு வேறு என்று இருந்து இருந்தால், தனிமை என்னை இன்று வாட்டாது. ஆனால், ஏன் நான் அவர்களையும் சிந்திக்க தூண்டக் கூடாது என்ற எண்ணம் ஏன் மனதில் மேலோங்க தொடங்கியது. அதற்கு ஒரே வழி, பாடசாலையில் . சமயத்தை பகுத்தறிவுடன், மானிடவியலுடன் சேர்த்து  கற்பிக்க வேண்டும்.

 

எனவே, ஒரு நாள் அதிபரை சந்தித்து என் அவாவை கேட்க முடிவு செய்தேன். ஆனால் பின்பு தான் உணர்ந்தேன் நாய் வாலை நிமிர்த்த முடியாது என்று. ஆமாம் அதிபர் தந்த பிரபு அடியும், அதை பார்த்து, இவனுடன் சேரக்கூடாது என மேலும் விலகிய கூட்டமும் தான் மிச்சம். ஆனால் ஒன்று உண்மை, தனிமை என்னை மனிதனாக்கியது. அதனால் ஏற்பட்ட வைராக்கியம் என்னை படிப்பில் உயர்த்த தொடங்கியது. நான் இன்று பொறியியலாளர். என்றாலும், இன்னும் என் அம்மா அப்பா,இவன் திருந்த மாட்டான்’ என்று சொல்வதில் இருந்து விலகவில்லை. பல நிகழ்வுகளில் என்னை விலத்தியே வைக்கிறார்கள். நானும் என் பாட்டில் வாழ பழகிவிட்டேன். தனிமை என்னிடம் தோற்கத் தொடங்குகிறது!

 

வேதத்தில் , பிரம்மாவை, ஆண்டவனின் சந்ததி என,  பிரஜாபதி என்று கூப்பிடுவார்கள். அவர் தனது தனிமையை போக்க உயிரினங்களை படைத்தார் என்கிறது. நானும் அதன் பின் திருமணம் செய்து, எனக்கு என ஒரு வாழ்வையே அமைத்து மனைவி, பிள்ளைகளுடன் தனிமை போக்க தொடங்கிவிட்டேன்!


[✍கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

No comments:

Post a Comment