-அன்பா, அதிகாரமா?
தலைவர்கள் எவ்வழியோ, அவ்வழியில்தான் பிறரும் நடக்க முனைகிறார்கள்.
ஜனநாயகமாக ஆரம்பித்த அரசியல் கட்சிகள்கூட மெல்ல மெல்ல, தலைவர்கள் ஒரு சிலரின் கைகளுக்குப் போய்விடுகிறது. அவர்களுடைய குடும்பமும் நெருங்கிய நண்பர்களும் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்ற நிலையில், பெயரளவில்தான் மக்களுக்கான அரசியல்.
அதிகாரத்தால் எது வேண்டுமானால் செய்யலாம் என்பது நாட்டில் மட்டுமல்ல, வீட்டிலும் அலுவலகத்திலும்கூட, தலைவர்கள் பலருடைய கொள்கை.
அலுவலகத்தில் சர்வாதிகாரிகள்
‘பெண்தானே!’ என்று, வீட்டில் இரண்டாந்தர அங்கமாக நடத்தப்படுபவர்களே பெரும்பாலும் பிறரைக் கேவலமாக நடத்த முற்படுகிறார்கள்.
படித்து, பெரிய உத்தியோகத்தில் அமர்ந்துவிட்டதால், பிறரை மதிக்க வேண்டிய அவசியமில்லை என்று தோன்றிப் போகிறது அவர்களுக்கு.
கதை:
குடும்ப வாழ்வில் தோல்வி கண்டவள் அந்த கல்வி அதிகாரி. அவளுக்குப் பிள்ளைப்பேறு இல்லாததைச் சாக்காக வைத்து, இரண்டாவது, பின்னர் மூன்றாவது மணம் புரிந்துகொண்டிருந்தார் அவளுடைய கணவர். அவர்களுடைய மதமும் அதை ஆதரித்ததால், அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.
ஒரு பள்ளிக்குத் தலைமை ஆசிரியையாக ஆனபோது, குடும்ப வாழ்வில் தனக்குக் கிடைக்காத மதிப்பையும் மரியாதையையும் இங்காவது பெறவேண்டும் என்று நிச்சயித்தவள்போல் நடந்துகொண்டாள்.
அண்மையில், ‘ராட்சசி’ படத்தில் வந்ததுபோல், ஓர் ஆசிரியர் வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது, உள்ளே நுழைந்து, அவரைத் தரக் குறைவாகப் பேசுவாள்.
பள்ளி முழுவதும் கேட்கும்படி, கடமையிலிருந்து வழுவிய ஆசிரியைகளின் பெயர்களைக் குறிப்பிட்டு, ஒலிபெருக்கியில் அலறுவாள். அல்லது, வாராந்திரப் பொதுக்கூட்டத்தில் குற்றம் சாட்டுவாள்.
‘பள்ளிக்கூடத்தில் கட்டொழுங்கை நிலைநாட்டிவிட்டேன்!’ என்று இத்தகைய தலைமை ஆசிரியைகள் மார்தட்டிக்கொள்ளலாம்.
ஆனால், மாணவ மாணவிகள் ஆசான்கள் மீது வைத்திருக்கும் நல்லெண்ணம் அகன்றுவிடுமே!
தன்கீழ் வேலை பார்க்கிறவர்களை ஏளனத்திற்கு ஆளாக்கிவிடுவது சிறந்த தலைமைத்துவத்தின் லட்சணமா?
“அது எப்படி, வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் எல்லாரும் இப்படிப் பிரகாசமாக ஆகிவிடுகிறீர்கள்?” என்று என்னுடன் வேலை பார்த்த ஒருவர் கேட்டார் (அவர் யாருக்கும் அடங்கியதில்லை).
`எனக்கு எந்த அதிகாரமும் கிடையாது. மேலிடத்தில் இருப்பவர் என்ன சொன்னாலும், செய்தாலும் பணிந்து போகவேண்டிய நிலையில் இருக்கிறேன்!’ என்ற உறுத்தல் ஒருவரது தன்னம்பிக்கையைப் பாதிக்காதா?
அளவுக்கு மீறிய கட்டுப்பாட்டால் கசப்புதான் மிஞ்சும். அப்புறம் எப்படி உற்சாகமாக வளையவர முடியும்?
அதிகாரம் செலுத்துபவர்களின் உத்தி
“ஒரு பெண்ணை அழவைத்தால், அதன்பின் அவளை அடக்குவது எளிது!” சிறிதும் கூச்சமின்றி, தான் கடைப்பிடிக்கும் வழியைப் பெருமையுடன் என்னுடன் பகிர்ந்துகொண்டாள் நபீசா. உதவித் தலைமை ஆசிரியை என்பதால் பள்ளி அவள் கட்டுப்பாட்டில் இருந்தது.
ஒரு மாணவி, காதில் இரு துளைகள் போட்டிருந்த குற்றத்திற்காக, ஆசிரியர்களின் பொது அறைக்கு வரவழைக்கப்பட்டாள்.
“நம் மதத்தின்படி, இது தவறு,” என்ற வசவு பெற்றாள்.
“அம்மா ஒன்றும் சொல்லவில்லையே!” என்றாள் அப்பெண், திமிராக.
பதின்ம வயது மாணவிகள் புருவத்தைச் சீர்ப்படுத்திக்கொண்டு வந்தாலும் இதே கதிதான்.
நானும் கட்டொழுங்கு ஆசிரியையாக இருந்ததால், ஒரு பெண்ணிடம் மெல்ல, “ஆசிரியைகளே இப்படித்தான் அலங்கரித்துக்கொள்கிறோம். படிப்பு முடிந்ததும், உன் விருப்பப்படி இரேன். எதற்காக வீணாகத் தண்டனைக்கு ஆளாகிறாய்?” என்று கூற, அவள் முகத்தில் சிரிப்பு.
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒரு மாணவியின் காதிலுள்ள துளைகளோ, திருத்தப்பட்ட புருவமோ பிரச்சினை இல்லை. அதிகாரம் ஒன்றே பிரதானமாகிவிடுகிறது.
தம்மைப் பார்த்துப் பிறர் அஞ்சுவதைப் பெருமையாக நினைப்பவர்கள் இவர்கள். பயம் மதிப்பாகாது என்பதைப் புரிந்துகொள்ளாத அறிவிலிகள்!
“ஒரு பொய்யைப் பெரிதாக்கு. ஆனால், எளிமையாக வைத்திரு. மக்கள் நம்பிவிடுவார்கள்!” என்ற ஹிட்லரின் வாக்கைக் கடைப்பிடிப்பவர்கள் அதிகார வர்க்கத்தினர்.
‘மதம்’ என்ற ஒரு வார்த்தையால் மிரட்டியே பிறரை அடக்கிவிடுவார்கள். (மதத்தின்வழி கடவுளை அடைய நல்ல மனமும் நடத்தையும் மட்டும் போதாதா?)
இன்னொரு சர்வாதிகாரியான ஜோசப் ஸ்டாலின், “பிறரை யோசிக்க விடக்கூடாது”; “பிரச்னை செய்கிறார்களா? அவர்களைக் கொன்றுவிட்டால், பிரச்னை மறைந்துவிடும்,” என்றெல்லாம் தன் பங்கிற்கு `அறிவுரை’ வழங்கியிருக்கிறார்.
கொல்ல முடியாவிட்டாலும், ஒருவர் அகாரணமாகத் தண்டிக்கப்படுவதைப் பார்த்து, பிறராவது ஒழுங்காக இருப்பார்கள் என்று கணக்குப் போடுகிற வர்க்கம் இவர்கள்.
இப்படிப்பட்டவர்களைக் குடும்பங்களிலும் பார்க்கலாம்.
கதை:
இரண்டு வயதுக்கு மேற்பட்ட தன் மகன்கள் பின்னாலேயே நடப்பார் கிட்டன்.
எப்படித் தெரியுமா?
கையில் பிரம்புடன்.
குழந்தைகள் பயத்தால் மிரள.
‘ஆண் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை ஊட்டுகிறேன்,’ என்ற சாக்கை வைத்து, தனக்குத்தானே அதிகாரத்தை அளித்துக்கொள்ளும் வழி அது.
குழந்தைகளுக்கு வயது வந்ததும், சிறுபிராயத்தில் அடக்கி வைத்திருந்த பயம் ஆத்திரமாக மாற, அது மனைவியிடமும், அத்துடன் பிற பெண்களிடமோ, குழந்தைகளிடமோ திரும்பும்.
இத்தகைய தந்தையுடன் பேச்சுவார்த்தை இல்லாது, அவருடைய இறுதிக் காலத்தில் அவரை ஒதுக்கி வைத்த மகன்களை நான் அறிவேன்.
‘நான் என் மகனை எவ்வளவு கண்டிப்பாக வளர்த்தேன்!’ என்று வருந்துவார் தந்தை.
கதை:
அப்படி ஒரு தந்தைக்குப் பிறந்தவன் செல்வா.
அவனே அப்பாவான பிறகு, அவனையும் அறியாமல், தன்னைத் தந்தை நடத்தியது போலவே மூன்றே வயதாகியிருந்த தன் குழந்தையையும் நடத்த முற்பட்டான்.
‘பிரம்பால் அடிக்காத குழந்தை எப்படி உருப்படும்?’ என்பது அவனுடைய தர்க்கம்.
அவனுடைய கோபம் தந்தையின்மேல் மட்டுமில்லை, அவரை எதிர்க்க முடியாத தன்மேலேயும்தான் என்று, படித்த மனைவிக்குப் புரிந்தது.
“நீங்கள் உங்கள் அப்பாவுடன் பேசுவதை நிறுத்திப் பல வருடங்கள் ஆகிவிட்டன. உங்கள் மகனும் அப்படி உங்களை நடத்த வேண்டுமா?” என்று வாதாடினாள். `அவனுக்கு உங்கள்மேல் மரியாதை போய்விடும்,” என்று மேலும் எச்சரித்தாள்.
வீம்புடன், “அவன் முன்னுக்கு வந்தால் போதும். என்னை மதிக்காவிட்டால் போகிறான்,” என்றான் செல்வா.
அவன் சொந்த வியாபாரம் ஆரம்பித்த புதிது. தான் எதிர்பார்த்தபடி உடனே கொழிக்க முடியவில்லையே என்ற ஆத்திரம் அப்பாவிக் குழந்தைமேல் திரும்பியது.
தந்தைக்கு எதிராகக் குழந்தையைப் பரிந்தால், அவனுக்கு அப்பாவிடமிருக்கும் மரியாதை போய்விடாது என்பது புரிந்து, அவன் திட்ட ஆரம்பித்ததுமே, குழந்தையை அப்பால் தூக்கிக்கொண்டு போய்விடுவாள் மனைவி.
பன்னிரண்டு வயதில் சற்று விவரம் புரிந்ததும், “அப்பாவுக்கு ஏம்மா என்னைப் பிடிக்கல்லே?” என்று கேட்டான் மகன்.
அப்பாவின் குடும்பப் பின்னணியை அம்மா எடுத்துச் சொல்ல, “பாவம்! அப்பாவுக்குக் கொஞ்சம் சிகிச்சை கொடுக்கலாம்,” என்று சொல்லும் அளவுக்கு அவனுடைய விவேகம் வளர்ந்திருந்தது.
அன்புடன் வளர்க்கப்பட்டவர்களுக்குத்தானே வெளியுலகம் பந்தாடும்போது அதை எதிர்க்கும் துணிவும், அறிவும் இருக்கும்.
இது புரியாது, ‘இது ரொம்ப கெட்ட உலகம். அதைச் சமாளிக்க இவனுக்குத் தெரியவேண்டாமா?’ என்று தங்களுடைய அதிகாரப் போக்கிற்கு நியாயம் கற்பிக்கிறவர்களின் அறியாமையை என்னவென்று சொல்ல!
:-நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர்-/-சமூக ஆர்வலர்:-மலேசியா.
0 comments:
Post a Comment