பழகத் தெரிய வேணும் – 27


-கேள்விகள் ஏன்? எப்போது?-

பொதுக்கூட்டங்களில், சொற்பொழிவாளர், “ஏதாவது கேட்பதானால் கேளுங்கள்,” என்பார்.

 

பலர் மௌனம் சாதிப்பார்கள். தம் ஐயம் மடத்தனமாக இருந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சமே காரணம்.

 

பள்ளி வகுப்புகளிலும் இதே கதிதான்.

 

பலரும் படிப்பில் சோடை போவது ஏன் தெரியுமா?

 

கேள்வி கேட்டு மாட்டிக்கொள்ள விரும்பாது, அதற்கான பதிலையும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் தன்மை இல்லாததால்தான்.

 

குழந்தைகள் மூன்று வயதிலிருந்து கேள்விகள் கேட்க ஆரம்பிக்கிறார்கள்.

 

வீட்டிலிருக்கும் தாய்மார்கள் வேலை மும்முரத்தில், ‘தொணதொணப்புஎன்று திட்டி குழந்தைகளை அடக்கிவிடுவார்கள்.

 

கேள்வி கேட்பதே தவறுஎன்று அக்குழந்தைகள் மனதில் படிந்துவிட, புதிய சமாசாரங்களை அறிவதில் நாட்டமில்லாமல் வளர்கிறார்கள்.

 

அவள் கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுத்தேன். ஏனோ இப்படி இருக்கிறாள்!’ என்று சில பெற்றோர் குறைப்படுகிறார்கள்.

 

குழந்தைகளுக்காகச் செலவிடும் பணம் முக்கியமில்லை. அவர்கள் எதையாவது அறிய ஆர்வம் காட்டுவார்கள். அப்போது மேலெழும் ஆர்வத்திற்குத் தடைவிதிக்காது, அவர்களுடைய சந்தேகங்களை அவ்வப்போது தீர்த்துவைக்க நேரத்தையும் ஒதுக்கவேண்டும்.

 

கதைகள்:

1. மூன்று வயதுச் சிறுமி தன் தாயின் மார்பகத்தைச் சுட்டிக் கேட்டாள், “ஏன் ஒனக்கு மட்டும் இது பெரிசா இருக்கு? நான் அப்படி இல்லியே!”

வயதுக்கு மீறிய கேள்வி என்று கருதி, தாய் கோபிக்கவில்லை. புரியாத விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேறு என்ன வழி?

நீயும் பெரியவளா ஆனா, என்னைப்போல இருப்பே!” என்று சமாதானப்படுத்தினாள்.

 

2. ஆறு வயதுச் சிறுவன் ஒருவன் தன் வீட்டுக்கு வந்திருந்த பெண்ணைப் பார்த்து, “ஒங்க கைக்கு அடியிலே ஏன் இப்படி வளர்ந்திருக்கு?” என்று கேட்டான். (அவள் கையில்லாத ரவிக்கை அணிந்திருந்தாள்).

தாய்க்குத் தர்மசங்கடமாகப் போய்விட்டது. அதை மறைக்க, ‘ரொம்ப அசடாப் போயிட்டே!’ என்று மகனைப் பார்த்துக் கத்தினாள்.

குழந்தைகளுக்குத்தான் அப்படி இருக்காது. பெரியவர்களுக்கு..,” என்று அவனுக்குப் புரியும் விதத்தில் விளக்கியிருக்கலாம். ஆனால், அவளைப் பொறுத்தவரை, இதெல்லாம் கெட்ட சமாசாரம். (இயற்கை வளர்ச்சியை இப்படி மறைத்தே குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டிவிடுகிறோம்).

 

3. ஏழு வயதுச் சிறுவன் தன் தாயைக் கேட்டான், “அம்மா! ஏன் சில பேர் பிரஷர் குக்கரைப் பயன்படுத்துகிறார்கள்?”

அவர்கள் வீட்டில் குடியிருந்த நான் சமையலுக்கு அதைப் பயன்படுத்துவதைப் பார்த்துக் கேட்டிருக்கிறான்.

தனக்குத் தெரியாது என்பதை ஒத்துக்கொள்ள விரும்பாத தாய், அறியும் ஆர்வம் இருந்த மகனைக் கண்டித்தாள்: “நீ கேக்கறதுக்கெல்லாம் பதில் சொல்லிக்கிட்டு இருந்தா விடிஞ்சுடும், போ!”

நான்தான் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் ஆசிரியை ஆயிற்றே! “விரைவாக வேகும்,” என்று இரண்டே வார்த்தைகளில் விளக்கினேன்.

பையனது முகம் சுண்டிப்போயிற்று. தன் அம்மாவுக்குத் தெரியாதது வேறொரு அம்மாவுக்குத் தெரிந்திருக்கிறதே என்ற வருத்தம்தான்.

 

எங்கள் அம்மாக்கள் முட்டாள்கள். அதனால்தான் நாங்கள் இப்படி இருக்கிறோம்!’ என்று என் மாணவிகளில் சிலர் தன்னிரக்கத்துடன் கூறியிருப்பது நினைவில் எழுந்தது.

 

தற்காலத்தில், நாம் அறிய வேண்டுவன எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள கணினி வழிவகுக்கிறது. அது மட்டும் போதுமா?

 

முதன்முறையாக வெளியூருக்கோ, வெளிநாட்டுக்கோ செல்லுமுன் பயண ஏடுகளைப் புரட்டிப் பார்ப்போம். சென்றபின், அங்கு பார்க்கவேண்டியவை வேறு ஏதாவது உள்ளதா என்று அங்குள்ளவர்களைக் கேட்டும் தெரிந்துகொள்ளலாம்.

 

ஆனால், சகபயணிகளின் உயிரை வாங்கி தம் அறிவைப் பெருக்கிக்கொள்ள நினைப்பவர்கள் பிறரது அமைதியைக் குலைப்பவர்கள்.

 

கதை:

நானும் என் மகளும் கிழக்கு மலேசியா (போர்னியோ) சென்றிருந்தோம். அங்கிருந்து கடலில் படகுப் பயணம்ஒரு காட்டுப் பகுதியில் தங்குவதற்கு.

எங்களுடன் ஒரு வெளிநாட்டுப் பெண்ணும் படகில் இருந்தாள். அறிமுகம் முடிந்ததும், ஓயாது ஏதேதோ கேட்டபடி இருந்தாள்.

அநாவசியமாக எதையாவது கேட்டு வைப்பவர்களுக்குப் பதிலில் அக்கறை கிடையாது. அது பொழுதைப் போக்க ஒரு வழி. அவ்வளவுதான்.

இந்துப் பெண்கள் கல்யாணமானதும்தான் சிவப்பு நிறப் பொட்டு அணியலாம் என்று கேள்விப்பட்டேன். அப்படியா?”

தைப்பூசம் எதற்காகக் கொண்டாடுகிறார்கள்?” என்று விசாரித்தபடி இருந்தாள்.

எனக்கோ, ரம்மியமான சூழ்நிலையைப் பார்த்து ரசிக்க முடியாது போகிறதே என்ற எரிச்சல்.

இறுதியில், பொறுக்க முடியாது போக, “Not now!” என்றேன் கறாராக.

அதன்பின் அவள் வாயைத் திறக்கவில்லை.

 

அப்படியில்லாது, ஒரு விஷயத்தில் உண்மையான ஆர்வத்துடன் கேட்பவருக்கோ பெரும்பாலும் தக்க பதில் கிடைக்கும்.

 

ஆனால், நம் கேள்வியால் அவரது அறிவை எடைபோடுகிறோமோ என்று தவறாக எண்ணிவிடுபவர்களும் உண்டு.

 

கதை:

நான் ஒரு காமெரா வாங்கி வைத்து, புத்தகங்களிலிருந்து புகைப்படக்கலையைக் கற்க முயன்று கொண்டிருந்தேன்.

காதரின் என்ற அமெரிக்க மாது தன் குழுவுடன் சேர ஒரு காமெரா இருந்தால் போதும், புகைப்படக்கலையைக் கற்கலாம் என்று தினசரியில் விளம்பரப்படுத்தி இருந்தாள்.

விடுவேனா! வாரத்தில் சில நாட்கள் அவர்களுடன் நான் கோலாலம்பூரில் பல இடங்களையும் சுற்றிப்பார்த்தேன்.

மற்றவர்கள் அனைவரும் சிறு வயதிலிருந்தே ஓரிரு முறை உபயோகப்படுத்திவிட்டு எறியும் புகைப்படக் கருவியைப் பயன்படுத்தி இருந்தவர்கள்.

எனக்கோ எதுவும் புரியவில்லை. புத்தகங்களில் பயிலாததைப்பற்றி கேள்விமேல் கேள்வி கேட்டபடி இருந்தேன்.

குழுத் தலைவி காதரின் விளையாட்டாக, “எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை. நீ நிறைய கேள்விகள் கேட்கிறாய்!” என்று குற்றம் சாட்டினாள்.

எனக்கு எதுவுமே தெரியாது. அதனால்தான்,” என்று ஒத்துக்கொண்டேன், பரிதாபகரமாக.

ஒரு நாள் இந்துக்கோயில் ஒன்றில் படம் பிடிக்கச் சென்றபோது, எங்களுடன் இணைந்து வந்த அயல்நாட்டுக்காரர்களுக்குஅவர்கள் கேளாமலேயேபார்த்ததையெல்லாம் விளக்கினேன்.

மகிழ்ந்த காதரின் என்னை அழைத்து, போட்டிகளில் பரிசுகள் வாங்கும் அளவிற்கு நிறைய கற்றுக்கொடுத்தாள். அவள் தன் நாட்டிற்குத் திரும்பிய பின்னரும் எங்கள் நட்பு நீடித்தது.

 

என்னதான் நடந்துவிடப்போகிறது?

 

நமக்குள் இக்கேள்வியைக் கேட்டுக்கொண்டால், இக்கட்டான சூழ்நிலைகளில் மனம் குழம்பும்போது உடனே நிம்மதி கிடைக்கும்.

 

கதை:

ஒரு பெண்நல்ல கலராகஇல்லாவிட்டால் அவளைப் பெண்பார்த்துவிட்டு, நிராகரிக்கும் ஆண்களைத்தான் அந்த பாட்டி பார்த்திருக்கிறாள்.

அதனால், தன் மகளுடைய சிறு குழந்தைகளைப் பார்த்ததும் அவளுக்குத் துக்கம் பெருகியது.

ரெண்டும் கறுப்பாப் பொறந்திருக்கே! இந்தப் பொண்களுக்கு எப்படித்தான் கல்யாணம் பண்ணிவைக்கப் போகிறாளோ!’ என்று அவர்களைப் பெற்ற மகளுக்காக வருந்தினாள்.

 

எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

 

அவர்களைவிட நிறம் மட்டமான ஆண் கிடைக்கலாம்.

 

புற அழகைவிட அவர்களுடைய அறிவாற்றலைப் பெரிதாக எண்ணும் மாப்பிள்ளைகள் கிடைக்கலாம்.

 

அவ்வளவு ஏன், பெரிய படிப்புப் படித்து, உத்தியோகமே வாழ்க்கை என்று வாழக்கூட நினைக்கலாம் அப்பெண்கள்.

 

எப்போதோ நடக்கலாம் என்பதை எண்ணி இப்போதே வருந்துவானேன்!

 

பரீட்சையில் சரியாக எழுதவில்லையே, பாசாகித் தொலைக்காமல் இருந்தால் என்ன செய்வது!’

 

பரீட்சை முடிவு வருவதற்குள் அநாவசியமாக அதைப்பற்றி எண்ணிக் குழம்புவானேன்! அப்படியே தேர்ச்சி பெறாவிட்டால், இன்னொரு முறை எழுதிவிட்டுப் போகிறது!.

 

என்ன நான் சொல்வது?

நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர் / சமூக ஆர்வலர்-/- மலேசியா.

தொடரும்.... 

👉அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக 
👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக 

0 comments:

Post a Comment