இனியவை நாற்பது /04/இனிது,இனிது இவை இனிது

 


[இனியவை நாற்பதுஇதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார் எனப்படுவர்இவர் தந்தையார் மதுரைத் தமிழாசிரியர் பூதன்இவர் வாழ்ந்த நாடு பாண்டி நாடு.இவரது காலம் கி.பி. 725-750 எனப்பட்டது.]

தொடர்ச்சி....

 

வெண்பா 16.

சுற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே

மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே

எள்துணை யானும் இரவாது தான்ஈதல்

எத்துணையும் ஆற்ற இனிது. 

 

விளக்கம்: கற்றறிந்தவர் முன் தான் கற்ற கல்வியைச் சொல்வது மிக இனியது. அறிவால் மேம்பட்ட கல்வியாளரைச் சேர்ந்து பொருந்தியிருப்பது மிகப் பெருமையுடன் முற்றிலும் இனியது. எள்ளளவாவது, தான் பிறரிடம் யாசிக்காமல், தான் பிறர்க்குத் தானம் கொடுத்துத் தர்மம் செய்வது எல்லா விதத்திலும் மிக இனியது.

 

வெண்பா 17.

நாட்டார்க்கு நல்ல செயலினி தெத்துணையும்

ஒட்டாரை ஒட்டிக் கொளல் அதனின் முன்இனிதே

பற்பல தானியத்தது ஆகிப் பலருடையும்

மெய்த்துணையுஞ் சேரல் இனிது.   

 

விளக்கம்: தன்னுடன் நட்புடையவர்க்கு இனிய உதவிகளைச் செய்வது இனிமையானது. எந்தவகையிலும் சேராத தன் பகைவரையும் நட்பாக்கிக் கொள்வது அதைவிட மிக இனிமை யானது. பற்பல வகை உணவுப் பழக்கமுடையவரானாலும் புறத்தார் பார்வைக்கு ஏதுவாக மெய்க் காப்பு வீரரோடு அரணாகப் பொருந்தியிருப்பது இனிமையானது.

 

வெண்பா 18.

மன்றின் முதுமக்கள் வாழும் பதிஇனிதே

தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பினிதே

எஞ்சா விழுச்சீர் இருமுது மக்களைக்

கண்டெழுதல் காலை இனிது.        

 

விளக்கம்: ஊர்ப்பொது மன்றத்தில் மூத்த அறிவுடையோர் வாழ்கின்ற ஊர் இனியது. அறநூல்களில் சொல்லிய விதிப்படி வாழ்கின்ற தவத்தோரது மாட்சிமை இனியது. குறைவில்லாத மிகுந்த சிறப்பினை உடைய இரு முதுமக்களாகிய தாய் தந்தையரை காலையில் அவர்கள் இருக்குமிடம் சென்று பார்த்து அவர்கள் பாதங்களில் வீழ்ந்து வணங்கி எழுவது இனியது.

 

வெண்பா 19.

நட்டார்ப் புறங்கூறான் வாழ்தால் நனிஇனிதே

பட்டாங்கு பேணிப் பணிந்தொழுதல் முன்இனிதே

முட்டில் பெரும்பொருள் ஆக்கியக்கால் மற்றது

தக்குழி ஈதல் இனிது.   

 

விளக்கம்: தன்னிடம் நட்புக்கொண்டவர்களைப் பற்றிப் புறங்கூறாதவனாய் வாழ்வது மிக இனியது. சத்தியத்தைப் பேணிப் பாதுகாத்து யாவர்க்கும் பணிவுடன் நடப்பது அதைவிட இனியது. குறையில்லாத பெரும் பொருளைத் தேடிச் சம்பாதித்தால் அப்பொருளைத் தகுதி வாய்ந்த தேவையுள்ளோர்க்கு கொடுத்து உதவுவது இனியது.

 

வெண்பா 20.

சலவாரைச் சாரா விடுதல் இனிதே

புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே

மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம்

தகுதியால் வாழ்தல் இனிது.  

 

விளக்கம்: வஞ்சகரைச் சாராமல் அவர்களது தொடர்பை விட்டு விடுவது இனியது. கற்றறிந்த அறிவுடையாருடைய வாய்ச் சொற் களைப் போற்றி அதன்படி நடப்பது இனியது. அகன்ற இடத்தையுடைய இப்பூமியில் வாழ்கின்ற எல்லா உயிர்களுடனும் இணக்கமாக வாழ்வது இனியது.

 

இனியவை நாற்பது 

பகுதி: 5 வாசிக்க அழுத்துங்கள்👉Theebam.com: இனியவை நாற்பது/05/இனிது,இனிது இவை இனிது:

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துங்கள்👉 Theebam.com: இனியவை நாற்பது /01/இனிது,இனிது இவை இனிது:

 

தேடல் தொடர்பான தகவல்கள்:

இனியவை நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இனியது, இனிது, இலக்கியங்கள், தான், இனியவை, வாழ்கின்ற, முன்இனிதே, நாற்பது, கீழ்க்கணக்கு, பதினெண், நடப்பது, வாழும், பேணிப், வாழ்வது, அதைவிட, இனிதே, பொருந்தியிருப்பது, கல்வி, சங்க, செய்வது, எல்லா, பற்பல, இனிமையானது

No comments:

Post a Comment