‘ உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்'
கடந்த பத்து இலட்சம் வருட காலப்பகுதியில், இலங்கை பல சந்தர்ப்பங்களில், தற்போதைய இந்திய ( அந்நியர் ஆட்சிக்கு முன் இந்தியா என்றொரு நாடு இருந்ததில்லை.) உப கண்டத்துடன் இணைந்து இருந்தது. கடைசியாக இடம்பெற்ற பிரிவு கி மு 5000, அதாவது இன்றைக்கு 7000 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையும், தமிழகமும் கடைசியாக ஒரே பகுதியாக இருந்துள்ளது. எனவே இலங்கையின் சரித்திரத்திற்கு முற்பட்ட காலத்தை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்தி ஆராய்வது இயலாத விடயம் ஆகும். இலங்கையும் இந்தியாவும் ஒரு காலத்தில் ஒரே நாடாக இருந்ததனால், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் கூட இரு நாடுகளிலும் ஒரே விதமாக இருந்ததாகவும் கருதப் படுகிறது. தென்னிந்தியா பூர்வீக கலாசாரம் இலங்கையின் பல பகுதிகளிலும் பரவி இருந்தது. புராதான வரலாற்றுக்களிலும் கிராமிய கதைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையில் பல நூற்றாண்டு காலமாக உறவுகள் இருந்து வந்தமை தெரிவிக்கப் பட்டுள்ளது. புராதன இலங்கையில், இராவணனும் இராட்சதர்களும் வசித்த வரலாறும் இயக்கர்கள், நாகர்கள் சீவித்த சரித்திரங்களும் இவர்கள் அனைவரும் ஒரே இனத்தின் வழித்தோன்றல்கள் என்பதை நிரூபிக்கின்றன. எனவே, இரு பகுதியிலும் 7000 ஆண்டுகளுக்கு முன் ஒரேவித இனக்குழு மக்களே வாழ்ந்தனர் என்பதில் ஐயமில்லை. தமிழ் நாட்டின் ஆதிச்சநல்லூர் போன்ற தென்பகுதியிலிருந்து ஆதி இரும்புக்காலப் பண்பாடு இலங்கையின் வடமேற்குக் கரையில் இருந்த பொம்பரிப்புப் பகுதிக்குப் பரவி அதன்பின்னர் அப் பண்பாடு அநுராதபுரம் போன்ற உள்நாட்டுப் பகுதிக்குப் பரவியது எனலாம். உதாரணமாக பொம்பரிப்புப் பகுதி இரும்புப் பண்பாடு அநுராதபுரத்திற்கு காலத்தால் முந்தியது என இலங்கை தொல்லியலாளர் செனவிரத்ன போன்றவர்கள் கருதுவது இதனை உறுதி செய்கிறது. தீபவம்சம் இரண்டாம் பாடத்தில், [Dīpavaṁsa II. The Conquering of the Nāgas] இருபதாவது பாடலில், இரண்டாவது முறையாக மீண்டும் புத்தர் இரண்டு நாக மன்னர்கள் தமக்குள்ளே போர் புரிவதைத் தடுப்பதற்காக வந்தார் என்கிறது [The highest of men went to the place where the Nāgas fought their battle; the merciful Teacher (there) stood in the middle of both noble Nāgas] , இதுவும், விஜயன் வந்தேறு குடியாக இலங்கைக்கு வருமுன், கி மு 5ஆம் / 6ஆம் நூறாண்டில் இலங்கையில் நாகர் வாழ்ந்ததையும், அவர்களுக்கு என ஒன்றுக்கு மேற்பட்ட அரசு இருந்ததையும் சுட்டிக்காட்டுகிறது.
பொதுவாக நாக நாடு என்பதை நாகப்பட்டினமும் அதை சுற்றியுள்ள பகுதியாகவும், இலங்கை தீவின் வடக்கு முனையாகவும் வகைப்படுத்தப்படுகிறது [nagapattinam and the surrounding areas and also the northern tip of island]. நாகர்கள் கி.மு 3ஆம் நூறாண்டில் தமிழ் பண்பாட்டுடனும் மொழியுடனும் ஓரினமானார்கள் என க. இந்திரபாலா கூறுகிறார் [Scholars like K. Indrapala]. பல அறிஞர்களின் கருத்தின் படி இவர்கள் திராவிட இனத்தவர்கள் ஆவார்கள். உதாரணமாக பல சங்க கால புலவர்களை நாக இனத்தவர்களில் காணலாம், உதாரணமாக முரஞ்சியூர் முடிநாகராயரை கூறலாம். பண்டைய தமிழ் காவியமான சிலப்பதிகாரமும், மணி மேகலையும் கூட யாழ் குடா நாட்டை நாக நாடு என குறிப்பிடுகிறது. நாக வழிபாடும், ‘நாக’ என்ற சொல் வரும் பெயர்களும், எடுத்துக் காட்டாக நாகநாதன், நாகலிங்கம், நாகமுத்து, நாகபூசணி மற்றும் இலங்கையின் வடபெரும் பகுதி நாகதீபம் என அழைக்கப்பட்டதும், பல வரலாற்று உண்மைகளை மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகின்றன. மேலும் கி.மு. முதல் மூன்று நூற்றாண்டுகளில் இலங்கையில் தமிழ் ஒரு பேச்சு மொழியாக விளங்கியமைக்கு ஆதாரமாய் இலங்கையில் கண்டுபிடிக்கப் பட்ட பிராமிச் சாசனங்கள் [Tamil inscription] அமைகின்றன என பேராசிரியர் சி. பத்மநாதன் தமது இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, இலங்கை திசமகாராமையில் கண்டு பிடிக்கப்பட்ட, 'திசமகாராமை தமிழ் பிராமிச் சாசனம்' என கூறப்படும், கறுப்பு, சிவப்பு மட்பாண்ட தட்டையான தட்டங்களை சொல்லலாம். இதில் தமிழ் பிராமியில் பொறிக்கப்பட்டு உள்ளது. இது சுமார் கி.மு 200 ஆண்டு காலத்திற்கு உரியது என அகழ்வினை மேற்கொண்ட ஜேர்மன் அறிவியலாளர் [German scholars] குறிப்பிடுகின்றார். அதே போல பூநகரி, யாழ்ப்பாணத்திலும் [Poonagari, Jaffna,] கி மு 2ஆம் நூறாண்டு தமிழ் கல்வெட்டு கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த, இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட சங்க புலவர், ஈழத்துப் பூதன் தேவனார் என்னும் புலவரின் ஏழு பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இலங்கையில் கிருஸ்துக்கு முன், தமிழ் மொழி பேசப்பட்டது மட்டும் அல்ல, இலக்கிய மொழியாக அன்றே வளர்ச்சி அடைந்து இருந்ததையும் இது எடுத்து காட்டுகிறது. அவரின் ஒரு பாடலை எடுத்து காட்டாக அடுத்த பகுதியில் விளக்கத்துடன் தருகிறேன், இது தமிழின் சொல்வளம் எவ்வளவுக்கு அன்று வளர்ச்சி அடைந்து இருந்தது என்பதை உறுதிப் படுத்தும் என்று நம்புகிறேன்.
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம் /அத்தியடி, யாழ்ப்பாணம்]
பகுதி: 03 தொடரும்…👉👉👉
ஆரம்பத்திலிருந்து வாசிக்க, அழுத்துக Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள.../ பகுதி 01:
No comments:
Post a Comment