[இனியவை நாற்பது-இதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார் எனப்படுவர். இவர் தந்தையார் மதுரைத் தமிழாசிரியர் பூதன். இவர் வாழ்ந்த நாடு பாண்டி நாடு.இவரது காலம் கி.பி.725750 எனப்பட்டது.இனியவை நாற்பது 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில்
இன்பம் தருவன நான்கினைக் கூறியுள்ளார். மற்ற பாடல்களில் மூன்று, மூன்று இன்பங்களை கூறியுள்ளார்.]
இனிது,இனிது இவை இனிது- தொடர்கிறது.....
வெண்பா 06:
ஆற்றுந் துணையால் அறஞ்செய்கை முன்இனிதே
பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பினிதே
வாய்ப்புடைய ராகி வலவைகள் அல்லாரைக்
காப்படையக் கோடல் இனிது.
விளக்கம்: கூடிய மட்டும் தருமம் செய்தல் இனிது. சான்றோர்களின் பயனுடைய சொல் இனிது. கல்விச் செல்வம் அதிகாரம் ஆண்மை முதலிய எல்லாம் இருந்தும் 'நான்' என்ற குணம் இல்லாதவனைத் துணையாகக் கொள்வது இனிது.
வெண்பா 07:
அந்தண ரோத்துடைமை ஆற்ற மிகஇனிதே
பந்தம் உடையான் படையாண்மை முன்இனிதே
தந்தையே ஆயினுந் தானடங்கான் ஆகுமேல்
கொண்டடையா னாகல் இனிது.
விளக்கம்: பிராமணர்க்கு வேதம் ஓதுதல் இனிது. இல்லறத்தாருக்கு பற்றுபாசம் இனிது. படையுடையானுக்கு வீரம் இனிது. தந்தையே ஆனாலும் அவர் கூறும் தவறானவற்றைச் செய்யாமை இனிது.
வெண்பா 08:
ஊருங் கலிமா உரனுடைமை முன்இனிதே
தார்புனை மன்னர் தமக்குற்ற வெஞ்சமத்துக்
கார்வரை யானைக் கதங்காண்டல் முன்இனிதே
ஆர்வ முடையவர் ஆற்றவும் நல்லவை
பேதுறார் கேட்டல் இனிது
விளக்கம்: வீரனுக்கு வலிமையான குதிரை இனிது. மாலையணிந்த அரசர்களுக்கு போர்க்களத்தில் கரிய மலைபோன்ற யானைகள் சினம் கொண்டு போரிடுதலைப் பார்த்தல் இனிது. அன்புடையார் வாய்ச் சொற்கள் கேட்பது இனிது.
வெண்பா 09:
தங்க ணமர்புடையார் தாம்வாழ்தல் முன்இனிதே
அங்கண் விசும்பின் அகல்நிலாக் காண்பினிதே
பங்கமில் செய்கைய ராகிப் பரிந்துயார்க்கும்
அன்புடைய ராதல் இனிது.
விளக்கம்:
தம்மை ஒட்டி வாழும் நண்பர்கள் செல்வத்துடன் வாழ்தல் இனிது. அழகிய அகன்ற வானத்தில் விரிந்த நிலாவைக் காணுதல் இனிது. குற்றமில்லாத செய்கை உடையவராய் அன்புடையவராயிருத்தல் இனிது.
வெண்பா 10:
கடமுண்டு வாழாமை காண்டல் இனிதே
நிறைமாண்பில் பெண்டிரை நீக்கல் இனிதே
மனமாண்பி லாதவரை யஞ்சி யகறல்
எனைமாண்புந் தான்இனிது நன்கு.
விளக்கம்:
கடன் வாங்கி வாழாமல் இருத்தல் இனிது. கற்பில்லாத மனைவியை நீக்கிவிடுதல் இனிது. மனத்தின்கண் பெருமை இல்லாதவரை விட்டு அஞ்சி அகலுதல் எல்லாவற்றையும் விட மிக இனிது.
இனியவை நாற்பது
பகுதி: 3வாசிக்க அழுத்துங்கள்👉Theebam.com: இனியவை நாற்பது /03/இனிது,இனிது இவை இனிது:
ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துங்கள்👉 Theebam.com: இனியவை நாற்பது /01/இனிது,இனிது இவை இனிது:
தேடல் தொடர்பான தகவல்கள்:
இனியவை நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இனிது, முன்இனிதே, இலக்கியங்கள், நாற்பது, கீழ்க்கணக்கு, பதினெண், இனியவை, இனிதே, தந்தையே, சங்க, கூறும்
No comments:
Post a Comment