குழந்தைகள் நலம்: கடையில் விற்கும் பால் பரிசுத்தமானதா?

அறிவியல் ஆய்வுகள் சொல்வதென்ன?

 


ஃபார்முலா பால்

குழந்தைகளுக்கான ஃபார்முலா பால் என்பது கடந்த தசாப்தங்களில் பல மாற்றங்களை கடந்துவந்துள்ளது. 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில், புட்டிப்பால் என்பது குழந்தைகளுக்கு நல்லதல்ல என்ற கருத்து இருந்தது. 1900-களில் ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களில் புட்டிப்பால் கொடுக்கப்பட்ட 80 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகள் பிறந்து ஓராண்டுக்குள்ளேயே இறந்தன. சுத்தப்படுத்தப்படாத பாட்டில்களால் ஏற்படும் தொற்று, ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகிய காரணங்கள் இதற்கு முன்வைக்கப்பட்டன. 1865இல் முதன்முறையாக வணிக ரீதியாக 4 பொருட்களைக் கொண்டு (பசும்பால், கோதுமை, பார்லி மாவு, பொட்டாசியம் பைகார்பனேட்) ஃபார்முலா பால் தயாரிக்கப்பட்டது. அதன் ஊட்டச்சத்துகள் குறிப்பிட்ட முறையில் சுத்திகரிக்கப்பட்டவையாகும்.

 

இன்றைய ஃபார்முலா பாலில் என்ன இருக்கிறது?

ஃபார்முலா பாலில் கொழுப்புக்காக பசும்பால் அல்லது ஆட்டுப்பால் சேர்க்கப்படுகிறது. மேலும், பாமாயில், சூரியகாந்தி உள்ளிட்ட எண்ணெய் மற்றும் கொழுப்பு அமிலங்கள் ஆகியவை சேர்க்கப்படுகின்றன.

 

தாய்ப்பாலில் கார்போஹைட்ரேட் ஆதாரமாக லாக்டோஸ் இருக்கிறது. ஃபார்முலா பாலில் க்ரீம் நீக்கப்பட்ட பால் மாவு சேர்க்கப்படுகிறது. சோளம் அல்லது உருளைக்கிழங்கிலிருந்து எடுக்கப்படும் மால்டோடெக்ஸ்ட்ரினும் சேர்க்கப்படும்.

 

ஃபார்முலா பாலில் சேர்க்கப்படும் புரதத்தின் அளவு பசும்பால் அல்லது ஆட்டுப்பாலை பொறுத்து மாறுபடுகிறது. இரண்டும் இல்லாமல் தாவர அடிப்படையில் தயாரிக்கப்படும் பாலில் சோயா புரதமாக பயன்படுத்தப்படுகிறது. , டி, பி மற்றும் கே போன்ற வைட்டமின்கள், கால்சியம், மக்னீசியம், இரும்புச்சத்து, ஜிங்க் உள்ளிட்டவையும் ஃபார்முலா பாலில் இருக்கின்றன.

 

ஃபார்முலா பாலில் நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனங்களும் இருக்கின்றன.

 

கன உலோகங்கள்

அமெரிக்காவில் செயல்பட்டுவரும் லாப நோக்கற்ற அமைப்பான க்ளீன் லேபெல் ப்ராஜெக்ட் 2017ஆம் ஆண்டில் 86 ஃபார்முலா பால் மாதிரிகளை ஆய்வு செய்ததில் அதில் சுமார் 80 சதவீத மாதிரிகளில் பூச்சிக் கொல்லிகள், கன உலோகங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சோயா அடிப்படையிலான ஃபார்முலா பாலில் பேட்டரிகளில் காணப்படும் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய உலோகமான காட்மியம், மற்ற ஃபார்முலா பாலைவிட 7 மடங்கு அதிகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 

மேலும் ஃபார்முலா மாவை கலக்க பயன்படுத்தப்படும் குழாய் நீரிலும் உடலுக்குக் கேடு விளைவிக்கும் ரசாயனங்கள் கலந்துள்ளன. இவை பழைய குழாய்களால் நீர் மாசடைவதால் ஏற்படுவதாகும்.

எனினும், "குடிநீரில் உள்ள கன உலோகங்களை நாம் நீக்கினாலும் ஃபார்முலா பாலால் ஏற்படும் பிரச்னைகளை பாதிதான் நாம் தீர்க்கிறோம்," என க்ளீன் லேபெல் ப்ராஜெக்டின் செயல் இயக்குனரும் சூழலியல் உயிரியலாளருமான ஜாக்கி போவென் தெரிவிக்கிறார்.

 

பாமாயில், சோயா ஆகியவை காட்டு வாழிடங்களை அழித்து உற்பத்தி செய்யப்படுவதால், அவற்றிலும் சூழலியல் தாக்கங்கள் உள்ளன. இதற்கான ஒரு தீர்வாக இயற்கை பொருட்கள் மூலம், உள்ளூரிலேயே கூடுமானவரை ஃபார்முலா பால் தயாரிப்பதை சிலர் பரிந்துரைக்கின்றனர்.

 

நுண்ணுயிர்கள்

குழந்தையின் குடல் நுண்ணுயிர்களின் வளர்ச்சிக்கான "முக்கிய ஆதாரமாக" தாய்ப்பால் விளங்குகிறது என, லண்டனில் உள்ள குழந்தை ஊட்டச்சத்து நிபுணர் எமிலி ப்லோக்சாம் கூறுகிறார். தாயிடமிருந்து குழந்தைக்குக் கடத்தப்படும் ஆன்டிபாடிகள், ஆரோக்கியமான குடல் நுண்ணுயிர்கள் ஆகியவற்றை இன்றுவரை ஃபார்முலா பாலில் செயற்கையாக உற்பத்தி செய்யப்படவில்லை.

 

"குழந்தையின் குடல் நுண்ணுயிர்களில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியாக்கள், குழந்தையின் நோயெதிர்ப்பு திறனுக்கு அவசியமான புரோ பயோடிக்காக விளங்குகிறது.

 

ஆய்வகங்களில் உற்பத்தி செய்யப்படும் பால்?

தாய்ப்பாலின் அம்சங்கள் சிலவற்றை அப்படியே பிரதிபலிக்க, தாய்ப்பாலை உற்பத்தி செய்யும் செல்களை, ஆய்வகத்தில் வளர்ப்பது ஒரு வழியாக பார்க்கப்படுகிறது. அதனை இப்போதுதான் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.

 

வட கரோலினாவில் தொடங்கப்பட்டுள்ள பயோ மில்க் என்ற ஆய்வகம், செல் உயிரியலாளர் லைலா ஸ்ட்ரிக்லாண்ட் தன் குழந்தைக்கு போதுமான தாய்ப்பாலை வழங்க முடியாத போது அமைத்த ஆய்வகமாகும். அக்குழுவினர், மனிதர்களின் மார்பகங்களில் உள்ள திசுக்கள் மற்றும் தாய்ப்பாலில் உள்ள செல்களை எடுத்து ஃப்ளாஸ்க்குகளில் வைத்து வளர்க்கின்றனர். பல்வேறு விதமான சத்துக்கள், வைட்டமின்கள் அவற்றுக்கு அளிக்கப்பட்டு, பின்னர் ஒரு இன்க்யூபேட்டர் வழியாக அவை அடைகாக்கப்பட்டு, இயற்கையாக தாய்ப்பாலில் உள்ள கூறுகளை சுரக்க வைக்கின்றனர். எனினும், இத்தகைய பால் சந்தைக்கு வருவதற்கு சில ஆண்டுகள் ஆகும். மேலும், அது தாய்ப்பாலுக்கு இணையான ஒன்றாக இருக்க முடியாது.

 

மேலும், பசுக்கள், ஆடுகள், செம்மறி ஆடுகள், ஒட்டகங்கள் போன்ற பாலூட்டிகளின் பாலில் உள்ள செல்களை ஆய்வகங்களில் வைத்து வளர்த்துவரும், சிங்கப்பூரை சேர்ந்த டர்ட்டிள் ட்ரீ லேப்ஸ், தற்போது மனிதர்களின் பால் கூறுகளையும் ஆய்வகத்தில் வைத்து வளர்க்கத் தொடங்கியுள்ளது.

 

எனினும், தாய்ப்பால் மாறும் தன்மை கொண்டதால், அதன் சில கூறுகள் இன்னும் முழுமையாக புரிந்துகொள்ளப்படவில்லை என, லண்டன் காலேஜ் பல்கலைக்கழகத்தின் குழந்தை ஊட்டச்சத்து நிபுணரான ஃபியூட்ரெல் கூறுகிறார்.

 

"தாய்ப்பால் கொடுப்பதால் தாய் மற்றும் குழந்தைக்கு ஏற்படும் நன்மைகள், அதிலுள்ள ரசாயனங்களால் ஏற்படும் அபாயங்களை விட அதிகமாக இருக்கும் என்பதால், முடிந்தவரை தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிப்பேன்" என, ஊட்டச்சத்து நிபுணர் ப்லோக்சம் என்னிடம் தெரிவித்தார்.

 

நம் குழந்தைகளுக்கு எப்படி பாதுகாப்பான ஊட்டச்சத்தை வழங்குவது என்பது மட்டும் அல்ல இப்போதைய கேள்வி. அவர்களுக்கும் வருங்கால சந்ததியினருக்கும் பாதுகாப்பான, வாழக்கூடிய சூழலை எவ்வாறு வழங்குவது மற்றும் முழு உணவுச் சங்கிலியிலும் மாசுபாட்டைக் குறைப்பது என்பதை பற்றியும்தான்.

 

முதலில் குறைவான தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் பால் தயாரிப்புதொடங்க வேண்டும் என்பது- ஒரு பதிலாக நிச்சயம் இருக்கும்.

நன்றி:-அனா டர்ன்ஸ்/பிபிசி ஃப்யூச்சர்

இனியவை நாற்பது /03/இனிது,இனிது இவை இனிது

 [இனியவை நாற்பது-இதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார் எனப்படுவர். இவர் தந்தையார் மதுரைத் தமிழாசிரியர் பூதன். இவர் வாழ்ந்த நாடு பாண்டி நாடு. இவரது காலம் கி.பி. 725-750 எனப்பட்டது. இனியவை நாற்பது 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன நான்கினைக் கூறியுள்ளார். மற்ற பாடல்களில் மூன்று, மூன்று இன்பங்களை கூறியுள்ளார்.]

 


இனியவை நாற்பது- தொடர்கிறது....

 

வெண்பா 11.

அதர்சென்று வாழாமை ஆற்ற இனிதே

குதர்சென்று கொள்ளாத கூர்மை இனிதே

உயிர்சென்று தான்படினும் உண்ணார்கைத் துண்ணாப்

பெருமைபோற் பீடுடையது இல்.   

 

விளக்கம்:தவறான வழியிற் சென்று வாழாதிருப்பது இனிது. தவறான வழியிற் பொருள் தேடாமை மிக இனிது. உயிரே சென்றாலும் உண்ணத்தகாதார் இடத்து உணவு உண்ணாதிருத்தல் மிக இனிது.

 

வெண்பா 12.

குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே

சுழறும் அவையஞ்சான் கல்வி இனிதே

மயரிக ளல்லராய் மாண்புடையார்ச் சேரும்

திருவுந்தீர் வின்றேல் இனிது.

 

விளக்கம்:குழந்தைகள் நோயில்லாது வாழ்வது இனிது. சான்றோர்கள் சபையில் அஞ்சாதவனுடைய கல்வி இனிது. தெளிவான பெருமை உடையவரின் செல்வம் நீங்காமை இனிது.

 

வெண்பா 13.

மான மழிந்தபின் வாழாமை முன்இனிதே

தான மழியாமைத் தானடங்கி வாழ்வினிதே

ஊனமொண் றின்றி உயர்ந்த பொருளுடைமை

மானிடவர்க் கெல்லாம் இனிது.     

 

விளக்கம்:ஒருவர்க்குத் தன் நிலையினின்றும் தாழ்ந்து பெருமை அழிய நேரிட்டால், மேலும் உயிர் வாழாதிருப்பது மிக இனியது. தானம் செய்து வாழ்வதற்குத் தகுந்தபடி தனது செல்வம் அழிந்து விடாமல் தான் அடக்கமாக வாழ்வதும் இனிமையானது. இடர்ப்பாடு ஏதும் சிறிதும் இல்லாமல் குற்றமற்ற பொருளை மிகுதியாகப் பெற்றிருப்பது மக்கள் அனைவர்க்கும் இனிமையானது. மானம் அழிதல் - நிலையினின்றும் தாழ்தல்.

 

வெண்பா 14.

குழவி தளர்நடை காண்டல் இனிதே

அவர்மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே

வினையுடையான் வந்தடைந்து வெய்துறும் போழ்து

மனனஞ்சான் ஆகல் இனிது. 

 

விளக்கம்: சின்னஞ்சிறு குழந்தைகளின் தள்ளாடும் நடையைக் காண்பது பெற்றோர்க்கும் உற்றோர்க்கும் இனியது. அக்குழந்தைகளின் மழலைச் சொற்களைக் கேட்பது தேவாமிர்தத்தினை விட இனியது. தீய செயல்களைச் செய்தவன் அதன் பயனாகத் துன்பம் வந்து அவன் மனம் நொந்து வருந்தும் போதும் மனம் அஞ்சாது இருப்பது இனியது.

 

வெண்பா 15.

பிறன்மனை பின்னோக்காப் பீடினி தாற்ற

வறனுழக்கும் பைங்கூழ்க்கு வான்சோர் வினிதே

மறமன்னர் தங்கடையுள் மாமலைபோல் யானை

மதமுழக்கங் கேட்டல் இனிது.        

 

விளக்கம்: பிறனுடைய மனைவியைத் திரும்பிப் பார்க்காத பெருமை இனிதாகும். போதுமான நீர் இல்லாததால் காய்ந்து வருந்தும் பசுமையான பயிர்களுக்கு வான்மேகத்திலிருந்து மழை பொழிவது மிக இனிதாகும். வீரமுடைய அரசரின் கடைவாயிலாகிய பின் முற்றத்தில் பெரிய மலை போன்ற யானைகளின் மதங்கொண்ட பிளிறலைக் கேட்பதும் இனிதாகும்.

 

இனியவை நாற்பது

பகுதி: 4 வாசிக்க அழுத்துங்கள்👉Theebam.com: இனியவை நாற்பது /04/இனிது,இனிது இவை இனிது:

 ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துங்கள்👉 Theebam.com: இனியவை நாற்பது /01/இனிது,இனிது இவை இனிது:

 

தேடல் தொடர்பான தகவல்கள்:

இனியவை நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இனிது, இனிதே, இனியது, இலக்கியங்கள், பெருமை, இனியவை, நாற்பது, பதினெண், கீழ்க்கணக்கு, கல்வி, இனிதாகும், இனிமையானது, வருந்தும், நிலையினின்றும், மனம், கேட்டல், வாழாதிருப்பது, வாழாமை, சங்க, தவறான, வழியிற், குழவி, செல்வம்