குறுங்கவிதைகள்

 


"இறக்கை கட்டிப் பறக்குது!!"

 

"இச்சை கொண்ட மனது இரண்டு

இளமை துடிப்பு உவகை கொடுக்க

இதயம் ஏங்கி கனவு கண்டு

இறக்கை கட்டிப் பறக்குது வானில்!"

 

"இமைகள் கதைக்க இன்பம் பெருக

இசைந்து இருவரும் ஆரத் தழுவ

இதழ்கள் கவ்வ கைகள் வருட

இறக்கை கட்டிப் பறக்குது உள்ளம்!"

 

🐦🐦🐦🐦🐦🐦

 

"கைபேசி"

 

'அறிவியல் கண்டு பிடித்த கைபேசி

அடக்கமான  நூதன கை பொறி !

அகிலம் இன்று சுருங்கி போக 

அழிவும் அதனுடன் ஒன்றிப் போச்சு !

 

அளவு அற்ற பயன்பாட்டை தந்து

அடிமை ஆக்குது மனித குலத்தை !"

 

📱📱📱📱📱

 

"வெளிச்சம்"

 

"வெள்ளம் போல் பணத்தைக் கொட்டி

வெளிச்சத்தில் தன்னை நல்லவனாகக் காட்டி

வெட்கம் என்பதை தள்ளி வைத்து

வெளிச்சம் தரும் அறிவை மறந்து

வெளிச்சவீடாய் இல்லாமல் இருண்டு கிடக்கிறான் ?"

 🗼🗼🗼🗼🗼

 

"தூது செல்வாயோ



வெண்ணிலவே
!!"

 

"தூக்கம் வராமல் நினைவுகள் வாட்டுகின்றன

தூரிகை எடுத்து வரைந்து மகிழ்கிறேன்!

தூய்மையான எம் காதல் தொடர

தூது செல்வாயோ வெண்ணிலவே எனக்காக!!"

 

"ஊடல் இல்லாத காதல் இல்லை

ஊமையாய் இருப்பவளை நீ தேற்றாயோ !

ஊழம் பல கண்டுவிட்டேன் வெண்ணிலவே

ஊரறிய கைப்பிடிக்க  தூது செல்வாயோ!!"

(ஊழம் - வைகறை, விடியற் காலை)

 🤟🤟🤟🤟🤟

.....

 

"கருத்தோவியம்"

 

"வித்தகர் வரைந்த அழகிய சித்திரம்

விவேகம் பொருந்திய கலை ஓவியம்

விழிப்புணர்வு கொடுத்த சமூக சிந்தனை

விபத்தை தடுக்கும் கருத்து படம்!"

 

🎭🎭🎭🎭🎭

 

"பெண்மையைப்  போற்றுவோம்!"

 

"பெண்ணையும் ஆணையும் சமமாக கருது

மண்ணையும் நீரையும் ஒன்றாக பார்

ஒன்று குறைந்தால் அங்கு வளமில்லை

நன்று உணர்ந்து பெண்மையைப் போற்றுவோம்!"

 👧👧👧👧

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

No comments:

Post a Comment