கொழுப்பை உறிஞ்சும் அன்னாசி (pineapple) இலை!
அப்படியே குப்பைக்குப் போகக் கூடியவை அன்னாசி இலைகள். ஆனால், அவை உடலில் அதிகம் கொழுப்பு சேராமல் தடுக்கும் என சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அன்னாசி இலைகளை உலர்த்தி, பொடியாக்கி மாத்திரையாக்கினர் விஞ்ஞானிகள்.பின்னர், மனித ஜீரண அமைப்பின் மாதிரியை உருவாக்கி, அதில் மாத்திரையை செலுத்தினர். அந்த மாதிரியில் செரிமான அமிலம் உள்ளிட்டவை இருந்தன. இதன் ஊடாக, மாத்திரைகள் நகரும்போது ஒரு அதிசயம் நடந்தது.
சமைத்த கொழுப்பு உணவுகளில் இருக்கும் கொழுப்பை அந்த குளிகைகள் உறிஞ்சிக் கொண்டன. எவ்வளவு தெரியுமா? ஒரு கிராம் அன்னாசி இலைப் பொடி, 45.1 கிராம் அளவு கொழுப்பை உறிஞ்சியது. பிறகு அந்த குளிகை, கொழுப்பு கலந்த உருண்டையாக மாறி, ஜீரண உறுப்பைக் கடந்து வெளியேறியது. இன்னும் இந்த கண்டுபிடிப்பு மனிதர்கள் மீது சோதிக்கப்படவில்லை. ஆனால், இந்த மாத்திரை சந்தைக்கு வந்தால், உடல் பருமனைக் குறைக்க உதவும்.
💊💊💊💊
மன நிலையை அளக்க ஒரு செயலி!
உங்கள் மன நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமா? அதற்காக வடிவமைக்கப்பட்டதுதான், 'மூட் - சீ ஹவ் யு பீல்' என்ற செயலி.
இதன் பயனாளி, தனது மனநிலை தற்போது எப்படி உள்ளது என்பதை, வண்ணங்கள் மூலம் பதிவு செய்ய வேண்டும். உதாரணமாக, அவர் இலகுவான மன நிலையில் இருந்தால், மென்மையான நிறங்களை தேர்ந்தெடுக்கலாம். இப்படி, ஒரு நாளில், மனநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் நேரும்போதெல்லாம் அவர், தன் இந்த செயலியைத் திறந்து, வண்ணங்களால் குறிப்பெடுக்கவேண்டும். இக்குறிப்புகளை, 'மூட் மீட்டர்' என செயலியை உருவாக்கியோர் குறிப்பிடுகின்றனர்.
இப்படி, வாரம் மற்றும் மாதக் கணக்கில் பதிவுகளைச் செய்தால், பயனாளியின் மனநிலை மாற்றம் குறித்த தெளிவு அவருக்கே ஏற்படும். அவர், சோர்வான மன நிலையில் இருந்தால், இந்த செயலிக் குறிப்புகளைப் பார்த்து, எப்போது அவருக்குள் மாற்றம் ஏற்பட்டது என்பதை, நோட்டம் விட்டாலே தெரிந்துகொள்ளலாம். மூட் செயலியை பயன்படுத்தும்போது, சுய விழிப்புணர்வு மற்றும் சுய மனக்கட்டுப்பாடு வர வாய்ப்புகள் அதிகம்.
சாலை போட உதவும் பழைய டயர்!
தார் சாலைகள் சூரிய ஒளியில் காய்ந்து, விரிந்து பழுதாகின்றன. இதை தடுக்க வீணாகும் ரப்பர் டயர்களை பயன்படுத்தலாம் என ஆஸ்திரேலியாவின் ஆர்.எம்.ஐ.டி., விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
வழக்கமான தார் சாலைகளின் மீது, 22 சதவீத அடர்த்தியுள்ள ரப்பர் டயர் துகள்களை அரைத்து மேல் படலமாகப் போட்டு ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் சோதித்தனர். அத்தகைய படலத்தின் மீது அடர்த்தியான புற ஊதாக் கதிர்களை ஒரு மாதத்திற்குப் பாய்ச்சினர்.
இதன் மூலம் ஒரு ஆண்டுக்கு சூரிய ஒளியில் நேரடியாக காய்ந்தது போன்ற தாக்கத்தை அவர்கள் ஏற்படுத்தினர். இதையடுத்து சோதித்தபோது, தார் - டயர் ரப்பர் கலவைச் சாலைக்கு இரண்டு மடங்கு ஆயுள் இருக்கும் என்று கணித்தனர். அதேபோல சாலையில் வாகனங்கள் செல்வதற்கும் இந்தக் கலவைச் சாலை ஏற்றதாக இருக்கும் என்றும் தெரியவந்தது.
வீட்டு வேலை செய்யும் ரோபோக்கள் !
வீட்டுத் தரை, தொழிற்சாலைத் தளம் என்று சுத்திகரிப்பதற்கு ரோபோக்களை பயன்படுத்துவதில் முன்னோடி டைசன் நிறுவனம். இது விரைவில், வீட்டு வேலைகளைச் செய்யும் ரோபோக்களை சந்தைக்குக் கொண்டுவரவிருக்கிறது.
அண்மையில் டைசன் வெளியிட்டுள்ள காணொளியில், ஒரு ரோபோ, தரையில் கிடக்கும் பொம்மைகளை தன் கை விரல்களால் எடுக்கிறது. பாத்திரங்களை உலர்த்தி அடுக்குகிறது. இருக்கை மீதுள்ள துாசியை 'வாக்குவம் கிளீன்' செய்வதுபோல உறிஞ்சுகிறது.
ரோபோவியலில் கடந்த 20 ஆண்டுகளாக டைசன் ஆராய்ந்து வருகிறது. இதனால் அது தரை துடைக்கும் வட்டவடிவ ரோபோவோடு நிற்கவில்லை. அடுத்து, வீட்டுக்குள் நடமாடி, கைநீட்டி, வேலைகளைச் செய்யும் அசல் ரோபோக்களை டைசன் சோதித்து வருகிறது.
டைசன் நிறுவனம், 2000த்தில் துவங்கி தற்போது வரை 250 ரோபோ வல்லுநர்களை தனது சிங்கப்பூர் மற்றும் பிரிட்டன் மையங்களில் பணிக்கு சேர்த்துள்ளது. விரைவில் ரோபோ துறையின் 750 மிகச் சிறந்த மூளைகளை வேலைக்கு அமர்த்தவுள்ளது.
இதன் மூலம், வருங்கால வீட்டு ரோபோக்கள் மற்றும் தனி நபர் உதவி ரோபோக்கள் சந்தையில் முன்னணி இடம் பிடிக்க டைசன் திட்டமிடுகிறது.
படித்ததில்
பிடித்தது
No comments:
Post a Comment