பாட்டி சொல்லைத் தட்டாதே"

 


நான் இப்ப வளர்ந்துவிட்டேன். பொறியியலாளராக வேலை செய்கிறேன். ஊர் உலகம் எல்லாம் சுற்றி திரிகிறேன். எத்தனையோ விதம் விதமான மனிதர்களையும் பண்பாடுகளையும் சந்திக்கிறேன். என்றாலும் நான் கண்ட, அனுபவித்த  பாட்டி - பேரன் தொடர்பை எனோ எங்கும் முழுமையாக காணவில்லை?

 

நான் அத்தியடி, யாழ்ப்பாணத்தில் பிறக்கும் பொழுது என் அம்மம்மாவோ அல்லது அப்பம்மாவோ இல்லை. என்றாலும் எங்கள் உறவினரான ஒரு பாட்டி, தன் மகன் மருமகளுடன் எம் அருகில் வாழ்ந்து வந்தார்அவருக்கு பேரனோ பேத்தியோ இல்லை, ஆகவே நாம் எல்லோரும் அவருக்கு பேரன் பேத்தியே!. நாம் அவரை அப்பாச்சி என்றே அன்பாக  கூப்பிடுவோம்.

 

நான் சின்னவனாக இருக்கும் பொழுது, பெரிய குழப்படி இல்லை என்றாலும் கொஞ்சம் முரடு, கொஞ்சம் என் வழி. எனக்கு சரியாக படுவதை நான் மற்றவர்களின் புத்தியை அலட்சியம் செய்து என் வழியில் செல்வேன்.

 

"குழந்தை பருவம் சுமாராய் போச்சு

வாலிப பருவம் முரடாய் போச்சு

படிப்பு கொஞ்சம் திமிராய் போச்சு

பழக்க வழக்கம் கரடாய் போச்சு"

 

மாரி காலம் வந்தாலே, எமக்கு ஒரே கொண்டாட்டம். அப்பொழுது எம் வீட்டுக்கும் அப்பாச்சி வீட்டுக்கும் இடையில் ஒரு வெறும் காணி மட்டுமே. நாம் எமது வேலியில் ஒரு பொட்டு வைத்து,  அதன் வழியாகப் புகுந்து அப்பாச்சியிடம் போவோம். அப்ப அந்த வெற்றுக் காணியில் நாம் மழையில் நனைந்து துள்ளி குதிப்போம். அம்மா எம்மிடம் மழையில் விளையாடாதே,

காச்சல் தடிமல் வரும், காரிருளில் பாம்பு  பூச்சிகள் வாரதும் தெரியாது என்று அச்சுறுத்தல் பாணியில் சொல்லுவார். எனோ அப்படியான பாணியை நான் மதிப்பதில்லை, இவன் சொல்வழி  கேளான் என எனக்கு ஒரே திட்டு தான்!

 

 

ஒரு நாள் அம்மாவின் திட்டலை கேட்ட அப்பாச்சி, என்னோடு விடு நான் அவனை சரிபடுத்துகிறேன் என்று சொல்லி, அவர் தன் வீட்டு திண்ணைக்கு என்னை அழைத்து போனார். முதலில் நீ  இதை சாப்பிடு என ஒரு  கறுத்தக் கொழும்பு மாம்பழம் வெட்டி தந்துவிட்டு, திண்ணையில் சாய்ந்தபடி கதைக்க தொடங்கினார்.

 

 

'கடவுள் எங்கே இருக்கிறார் ?'  என்று என்னை பார்த்து கேட்டார். இப்ப கேட்டால், பதில் வேறு விதமாக இருந்து இருக்கும், அந்த சின்ன வயதில்,  அவர் ஆகாயத்தில் இருக்கிறார் என மேலே  காட்டி ஒரு துள்ளு துள்ளினேன். 'சிறுநீர் கழிக்க போவதென்றால் என்ன செய்வாய்?' என தனது இரண்டாவது கேள்வியை கேட்டார். நான் அயோ, இதுவுமா பாட்டிக்கு தெரியாதென துள்ளி சிரித்தபடி, அதற்கு பதில் கூறினேன். அவர் விட்டபாடில்லை. 'கடவுள்  சிறுநீர் கழிப்பது என்றால் என்ன செய்வார்?' என மீண்டும் கேள்வி கேட்டார். நானும் கோபமாக, எரிச்சலாக, ஆகாயத்தில் தான் கழிக்க வேண்டும் என்றேன்.

 

அவர் தனக்குள் சிரித்தபடி, வெற்றிலை சீவலை வாயிலிட்டு மென்று கொண்டு, என்னை கட்டி பிடித்துக் கொண்டு, அது தான் ஆகாயத்தில் இருந்து கீழே மழையாக பொழிகிறது என்றார். நான் திடுக்கிட்டு போனேன். அந்த சிறுநீரிலேயா நான் விளையாடினேன் . எனக்கு ஒரே அருவருப்பு!

 

'பாட்டி சொல்லைத் தட்டாதே' என சொல்வதை பலமுறை கேட்டிருந்தாலும், அதை பலமுறை பொருட்படுத்தாமல் இருந்து இருந்தாலும், இந்த அசுத்தம், அழுக்கு, அருவருப்பு

போன்ற எண்ணங்கள் வர, நான் அப்படியே அப்பாச்சி சொல்லை கேட்டு, அன்றில் இருந்து மழையில் நனைந்து விளையாடுவதை நிறுத்திவிட்டேன்.

 

ஆமாம் பாட்டி எப்பவும் பேரன் பேத்தியின் நலத்திலேயே கூடுதலான அக்கறை உள்ளவர்கள். அவர்கள் பல நேரம் பொய் சொன்னாலும், அந்த பொய்கள் கட்டாயம் ஒரு நோக்கத்திற்காகவும் , பேரன் பேத்தியின் நன்மைக்காகவும்  என்பதே உண்மை!

 

"பாவம் பாட்டி தள்ளாடும் வயதிலும்

பாசம் கொண்டு மகிழ்ந்து வாரார்

பாதாளம் சொர்க்கம் புலுடா விடுவார்

பாவம் புண்ணியம் புராணம் வாசிப்பார்!"

 

"பாடி ஆடி விளையாட்டு காட்டுவார்

பால் கொடுத்து கதை சொல்லுவார்

பழக்க வழக்கங்களை திருத்தி எடுப்பார்

பக்குவமாகப் பேசி நம்ப வைப்பார்!"

 

"பாரிலே உன்னை பெருமை படுத்த

பாதி பொய்யும் கலந்து கூறுவார்

பாட்டி வாரார் பாட்டி வாரார்

பாட்டி சொல்லை இனி தட்டாதே!

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி,யாழ்ப்பாணம்]


0 comments:

Post a Comment