உலகெங்கும் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திலும் பிறப்பதில்லை. அது வளரும்போது, அதற்குப்
பகுத்தறியும் சக்தியோ, சுயமாய்ச் சிந்திக்கும் ஆற்றலோ இல்லாத பருவத்தில் இருந்தே, குழந்தையின் பெற்றோர்கள்
'நீ இந்தச் சமயத்தினன்' என்று முத்திரை குத்தி விடுவார்கள். அன்றிலிருந்து அக்குழந்தையைப் படைத்தவர், கட்டுப்படுத்திடுபவர், காப்பாற்றுபவர், பாவ புண்ணியங்களைக் கணக்குப் போடுபவர், சொர்க்கம், நரகம் என்று அனுப்ப முடிவு செய்பவர் எல்லாமே அந்தச் சமயத்தின் கடவுள் என்று, திரும்பத் திரும்பப்
போதனை செய்து, பிள்ளையை தங்கள் சமயச் சூழலிலேயே பிடித்து வைத்துக் கொள்வார்கள்.
ஒவ்வொரு சமயத்தினருக்கும் தன் சமயக் கடவுள்தான் உண்மையானவர் என்றும், உலகில் உள்ள இதர சுமார்
10,000 மதங்களின் கடவுள்மார் எல்லாம் போலிகள் என்றும், அவர்களை வணங்குபவர்கள் எல்லோரும் கடவுள் மறுப்பாளர்கள் என்று பழித்துரைப்பார்கள். மற்றைய போலிக் கடவுள்களை வணங்குவது பாவம் என்று அவர்களுக்கு வலியுறுத்தப் பட்டுள்ளது.
இந்த வரிசையில்,
கிறீஸ்த்தவர்கள் சொல்கிறார்கள் உலகில் 69% கடவுள் மறுப்பாளர்கள் என்று.
இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள் உலகில் 76% கடவுள் மறுப்பாளர்கள் என்று.
இந்துக்கள் சொல்கிறார்கள் உலகில் 85% கடவுள் மறுப்பாளர்கள் என்று.
பிரேம குமாரி மார்க்கத்தில் உள்ளவர்களோ உலகில் 99.99% மானவர்கள் பிழையான கடவுளை வணங்குகிறார்கள் என்று சொல்கிறார்கள்.
{இங்கு இந்து சார்பு மதங்களைப் பின்பற்றுபவர்கள் சிலர் தங்கள் கடவுள்களின் ஆற்றலில் சந்தேகப்பட்டு [எம்மதமும் சம்மதம் என்று ஒரு போலி சாட்டுச் சொல்லிக்கொண்டு(ஆனால் வேற்று மதத்தில் திருமண சம்பந்தம் செய்யார்)]} , பாதுகாப்பாக எதற்கும் வேறு சுவாமிகளையும் வணங்கி வைப்பார்கள்- ஒருவகையில் இவர்களும் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் தான்)
மொத்தத்தில், உலகின் கடவுளை நம்புகிற பிரிவினர், கடவுளை நம்பாதவர்கள்தான் கூடுதலாக இருப்பதாக எடுத்துக் கொள்கிறார்கள்..
கடவுள் சிந்தனையாளர்களில் அநேகமானோர், அவர்களுக்குச் செய்யப்பட்ட தொடர்ச்சியான மதபோதனைகள் காரணமாக, வானத்தில் இருக்கும் கடவுளின் CCTV கமெரா,
24/7 நேரமும், 365 நாட்களும் தங்கள் செயல்களைக் கண்காணித்துக் கவனமாகத் தொடர்ந்து படம் பிடித்துக்கொண்டு இருக்குமோ என்று நம்பி, (சிலவேளை உண்மையாய் இருந்தாலும் என்று பயந்து) எதற்கும் கடவுளை ஒதுக்கிவிடாது கும்பிட்டு வைத்தால்தான் என்ன நட்டம் என்று, கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாகத் தங்களைக் காட்டிக்கொண்டு திரிவார்கள்.
இந்த மதப் பிரியர்கள், கடவுளின் கமெரா மேலே இருப்பதால் மட்டுமே உலகில் குற்றச் செயல்கள் எதுவும் செய்வதில் ஈடுபடாமல் இருந்துகொள்வார்களோ? அது இல்லை என்று கண்டால்...? உலகம் தாங்காது போய்விடுமோ?
இப்படியான கட்டுரைகளை வாசித்தாலே கடவுள் தண்டித்துவிடுவார் என்று கன்னத்தில் போட்டுக் கொள்பவர்ள் இருக்கிறார்கள். வணங்குவது எங்கள் சொந்த விருப்பம் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். அதேபோல இப்படி எழுதுவதும் என்னுடைய சுதந்திரம் என்று நான் சொல்லுவேன்.
மதங்கள், கடவுள்கள், புனித நூல்கள் என்பன, 2000 வருடங்களுக்கு முன்பிருந்த, நாகரிகம் குன்றிய, பொது அறிவு அற்ற,
அயல் நாடுகளையே தெரிந்திருக்காத, பூமி, சூரியன், கிரகங்கள், நட்ஷத்திரங்கள் பற்றிப் புரிதல் இல்லாத, இயற்கை பற்றிய தெளிவு அற்ற,, பிரபஞ்சம் பற்றி ஒன்றுமே அறியாத, உயிர்களின் தோற்றம் பற்றி புரியாத, சிந்திக்கும் திறனற்ற, படிப்பறிவற்ற, உலகம் தெரியாத கிணற்றுத்தவளைகளாக வாழ்ந்துகொண்டிருந்த மக்கள் குழுவில் உள்ள ஒரு சில 'புத்தி ஜீவிகள்'
என்று போற்றப்பட்டவர்களால் காலம், காலமாக உருவாக்கப்படடவையே!
தங்களால் ஏன் என்று கண்டுபிடிக்க முடியாத, விளங்கிக்கொள்ள முடியாத எல்லாவற்றையும் கடவுள்தான் செய்கிறார் என்று முடிவு செய்து, கதை கட்டி விடுவிடுவார்கள்.
தெய்வ பயத்தைப் பூதாரகரமாக்கி, மக்களை அடிபணியச் செய்வதால், அவர்களை நற்செயல்களைச் செய்யத் தூண்டியதை நேரில் கண்டு, அன்றய அரசன்மாரும் கடவுள்களைத் தாங்களும் ஏற்று வளர்க்கலானார்கள்.
என்றாலும், கடவுளை உண்டாக்கியவர்கள் தங்கள் சுயநல தேவைகள், ஆசைகளையும் கடவுளின் போதனைகள் என்று சேர்த்துகொண்டார்கள். மாற்றுச் சமயத்தினனரைக் கொன்றொழித்தல், சிறைப்பிடித்தவர்களில் பெண்களைக் கற்பழித்தல், குழந்தைகளைப்
பாறையில் அடித்துக் கொல்லுதல், அடிமைகள் என்று ஒரு வர்க்கத்தினரை வகைப்படுத்தி, அவர்களை வியாபாரப் பொருட்களாக்கி கடுமையாக வேலை வாங்கி, அடித்துத் துன்புறுத்துதல், உயர் சாதியினர், கீழ் சாதியினர் என்று பிரித்து வைத்தல், பெண்களை போகப் பொருட்களாக விற்பனை செய்தல், ஆணிலும் கீழானவள் என்று பெண்களின் உரிமைகளை மறுத்தல் என்பதெல்லாம் கடவுளின் வாக்கு என்று போதித்துத் திரிந்தார்கள்.
தற்காலத்தில், பகுத்தறியும் ஆற்றல் மிஞ்சி நிற்பதால் இந்தப் பழைய கட்டுக்கதைகள் எல்லாவற்றையும் நம்பிக்கை வைப்பபவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகிறது. கடவுள் செய்கிறார் என்று அன்று நம்பியதை எல்லாம் இன்று மனிதன் செய்கிறான்; ஏன் நடைபெறுகிறது என்று விளக்கம் கொடுக்கிறான். இன்று விளக்கம் இல்லாது இருப்பனவற்றுக்கும் நாளை பதில் தருவான். கடவுள்தான் இவற்றைச் செய்கிறார் என்று ஒருபோதும் முடிவு செய்யமாட்டான்.
கடவுளை ஒருபக்கம் ஒதுக்கி வைத்த நாடு சீனா, கடவுள் இல்லாமலேயே உலகின் முதற்தர மட்டத்துக்கு உயர்ந்து கொண்டு இருக்கிறது. மற்றும் ஜப்பான், சிங்கப்பூர் கடவுளைப் பற்றி பெரிதாய் அலட்டிக் கொள்வதில்லை.
பெரும்பாலான ஐரோப்பிய, ஆஸ்திரலேசியா நாடுகளில் சுமார் 50% தினர்,
'கடவுள் இருப்பதை பற்றிக் கவலை இல்லாத' அல்லது
'கடவுள் இருக்கிறாரோ என்று தெரியாத' அல்லது
'கடவுளா? நானும் பார்க்கவேண்டும்' என்று கேட்கும், அல்லது
'கடவுள் இருந்தால் நல்லது' என்கின்ற, அல்லது
'கடவுள் இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே' என்கின்ற, அல்லது
'கோவில் பக்கமே போகாத' அல்லது
'கடவுளா? எங்கே?' என்கிற அல்லது
'கடவுளே இல்லை' என்று சொல்கின்றவர்கள்தான் (33%) இருக்கிறார்கள்.
கடவுளைப் பற்றி அலட்டிக் கொள்ளாத எல்லா நாடுகளும் வாழ்க்கைத் தரத்தில் மிக முன்னேறி இருக்கின்றன என்பது வெள்ளிட மலை. கடவுள்தான் எல்லாம் தருவார் என்று தங்கள் கடவுள்மாரை ஓயாமல் வணங்கிக்கொண்டிருக்கும் நாடுகள் எல்லாம் வறுமையில் தவிக்கின்றன.
[இதில் விதி விலக்கு:
1.அமெரிக்கா: அவர்கள் உலகோடு ஒத்துப்போக விரும்பாதவர்கள். மாறமாட்டார்கள். விரைவில் சீனாவினால் பின்தள்ளப்படுவார்கள்.
2. மத்திய கிழக்கு: உலகின் எண்ணெய்த் தேவை முடிந்ததும் பாதாளம் சென்று விடுவர்]
எல்லா மதத்தினரும் இறந்த பின்னர் கிடைக்க இருக்கும் சொர்க்கம், நரகம் மற்றும் மறு பிறப்பு என்ற கோட்பாடுகளை 100% மக்களை நம்ப வைப்பதில் வெற்றி கண்டுள்ளனர். எந்தவிதமான சாட்சியங்கள், அத்தாட்சிகள் ஒன்றுமே இன்றி, சொல்லுவதெல்லாவற்றையும் குருட்டுத் தனமாக எல்லோரும் அப்படியே நம்பிவிடுகிறார்கள்.
தீவிர நம்பிக்கையின் காரணமாக, குடி போதையில் தடுமாறுபவர்கள் சுய நினைவின்றி உளறுவதுபோல, மத
போதையில் இருப்பவர்கள் மிகவும் ஆக்கிரோஷமான முறையில் தங்கள் கடவுளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கோஷமிட்டுத் திரிவார்கள்.
இவர்கள் எப்படியும் தங்கள் கடவுளை நன்றாகவே காப்பாற்றிக் கொள்வார்கள். நோய் வந்து குணம்பெற்றால் 'கடவுள்தான் காப்பாற்றினார்' என்பார்கள். இறந்துவிடடால் 'கஷ்டப்படாமல் தனக்கு விருப்பமானவரை தன்னுடன் சேர்த்துக்கொண்டார்' என்பார்கள். விபத்தில் கால் முறிந்தால், 'கடவுள்தான் உயிரைக் காப்பாற்றினார்' என்று கடவுளுக்கு நன்றி செலுத்துவார்கள். கடவுளை உயிரோடு வைத்திருப்பதில் எல்லோரும் ஒன்றாகி நிற்பார்கள்.
ஒருவர் இறந்த பின்னர் என்ன நடைபெறுகிறது என்பது இதுவரை ஒருவருக்கும் தெரியாது. சரி, அப்படித்தான் அந்த தெரியாத, அறியாத, கற்பனையாகச் சொல்லப்பட்ட அந்த 'சொர்க்க, நரகத்துக்கோ, அல்லது நமக்குச் சம்பந்தமே இல்லாத அந்த வேறு ஒரு பிறப்புக்கோ, 'நாம்' செல்வோம் என்று கூறிக்கொண்டு, அதற்காக நாளாந்தம் வணங்கிக் கொண்டு திரிவது என்ன அப்பாவித்தனமோ தெரியவில்லை. நாம் இறந்த பின்னர் அது நாம் இல்லை; அந்த அது, ஏதோ, என்னோவோ, எப்போவோ, எங்கோவோ, எப்படியோ, அல்லது ஒன்றுமே இல்லாததாகவோ இருக்கும். அதற்கும் -இருந்தால்- எமக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லாது இருக்கும்.
பக்கத்தில் இருப்பவர்களே நல்லாய் இருக்கக்கூடாது என்று வயிறு எரிந்து கொண்டிருக்கும் பலர், எப்படித்தான் அந்த அறியாத ஒன்றுக்காக இரவும், பகலும் ஏங்கிக்கொண்டு திரிகிறார்களோ என்று புரியவே இல்லை.
நான் செய்யும் பாவங்கள் இறந்த பின்னர் முற்றிலும் அந்தத் தெரியாத இன்னொருவருக்கு/இன்னொன்றுக்குத்தான் போய்ச் சேர்ந்து, அந்த அவருக்குத்தான்/அதுக்குத்தான் தண்டனை என்று முடிவாகத் தெரியும் என்றால்,, பேசாமல் நான் கூடிய அளவில் பெரிய களவுகளை, மோசடிகளை, கொலைகளை
(பொலிசுக்குப் பிடிபடாமல்) செய்து, பணம் சேர்த்து மிகவும் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துவிட்டுப் போய்விடுவேனே!
ஏனென்றால், வரும் காலத்தில் எனக்குத் தெரியாத யாரையோ/என்னத்தையோதானே கடவுள் தண்டிக்கப் போகிறார்! அது நானல்லவே; எனக்கென்ன கவலை?
ஆகவே, மனிதம் மேம்பட நிஜமான நல்ல மனிதர்கள் தேவை; கற்பனைக் கடவுள்-கள் அல்ல!
ஆக்கம்-செ- சந்திரகாசன்
0 comments:
Post a Comment