தானியங்கி பயணியர் பேருந்து வெள்ளோட்டம்!
பிரிட்டனிலுள்ள 'பியூசன் புராசஸிங்' என்ற வாகன தயாரிப்பாளர்கள், பயணியர் பேருந்தில், ஐரோப்பாவில்
முதல் முயற்சியாக தானியங்கி தொழில்நுட்பத்தை சோதிக்கத் தொடங்கிஉள்ளனர். இரண்டு வாரங்களுக்கு மட்டும் வெள்ளோட்டத்தின் பின் , இந்த ஆண்டின் இறுதியில், ஸ்காட்லாந்திலுள்ள போர்த் ரோட் பிரிட்ஜ் என்ற சாலையில், 22.5 கி.மீ நீளமுள்ள பேருந்து வழித்தடத்தில் 'வழமையான சேவை ' தொடங்கிவிடும் என பியூசன் புராசஸிங் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஓட்டுனர் இல்லாத பேருந்தில் பயணிக்கும் அனுபவம் பாதுகாப்பானது என்று மக்கள் நம்பத் தொடங்கிய பிறகு, பிரிட்டன் முழுவதும் தொலைதுார பேருந்து சேவைகளை பியூசன் நிறுவனம் தொடங்கும்.
பருவநிலை மாற்றத்தால் தொற்றுகள் பெருகுமா?
அடுத்த 50 ஆண்டுகளில், பருவநிலை மாறுதலால் பல சீர்குலைவுகள் நிகழக் காத்திருக்கின்றன. அவற்றில் ஒன்று, பாலுாட்டிகள், பிற பாலுாட்டி இனங்களுக்கு வைரஸ் தொற்றுக்களைப் பரப்புவது அதிகரிக்கும். அதுவும் எவ்வளவு தெரியுமா? வரும் 50 ஆண்டுகளில் 15 ஆயிரம் புதிய வைரஸ் தொற்றுக்கள் பரவும் என்கிறது 'நேச்சர்' இதழில் வெளியாகியுள்ள ஒரு ஆய்வு.
மாரடைப்பை தடுக்க மரபணு சிகிச்சை!
உலகில் மரணத்திற்கான முன்னணி காரணியாக இருக்கும்
மாரடைப்புக்கு ஆளாவோர் உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிபரப்படி, வேகமாக அதிகரித்து வருகின்றனர்.
ஆனால், இதயநோய்க்கான சிகிச்சை முறைகள் குறைவாகவே இருக்கின்றன. அத்தோடு, அவற்றுக்கு வசூலிக்கப்படும் கட்டணங்களால், அச் சிகிச்சைகள் அனைவருக்கும் எட்டக்கூடியவையாக இல்லை. இந்த நிலையில், மரபணு சிகிச்சையால், பரம்பரை மாரடைப்பு நோயை தடுக்க முடியும் என்கின்றனர் வெர்வ் தெரப்யூடிக்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள்.
உலகெங்கும், 3.1 கோடி பேர் பரம்பரை இதய நோய் உள்ளவர்கள்.இதய ரத்தக் குழாய்களில் கொலஸ்ட்ரால் சேராதபடிக்கு மனித மரபணுவில் திருத்தம் செய்வது, மாரடைப்பு வரும் வாய்ப்பை முற்றிலுமாக தடுத்துவிடும் என வெர்வ் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த சிகிச்சை முறைக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் சில நிகழ்வுகளும் நடந்துள்ளன.
ஹார்வர்டு பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியர் ஒருவர், வெர்வின் இணை நிறுவனராக உள்ளார். முதலீட்டு ஜாம்பவானான 'கூகுள் வென்ச்சர்ஸ்', வெர்வ் தெரப்யூடிக்சில் முதலீடு செய்துள்ளது.வெர்வின் மருத்துவர்கள், ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட, 'கிறிஸ்பர் ஜீன் எடிட்டிங்' என்ற மரபணு திருத்த கருவியை பயன்படுத்துகின்றனர் இந்த முறை சற்றே சர்ச்சைக்குரியது என்றாலும், வேறு துறைகளில் நல்ல பலன்களை தந்துள்ளது.
பரம்பரையாக இதயநோய் வராமல் தடுப்பதற்காக ஒரே ஒருமுறை செய்யப்படும் சிகிச்சையாக இது இருக்கவேண்டும் என வெர்வ் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த புதிய மரபணு சிகிச்சை முறையை, ஏற்கனவே பரம்பரை காரணமாக மாரடைப்பு வந்த நோயாளிகளுக்கு பயன்படுத்த வெர்வ் விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
பாசி தரும் மின்சாரம்!
சிறிய மின்னணுக் கருவிகள் அதிகம் வரத் துவங்கியுள்ளன. இதனால், அவற்றுக்கு மின்சக்தியைத் தரவும் புது வழி தேவை, பிரிட்டனிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், நீலப் பச்சை பாசி மற்றும் சூரிய ஒளியை வைத்து மின் உற்பத்தி செய்யும் கருவியை உருவாக்கியுள்ளனர்.
இதிலிருந்து கிடைத்த மின்சாரத்தை வைத்து, ஒரு ஆண்டுக்கு ஒரு கணினியின் சில்லினை இயக்கியுள்ளனர். மின்கலன் அளவேயுள்ள ஒரு பெட்டியில் நீரை ஊற்றி, அதில் பாசியை ஆராய்ச்சியாளர்கள் மிதக்கவிட்டனர். ஒரு பகுதியில் கண்ணாடி வழியே சூரிய ஒளி பாசி மீது பட்டது. இதன் வாயிலாக நடக்கும் ஒளிச்சேர்க்கையோடு, எலெக்ட்ரான்களும் உற்பத்தியாகும். அதை, ஒரு அலுமினிய மின் முனை வழியே மின் கலனுக்கு அனுப்பி சேகரித்தனர்.
இந்த சிறிதளவு மின்சாரத்தை வைத்து, ஆர்ம் கார்டெக்ஸ் என்ற சிலிக்கன் சில்லினை இயக்கிக் காட்டினர் விஞ்ஞானிகள். இணையத் தோடு இணைந்து செயல்படும் சிறு கருவிகளை இயக்க, இத்தகைய கண்டுபிடிப்புகள் உதவும்.
தொகுப்பு:செ.மனுவேந்தன்
No comments:
Post a Comment