பழகத் தெரிய வேணும் – 24

ஹைட்ரஜனும் முட்டாள்தனமும்

முட்டாள்தனமாக நடப்பவர்களுக்கு மரண தண்டனை என்று ஒரு சட்டம் கொண்டுவந்தால், உலகத்தில் மக்கள்தொகை வெகுவாகக் குறைந்துவிடும்,” என்று அபிப்ராயப்படுகிறார் ஒரு புத்திசாலி.

ஒரு துணுக்கு

மாணவன்: நான் அரசியல்வாதியாகப் போகிறேன்.

ஆசிரியர்: பின்னே ஏண்டா பள்ளிக்கூடத்துக்கு வருகிறாய்?

ஓயாமல் பேசும் ஒரு பெண்ணைக் கேட்டேன், “ஏன் இப்படிப் பேசிண்டே இருக்கே?”

அப்போதான் மூளை வளரும்!”

அறிவார்த்தமாகப் பேசுவதும், முப்பது வயதாகியும், தன் குரலைக் கேட்பதே ஆனந்தம் என்பதுபோல் அர்த்தமில்லாமல் பேசுவதும் ஒன்றாகிவிடுமா?

பலர் கூடியிருக்கும் இடத்தில் நிறையபேர் இப்படித்தான் பேசுகிறார்கள். பிறர் சொல்வதைச் சரியாகக்கூடக் காதில் வாங்காவிட்டாலும், ஒன்று சேர்வதாலேயே பலம் கிடைக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட புத்திசாலிகள் இவர்கள்.

உலகில் அதிகமாகக் காணப்படுவது ஹைட்ரஜனும் முட்டாள்களும்தான்,” என்று சொல்லி வைத்திருப்பது இதற்காகத்தானோ?

தம்மைப்போல் இல்லாதவர்கள் முட்டாள் என்று நம்புகிறவர்கள் ஆபத்தானவர்கள்.

எங்கள் பள்ளிக்கூடத்திற்குப் புதிதாக வந்த ஆசிரியை நோரய்னியின் கதையைக் கேட்போமா?

தினம் தவறாது, ஏதோ ஒருவித மலாய் கேக் வாங்கிவந்து, பிற ஆசிரியைகளுக்கு விநியோகம் செய்வாள்.

இவளுக்கு எதற்காக நன்றிக்கடன் படவேண்டும்!’ என்று நான்மட்டும் வாங்க மறுத்துவிடுவேன்.

தன் தாராள சிந்தனையையும், பிறரிடம் தனக்கு எவ்வளவு அன்பு என்றும் காட்டிக்கொள்ள வேண்டுமாம்!

அவள் திட்டம் பலித்தது. மற்றவர்கள் எல்லாரும் அவளை உயர்ந்த இடத்தில் வைத்து, அவளுக்குக் கட்டுப்பட்டார்கள்.

போகப் போக, அவள் குணம் புரிந்தது.

யாராவது அவள் கூறிய கருத்தை ஏற்காவிட்டால் அவர்களுடன் பேச மறுத்து, முறுக்கிக்கொள்வாள். தான் சொல்வது தவறு என்று தெரிந்தும், அதை ஏற்க மறுப்பாள்.

வீண்விவாதம் செய்வது இவளைப் போன்றவர்களுக்குப் பிடித்த வேலை. (உண்மையைவிட அதிகமாகத் தன்னை நேசிப்பதாலோ?)

என்னிடம் முறையிட்டாள் ஒருத்தி.

நீங்கள்தான் அவளைப் புரிந்துகொள்ளாது, ஒரேயடியாகக் அவளைக் கொண்டாடினீர்கள்!” என்று சுட்டிக்காட்டினேன்.

நோரய்னியின் பெயருக்குப்பின் தந்தையின் பெயர்வெள்ளைஎன்று மலாயில் குறிப்பிடப்பட்டிருக்கும். அவளுடைய தந்தை ஜப்பானியர் என்று என்னிடம் கூறியிருந்தாள்.

ஆச்சரியப்பட்டு, “இந்நாட்டில் மலாய்ப்பெண்கள் ஜப்பானியரை மணந்தார்களா?” என்று மூத்த சரித்திர ஆசிரியை ஒருத்தியிடம் ரகசியமாகக் கேட்டேன்.

இல்லை. ஆசைநாயகியாகத்தான் இருந்தார்கள்!” என்ற பதில் கிடைத்தது.

முறை தவறிப் பிறந்திருக்கிறோமே என்ற வருத்தமோ என்னவோ நோரய்னிக்கு.

சக ஆசிரியைகளின் மகிழ்ச்சியை எப்படிக் குலைப்பது?’ என்று யோசனை போக, அதற்கும் ஒரு வழி கண்டுபிடித்தாள்.

பள்ளியில் அடிக்கடி மாறும் ஒவ்வொரு தலைமை ஆசிரியையும் வலியப்போய் நட்புகொள்வாள். அப்போதுதானே பிறரைப்பற்றிய வம்பு மேலதிகாரிக்குப் போகும்?

ஒரு முறை, நான் ஏதோ பேசும்போது, அவள் பக்கம் கண்ணைக் காட்டினார்கள், ‘பத்திரம்!’ என்று எச்சரிக்கை செய்வதுபோல்.

நான் உரக்கவே, “கிடக்கிறாள்! பயந்தாங்கொள்ளி!” என்று அலட்சியமாகக் கூற, பக்கத்தில் உட்கார்ந்திருந்த நோரய்னி குறுகிப்போனாள்.

அவளுக்கு ஐம்பது வயதிருக்கும். வயதானால் அழகு குறையலாம், ஆனால் முட்டாள்தனம் என்னவோ மாறுவதில்லை.

நோரய்னி முட்டாளா, தீயகுணம் படைத்தவளா, பரிதாபத்துக்கு உரியவளா?

எல்லாரும், எப்போதும் தான் சொன்னபடியே நடக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பில், உண்மையான அன்பைத் தேடத் தெரியாத முட்டாள்.

தன்னை ஏன் எல்லாரும் ஒதுக்குகிறார்கள் என்று புரிந்துகொள்ளும் அறிவற்றவள்.

புறம் பேசி, பிறரைப் பிரச்னையில் மாட்டிவிட்டபோதோ..!


முட்டாள்தனமும் மூடநம்பிக்கைகளும்

ராகு காலத்தில் விமானம் புறப்படுகிறது. கண்டிப்பாக, ஏதாவது அசம்பாவிதம் நடக்கும்!’ என்று எண்ணிக் கலங்கியபடியே பயணிக்கிறார் ஒருவர்.

அவர் போகுமிடத்தில் பத்திரமாகக் கொண்டு சேர்த்துவிடுகிறது விமானம். கெட்டது நடக்கும் என்று எதிர்பார்த்து, அவர் கொண்ட கலக்கம்தான் அவர் எதிர்பார்த்த விளைவு.

கருமை நிறம்

கருமை நிறம்கொண்டு பிறந்துவிட்ட மனிதர்கள் மட்டும் ஒதுக்கப்படுவதில்லை. கறுப்புப் பூனைகளும்தான்.

கடந்த பதின்மூன்று வருடங்களில், ஆறு கறுப்புப் பூனைக்குட்டிகளை யார் யாரோ கொண்டு வந்து எங்கள் வீட்டருகே விட்டிருக்கிறார்கள். நாங்கள் அவைகளை அன்புடன் பராமரிக்க, எங்கள் குடும்பத்தில் ஓர் அங்கத்தினராக வளையவரும்.

சின்னா என்ற பெண்பூனை என் மடியில் உட்காரும், நான் சொன்னதைக் கேட்கும். நான் பேசுவதிலிருந்து தானும் கொஞ்சம் பேசக் கற்றுவிட்டது.

சற்றுப் பெரிதாகி, சறுக்கி விழுந்துவிட்டதால், “மடியில ஒக்கார்றியா?” என்று நான் கேட்டபோது, “ஏனாம் (வேண்டாம்)” என்று முனகியது.

அன்பும் கட்டுப்பாடும்


கதை:

ராகினி படிப்பில் சோடையில்லை. அது போதாதா? பதினாறு வயதான தன்னை ஏன் இன்னும் கட்டுப்படுத்துகிறாள் தாய் என்ற ஆத்திரம் எழுந்தது அவளுக்குள்.

பள்ளித்தோழிகளுடன் சேர்ந்துகொண்டு, ‘சுதந்திரம்என்ற பெயரில் மனம்போன போக்கில் நடந்தாள்.

இருபது வயதானபோது, டிஸ்கோவிற்குப் போவது, மது அருந்துவது, ஆண்களுடன் தகாத முறையில் பழகுவது என்று அவளுடைய சுதந்திரப்போக்கு விரிந்தது. இதையெல்லாம் விதவைத் தாய் கடுமையாகக் கண்டிக்க, வீட்டைவிட்டு வெளியேறினாள்.

அவளுடைய பள்ளித்தோழி, லெங், வேலை நிமித்தம் தனியாக கோலாலம்பூரிலேயே தங்க நேரிட்டது. (அவளுடைய பெற்றோர் வேறு ஊரில் இருந்தார்கள்).

இத்தோழியுடன் தங்கி, இருவருக்கும் சேர்த்துச் சமைக்கையில், சுதந்திரமாக உணர்ந்தாள் ராகினி.

பல வருடங்களுக்குப்பின், அவளுடைய மகளுக்கும் பதின்ம வயதானபோதுதான் அவளுக்குத் தன் தாய் காட்டிய கண்டிப்பின் காரணம் தெளிவாகியது. தான் இப்போது மகளின் பாதுகாப்புக்காக கவலைப்படுவதுபோல்தானே அன்று அம்மாவும் கவலைப்பட்டிருப்பாள்!

முட்டாள்தனமாக, வயதான அம்மாவைத் தனியாகத் தவிக்க விட்டுவிட்டு, எங்கோ போய் சமைத்துப் போட்டுக் கொண்டிருந்துவிட்டேனே!’ என்று மிகவும் வருந்தினாள்.

ஆனால், அவளது மன்னிப்பை ஏற்க அம்மா உயிருடன் இல்லை. கடைசிவரை, மகளுடன் வந்து தங்க விரும்பாது, தனியாகவே வாழ்ந்தாள்.

பலருக்கு வாழ்க்கையில் எது முக்கியம் என்று புரிவதில்லை.


கதை:

படிப்பில் அக்கறையே காட்டாது இருந்த ஒரு மாணவனிடம், “நீ படிக்காவிட்டால் நல்ல வேலை கிடைக்காதே! பணத்துக்கு என்ன செய்வாய்?” என்று நான் கேட்டபோது, “அப்பா கொடுப்பார்!” என்றான்.

உனக்குக் கல்யாணமாகி, குடும்பம் பெருகிவிட்டால்?”

அப்போதும் அப்பா கொடுப்பார்”.

இந்த இருவரில் யார் முட்டாள்? அப்பாவா, மகனா?

மகன் எந்தக் காலத்திலாவது தன் சொந்தக்காலில் நின்றாகவேண்டும் என்று புரிந்துகொள்ள விரும்பாது, அவன் தன்னையே சார்ந்திருக்கும்படி செய்யும் அப்பாதான்.


சுயநலமான சுதந்திரம்

ஃப்ளூ காய்ச்சல் பரவாதிருக்க எல்லாரும் முகமூடி அணியவேண்டும் என்ற அதிகாரபூர்வமான ஆணை பிறந்தது. இன்றல்ல. 1918-ல்! ஸான் ஃபிரான்சிஸ்கோவில்.

எங்களுடைய தனிப்பட்ட உரிமையைப் பறிக்கிறீர்கள்!’ என்று 4,500 பேர் ஒன்றுகூடி எதிர்ப்பு தெரிவித்தார்களாம்.

தங்களுடன் பிறரையும் ஆபத்துக்கு ஆளாக்குகிறோம் என்று புரிந்து நடக்காதவர்களை என்னவென்று சொல்ல!

:-நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர், சமூக ஆர்வலர்-/- மலேசியா.

தொடரும்.... 
👉அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக
👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக 

 

No comments:

Post a Comment