பழகத் தெரிய வேணும் – 23

 

 அழகு எதில்......?



நான் பார்த்ததிலேயே அவள்தான் பேரழகி!’

தாய்லாந்துக்கு வந்தபோது அந்நாட்டுப் பெண் ஒருத்தியைக் கண்டபோது, ஓர் அயல்நாட்டுக்காரருக்கு இப்படித் தோன்றியதாம். பெருமுயற்சியுடன் அவளை மணந்துகொண்டார்.

இதைப் படித்த நான் பேராவலுடன் பக்கங்களைப் புரட்டினேன், அவள் புகைப்படம் இருக்கிறதா என்று பார்க்க.

இவளையா அழகி என்றார்!’ என்ற வியப்புதான் எழுந்தது.

நான் அவளது தோற்றத்தை வைத்து எடைபோட்டேன். அவரோ, அழகு என்பது வெளித்தோற்றத்தில் இல்லை என்பதைப் புரிந்துகொண்டவர்.


உடலழகு எத்தனை காலம் நீடிக்கும்?

முன்பெல்லாம் யாராவது ஒரு கல்யாணத்திற்குப் போய்வந்தால், பிற பெண்கள் அக்கறையாக விசாரிப்பார்கள்: ‘பொண்ணு அழகா இருக்காளா?’

(அழகாக இல்லாவிட்டால் கல்யாணம் பண்ணிக்கொள்ளக்கூடாதா?)

ஒரு பிள்ளை பெற்றதுமே சிலர் பருமனாகி விடுகிறார்கள். ‘அழகு!’ என்று அவளை மணந்தவன் ஏமாற்றத்துக்கு ஆளாகலாம். ஒரு சிலர், அவள் எல்லா உயிர்களிடத்தும் அன்பும் பரிவும் காட்டுவதைக் கண்டு சமாதானம் அடைவதும் உண்டு.

 

கதை;

மிஸ். ஹோ தன் வாயிலிருந்து உதிரும் ஒவ்வொரு வார்த்தையையும் பிறரது கவனத்தை ஈர்க்கும் வண்ணம் உச்சரிப்பாள். அதிநாகரீகமாக வெட்டப்பட்ட தலைமுடி, முக ஒப்பனை, உடற்கட்டு ஆகியவைகளிலும் அவள் எடுத்துக்கொள்ளும் பிரயாசை பிற இளம்பெண்கள் பொறாமையுடன் வெறிப்பதிலிருந்து புரியும். அதனால் அவளுடைய கர்வம் ஓங்க, தோற்றத்தில் இன்னும் அதிக கவனம் செலுத்துவாள்.

தன் புற அழகில் மிகுந்த அக்கறை செலுத்தியவளுக்கு தன்னைவிடச் சிறந்த யாரையாவது பார்க்க நேர்ந்தால் பொறாமை கிளர்ந்துவிடும்.

அந்தப் பெண் வேறு ஏதாவது துறையில் இருப்பாள். ஆனாலும், அழகில் தன்னைவிட மிகச் சுமார் என்று மதிப்பிட்டுவிட்டு, `அவளுக்கு இவ்வளவு கௌரவம் கிடைக்கிறதே!’ என்று மாய்ந்துபோவாள்.

 

பொறாமை அழகைக் கெடுக்கும்.

சின்ன வயசில பன்னிக்குட்டிகூட அழகாத்தான் இருக்கும்!’ என்று கூறக் கேட்டிருப்பீர்கள். அந்த வயதில் மனதில் களங்கமிருக்காது. அதுவே அழகாகத் தோன்றும்.

வயது ஏற ஏற, எதற்கெடுத்தாலும் போட்டி, பொறாமை என்று பல குணங்கள் எழுந்துவிடுகின்றனவே! அவைகளை அடக்காதவர்களின் கண்களில் அழகு குறைந்து காணப்படும்.


அழகிற்கும் வயதிற்கும் சம்பந்தமில்லை.

சில முதியவர்களைக் கண்டு, ‘இந்த வயதிலும் இவ்வளவு அழகாக இருக்கிறார்களே!’ என்று ஆச்சரியப்படுகிறோம்.

அவர்களுடைய அழகின் ரகசியம் என்ன?

அன்பும் நேர்மையும் கொண்டவர்கள் என்றும் அழகாகத் தோற்றமளிப்பார்கள். அவர்கள் பல தோல்விகளை, துயரங்களைத் தாண்டி வந்திருப்பார்கள். அவைகளால் ஒரேயடியாக இடிந்துபோகாது, `பிறரும் நம்மைப்போல் இதையெல்லாம் அனுபவிக்கவில்லையே!’ என்று எண்ணி வருத்தமோ, ஆத்திரமோ கொள்ளாது எல்லோரிடமும் கருணை காட்டுவார்கள்.

இயற்கையை ரசிப்பதற்கும் இத்தகைய நுண்ணிய உணர்வு வேண்டும். பரபரப்பான உலகில் வாழ்கிறவர்களின் எண்ணப்போக்கு இப்படி இருக்கும்: ‘சூரியன் தினமும்தான் உதிக்கிறது, மறைகிறது. சூரியோதயத்திலும், அஸ்தமனத்திலும் அப்படி ரசித்துப் பார்க்க என்ன இருக்கிறது?’

கோலாலம்பூர் ஜனசந்தடியில் வாழ்ந்து பழக்கப்பட்ட இரு இளம்பெண்கள் அண்டைநாடான தாய்லாந்திலுள்ள ஒரு தீவிற்குப் போனார்கள்.

இங்கு கார் சத்தமே கேட்கவில்லையே! எதையோ இழந்தது போலிருக்கிறது,’ என்று ஒருத்தி அங்கலாய்க்க, அவள் தோழியும் ஒத்துக்கொண்டாள்.

கடலும், அதைச் சுற்றியிருந்த அழகும் இவர்கள் கண்களில் தென்படவில்லை.

பிறர் பார்த்து ரசிக்காததால் இயற்கைக் காட்சிகள் அழகற்றவை என்றாகிவிடுமா?

நம்மைப் பிறர்அழகுஎன்று புகழ்ந்தால்தான் அழகானவர்களா?

தன் குஞ்சு பொன்குஞ்சு என்று காக்கை நினைக்குமாம். மனிதத் தாய்மார்கள் அனைவரும் அப்படி இருப்பதில்லை.

 

கதை:-

என் சக ஆசிரியை மிஸஸ் சாங் நீண்ட விடுமுறை நாட்களிலும் வேலையை இழுத்துப் போட்டுக்கொள்வாள்பிற பள்ளிகளில் நடக்கும் தேர்வுக்கூட கண்காணிப்பு என்ற பெயரில்.

மற்ற ஆசிரியைகளோ, அத்தொல்லையிலிருந்து எப்படித் தப்பலாம் என்று வழிகளைத் தேடுவார்கள்.

அதனால் நான் ஆச்சரியப்பட்டு கேட்டபோது, “என் தந்தை தன்னைப் பார்க்க வரும்படி அழைப்பார். அதைத் தவிர்க்கத்தான்!” என்றாள் மிஸஸ் சாங்.

அவளுடைய பெற்றோர் வேறு ஒரு ஊரில் வசித்தார்கள்.

என் அம்மாவுக்கு என்னைப் பிடிக்காது. சிறுவயதிலிருந்தே என்னை, `அவலட்சணமாக இருக்கிறாய்!’  என்று கரித்துக்கொட்டுவாள். என் தங்கை அழகு என்று அவளைத்தான் பிடிக்கும்,” என்று உணர்ச்சியற்ற குரலில் தொடர்ந்தவளுக்கு நாற்பது வயதுக்கு மேலிருக்கும்.

இன்றும், என் மகளைவிட தங்கையின் மகளைத்தான் பிடிக்கும். என்னைத் திட்டுவதையும், ‘அழகில்லைஎன்று பழிப்பதையும் நிறுத்தவில்லை. அதனால் எனக்கு அங்கு போகப் பிடிப்பதில்லை. இதையெல்லாம் அப்பாவிடம் சொல்ல முடியுமா? ‘வேலை வந்துவிட்டதுஎன்று சொல்லி தப்பித்துக்கொள்வேன்”.

சராசரி சீனாக்காரிகளைப்போல் மூக்கு சப்பையாக, சிறிய கண்களுடன் இருப்பாள் மிஸஸ் சாங். ஆனால், தாயின் பழிப்பு மனதில் தேங்கிவிட, ‘இவள் விகாரமாக இருக்கிறாள்என்று ஒரே பார்வையில் பிறர் எடைபோடுவதைக் கேட்டிருக்கிறேன்.

தாய் ஏற்காததால் அவளுக்குத் தன்னைத்தானே ஏற்க முடியவில்லை. தன்னம்பிக்கை குறைய, பார்ப்பவர்கள் அனைவரைப்பற்றியும் இளக்காரமாக எண்ணிப் பேசுவாள்.

இதற்கு நேர் எதிரானவள் குழந்தை சமந்தா.

அவளுக்கு நான்கு வயதானபோது, `நீ ரொம்ப அழகு!’ என்று எல்லாரும் புகழ, ‘நான் ரொம்ப அழகு. இல்லே?’ என்று திரும்பத் திரும்பச் சொல்ல ஆரம்பித்தாள்.

இது கர்வமில்லை. நல்லதோ, கெட்டதோ, தன்னைப்பற்றி பிறர் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே ஏற்பது குழந்தைகளின் வழக்கம்.

அழகிற்கு அவ்வளவாக முக்கியத்துவம் அளிக்காது, புத்திசாலி! சமத்து!’ என்று நற்குணங்களைப் பாராட்டிப் பாருங்கள், அப்படியே நடப்பார்கள்.

புற அழகைப் பாராட்டிக்கொண்டே இருந்தால், அதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கத் தோன்றும்.

அழகுஎன்று பலரிடமிருந்தும் பாராட்டு கிடைத்துவிட்டால், அதிலேயே திருப்தி ஏற்பட்டுவிடுகிறது. ‘கஷ்டப்பட்டு அறிவை வளர்த்துக்கொள்வானேன்!’ என்று தோன்றிவிட, இப்படிப்பட்ட மாணவிகள் படிப்பில் சோடையாக இருப்பதைக் கண்டிருக்கிறேன்.


ஒரு துணுக்கு

அவள் அழகு அவளுடைய தந்தையிடமிருந்து வந்தது.

அடேயப்பா! அவ்வளவு அழகா அவர்?

இல்லை, பிளாஸ்டிக் சர்ஜரி செய்பவர்.

வயதாகிவிட்டதால் காணாமல் போய்விட்ட புறஅழகை அறுவைச்சிகிச்சைமூலம் திரும்பக் கொண்டுவர முயற்சி செய்கிறார்கள் நடிகையர்.

பணக்காரராகப் பிறந்து, ஏழையாகப் போவதுபோல்தான் அழகும்!” என்று அழகின் நிலையாமையை அலசுகிறார் அமெரிக்க நடிகை ஜோன் காலின்ஸ்.

அறிவுதான் எந்த வயதிலும் அழியாதது.

இது புரிந்து, ‘மூக்கும் கண்ணும் இயற்கையில் அமைந்தது. இதில் நான் பெருமைப்பட என்ன இருக்கிறது!’ என்ற மனப்பாங்கை வளர்த்துக்கொண்டால் அகமும் அழகாகும்.

 

:-நிர்மலா ராகவன்:-/எழுத்தாளர், சமூக ஆர்வலர்-/-:மலேசியா.

தொடரும்.... 
👉அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக
👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக 

1 comments:

  1. பகிர்ந்து உதவியுள்ளேன்

    ReplyDelete