பழகத் தெரிய வேணும் – 22

-நீங்கள் ஆமையா, முயலா?-

ஒரு சிறுவன் தன் பொம்மைக்காரில் பேட்டரியைப் பொருத்தப் படாத பாடுபட்டான். முதலில் முடியவில்லை. அழுதபடியே மீண்டும் முயன்றான்.

 

இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?

 

பாவம், குழந்தை! அழுகிறானே!’ என்று அவன் கையிலிருப்பதைப் பிடுங்கி, நீங்களே உதவ நினைக்கிறீர்களா?

 

அது அன்பான செயல் என்று நீங்கள் நினைக்கலாம்.

 

ஆனால், அவனுடைய அழுகை பலக்கிறது. ஏனெனில் அவன் கையாலாகாதவன் என்று பிறர் நினைக்கிறார்கள். அது அவனுடைய தன்னம்பிக்கைக்குச் சவால்.

 

நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கும்போதே அவன் எடுத்த காரியத்தில் வெற்றி அடைகிறான். பேட்டரி சரியான இடத்தில் அமர, கார் ஓட ஆரம்பிக்கிறது.

 

நான் கெட்டிக்காரன்!’ என்ற பெருமிதம் எழுகிறது. அப்போது சிறுவன் முகத்தில் தோன்றும் களிப்பே தனிதான்.

 

தவறுகள் நிகழ்வது தவிர்க்க முடியாத ஒன்று. அதனால் பயந்து, பாதியில் நிறுத்திவிடுவதுதான் தவறு(உளவியலாளர் ஸ்கின்னர்).

 

பொதுவாகவே, குழந்தைகள் பாடும்போதோ, வாய்ப்பாடு ஒப்பிக்கும்போதோ கடைசி ஓரிரு வார்த்தைகளை அல்லது எண்களை அதிவேகமாகச் சொல்லி முடிப்பார்கள். அவர்களுக்கு எப்படியாவது முடிவை அடையவேண்டும் என்ற வெறி.

 

வாழ்க்கையில் வெற்றி பெற அப்படி அவசரப்படுவது தகாது. பொறுமையும் நிதானமும் அவசியம். குறுகிய காலத்தில் சாதிக்க நினைத்தால் எந்தக் காரியமும் அரைகுறையாகத்தான் முடியும்.

 

மேரி க்யூரி (MARIE CURIE) தனக்கு அளிக்கப்பட்ட சிறந்த அறிவுரையாகக் கருதுவது: முன்னேறுவது என்பது எளிதானதோ, விரைவாகக் கிடைப்பதோ அல்ல”.

 

இந்த உண்மை புரிந்துதான் இருமுறை நோபல் பரிசு வாங்கியிருக்கிறார்பௌதிகத்திலும், ரசாயனத்திலும்.

 

இதைத்தான்ஆமையும் முயலும்கதைவழி சிறுவர்களுக்குப் போதிக்கிறோம்.

 

எந்தக் காரியமும் செய்வதற்குமுன் கடினமாக, நம்மை அயர்ச்சி அடையவைப்பதாகத்தான் இருக்கும். அதற்காக, கனவுடனேயே திருப்தி அடைந்துவிடலாமா?

 

கதை:

ராஷ்டிரகூட அரசனாகிய முதலாம் கிருஷ்ணனுக்கு ஒரு கனவு இருந்தது. ஔரங்காபாத் அருகிலிருக்கும் எல்லோராவில் ஒரே கல்லில் கைலாசநாதர் கோயில் கட்டவேண்டும் என்பதுதான் அது. அதனைக் கட்டி முடிக்க இருபத்தாறு ஆண்டுகள் ஆயிற்று.

நல்ல வேளை, ஆரம்பித்தபின்னர் மனம் தளர்ந்து, இது நடக்கிற காரியமா!’ என்று அரசன் யோசித்து, எடுத்த முயற்சியைக் கைவிடவில்லை.

ஒரே கல்லைக் குடைந்து, இவ்வளவு பிரம்மாண்டமாகக் கட்டுவது மனிதனால் முடிகிற காரியமே இல்லை. வேற்று கிரகவாசிகள் செய்ததாக இருக்கும்,’ என்று அயல்நாட்டவர்கள் ஆற்றாமையுடன் ஒரு வதந்தியைக் கிளப்பிவிட்டிருக்கிற அளவுக்கு அசாதாரணமான சின்னமாக எல்லோரா குகைக்கோயில் ஆகியிருக்காது.

 

கஜினி முகமது

 

ஒரு காரியத்தில் நாம் வெற்றி பெறாவிட்டால் என்ன! அதிலும் ஒரு சௌகரியம். மீண்டும் செய்யும்போது முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டியதில்லை.

 

ஒரு மாணவன் பல முறை பரீட்சையில் தோல்வியுற்று, மீண்டும் மீண்டும் முயற்சி செய்தால் அவனை கஜினி முகமது என்று கேலியாகக் குறிப்பிடுவார்கள்.

 

உண்மையில், அவன் பாராட்டுக்கு உரியவன். மனம் தளராது எடுத்த காரியத்தை முடிப்பது என்று உறுதியாக இருக்கிறான், அல்லவா?

 

இது என்ன பிடிவாதம்? முடியவில்லை என்றால் விட்டுவிடேன்!’ என்று பிறர் அவநம்பிக்கை அளிக்க முயலலாம்.

 

அவனுக்கென ஓர் இலக்கு இருக்கிறது. அதை நோக்கிப் போகும்போது எவ்வகையான தடங்கல் வந்தாலும் அதைப் பொருட்படுத்துவதில்லை.

 

புகழ் பெற்ற விளையாட்டு வீரர்களும் இத்தகையவர்கள்தாம்.

 

கால் வலிக்கிறதே, உடல் களைத்துப்போகிறதே, வேறு எதற்குமே நேரம் கிடைப்பதில்லையே என்றெல்லாம் யோசித்துப் பின்வாங்கியிருந்தால், முதல்தர விளையாட்டு வீரர்களாக ஆகியிருக்க முடியுமா?

 

இறுதிச்சுற்றின்போது, கண்டிப்பாக வெற்றி நமக்குத்தான்!’ என்று சற்றே அயரவும் மாட்டார்கள் இவர்கள்.

 

அறிவும் பலமும் இருந்தால் மட்டும் போதாது, வெல்லவேண்டும் என்ற உறுதியுடன் விடாமுயற்சியும் அவசியம் என்று இவர்களுக்குத் தெரியும்.

 

உடலும் மனமும் களைத்தபின்னரும் தொடர்ந்து செய்வதுதான் விடாமுயற்சி.

 

இதைத் தவறாகப் புரிந்துகொண்டு, என் மாணவி ஒருத்தி இரவு பகலாக, தகுந்த ஆகாரமுமின்றி படித்ததில், பரீட்சைக்கு ஒரு மாதம் முன்னர்மண்டை வலிஎன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். கோமா நிலைக்குப்போய், பரீட்சை எழுத முடியாமல் போயிற்று.

 

பாடங்களைப் படிப்பதானாலும் அவ்வப்போது ஓய்வும், உணவும் அவசியம்தானே?

 

நான் முன்பெல்லாம், ஒரு ஆப்பிள், குடிநீர், பால் எல்லாவற்றையும் எனக்கு முன்னால் வைத்துக்கொண்டு, சாப்பாட்டு மேசைமுன் அமர்ந்து கதை எழுத ஆரம்பிப்பேன். ‘பசிக்கிறதே!’ என்று பாதியில் எழுந்துபோனால் கற்பனை தடைப்பட்டுவிடும்.

 

இப்போதும், எங்கள் வீட்டுக் குழந்தைகள் நாள்முழுவதும் படிக்கும்போது பழம், பிஸ்கோத்து என்று ஏதாவது சாப்பிடக் கொடுத்துக்கொண்டே இருப்பேன். முனைந்து படிக்கையில், பசி தெரியாது. ஆனால் களைப்பு அதிகரிக்க, வேகம் குறைந்துவிடும். காலை, மாலை இருவேளையும் காற்றாட நடக்கவும் வேண்டும். இல்லையேல், ரத்த சோகை, மங்கலான கண் பார்வை என்று ஏதேதோ அவதிகள் வந்துவிடும்.

 

கேள்வியும் பதிலும்

 

பதின்ம வயது மாணவர்களுக்கான புத்தகத்தில் ஒரு கேள்வி: ‘பெரியவன் ஆனதும் என்ன தொழில் செய்ய ஆசைப்படுகிறீர்கள்?’

 

படிப்பில் அக்கறையில்லாத மாணவர்கள் எழுதியது: டாக்டர், வக்கீல், துப்புறவுத் தொழிலாளி.

 

பெரிய இலக்கு. ஆனால் அதை அடைவதற்காக எந்த முயற்சியும் கிடையாது.

 

என் மாணவிகள் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கணக்கைப் போடத் திணறினால், நான் அதை கரும்பலகையில் போட்டுக்காட்டுவேன்.

 

எத்தனை சுலபம்!’ என்று ஒரு குரல் எப்போதும் எழும்.

 

அதை நீங்களே போடுவதுதானே!’ என்று நினைத்துக்கொள்வேன்.

 

எதுவானாலும், செய்து முடித்தபின்தான், ‘இதற்கா இவ்வளவு தயங்கினோம்!’ என்ற ஆச்சரியம் எழும்.

 

மேடும் பள்ளமும்

 

கடுமையாக உழைத்து, உச்சத்திற்குப் போனபின் பலர் அங்கேயே நிலைப்பதில்லை. கர்வம் கொண்டால் விழுவது நிச்சயம்.

 

உச்சத்திலிருந்தபோது கொண்டாடியவர்கள் அப்போது காணாமல் போய்விடுவார்கள். தம் தவறு என்னவென்று கீழே விழுந்தவர்களுக்குப் புரிவதில்லை. ‘நன்றிகெட்ட மனிதர்கள்!’ என்று பிறரைப் பழிப்பார்கள்!

 

எல்லை கடந்தது

 

இசை, நாட்டியம் போன்ற நுண்கலைகளுக்கு எல்லையே கிடையாது. சில வருடங்கள் கற்றபின் மலைப்பாக இருக்கும். மெள்ள மெள்ளச் சென்றாலே போதும். கரையைக் காண முடியாவிட்டாலும் அறிவு சிறந்திருக்கும்.

 

நீயும்தான் இத்தனை வருடங்களாக ஒரே காரியத்தைச் செய்கிறாய்! என்ன கிழித்தாய்!’ –- இப்படிப் பலவாறாகச் சிலர் ஏன் நம்மை அவநம்பிக்கைக்கு ஆளாக்க முயல்கிறார்கள்?

 

அவர்களைப் பொறாமை ஆட்டிவைக்கிறது. இதைப் புரிந்துகொண்டால், அவர்கள் சொல்வதை அலட்சியம் செய்ய முடியும். நம் மன உறுதியும் தளராது. விடாமுயற்சியுடன் செயல்படுகிறவர்களை வீழ்த்துவது கடினம்.

 

எல்லோரையும் எப்போதும் மகிழ்விக்க நினைத்தால் நம் மகிழ்ச்சிதான் கெடும்.

 

:-நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர்-/-சமூக ஆர்வலர்-/- மலேசியா.

தொடரும்.... 
👉அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக
👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக 

No comments:

Post a Comment