சங்ககால இலக்கியங்களில், பதினெண் கீழ் கணக்கு நூல்களில் ஒன்றான 'நான்மணிக்கடிகை' என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும். ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் 'நான்மணிக்கடிகை' எனப் பெயர் பெற்றது. இதனை இயற்றியவர் விளம்பி நாகனார்.இவரின் காலம் கி.பி. 200 க்கு முன்னர் ஆகும்.
தொடர்ச்சி……
96. 👇👇👇
வாலிழையார் முன்னர் வனப்பு இலார் பாடு இலன்;
சாலும் அவைப்படின், கல்லாதான் பாடு இலன்;
கற்றான் ஒருவனும் பாடு இலனே, கல்லாதார்,
பேதையார், முன்னர்ப்படின்.
:-அழகிய பெண்டிர்க்கு முன்னால் அழகில்லாத ஆண்கள் பெருமையடைதல் இல்லை. கற்றவர் கூடிய அவையில் கல்லாதவன் பெருமையடைதல் இல்லை. கல்லாதார் முன்பு கற்றானும் பெருமையடைதல் இல்லை. அறிவிலார் முன்பும் அறிஞர் பெருமையடைதலில்லை.
97. 👇👇👇
மாசு படினும், மணி தன் சீர் குன்றாதாம்;
பூசுக் கொளினும், இரும்பின்கண் மாசு ஒட்டும்;
பாசத்துள் இட்டு, விளக்கினும், கீழ் தன்னை
மாசுடைமை காட்டிவிடும்.
:-அழுக்கு சேர்ந்தாலும் நன்மணியின் பெருமை குறையாது. கழுவி எடுத்தாலும் இரும்பில் மாசு உண்டாகும். கீழ் மக்களிடத்து பாசத்தைக் காட்டினாலும் அவர்கள் தங்கள் கீழ்மைத் தன்மையைக் காட்டிவிடுவர்.
98. 👇👇👇
எண் ஒக்கும், சான்றோர் மரீஇயாரின் தீராமை;
புண் ஒக்கும், போற்றார் உடனுறைவு; பண்ணிய
யாழ் ஒக்கும், நாட்டார் கழறும் சொல்; பாழ் ஒக்கும்,
பண்பு உடையாள் இல்லா மனை.
:-சான்றோர்களைப் பிரியாமை அறிவுடைமையாகும். தம்மைப் போற்றி இணங்காதவரோடு வாழ்தல் புண்ணுக்கு நிகராகும். நண்பர்கள் இடித்துரைக்கும் சொல் வலியதாயினும் யாழோசைப்போல இனிமையுடையதாகும். மனைவி இல்லாத வீடு பாழ் மனையாகும்.
99. 👇👇👇
ஏரி சிறிதுஆயின், நீர் ஊரும்; இல்லத்து
வாரி சிறிதுஆயின், பெண் ஊரும்; மேலைத்
தவம் சிறிதுஆயின், வினை ஊரும்; ஊரும்,
உரன் சிறிதுஆயின், பகை.
:-ஏரி சிறிதாக இருந்தால் நீர் வழிந்து போய்விடும். வீட்டில் வருவாய் குறைவானால் மனையாள் வரம்பு கடந்து பேசுவாள். முன் தவம் சிறிதானால் தீவினை மிகுந்து வருத்தும். வலிமை குறைந்தால் பகைவர் வென்றிடுவர்.
100. 👇👇👇
அலைப்பான், பிறது உயிரை ஆக்கலும் குற்றம்;
விலைப்பாலின் கொண்டு, ஊன் மிசைதலும் குற்றம்;
சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம்;
கொலைப்பாலும் குற்றமே ஆம்.
:-பிற உயிரை அழிப்பதற்காக வளர்த்தலும் குற்றம். விலை கொடுத்து பிற உயிரை வாங்கி அதன் ஊனை உண்ணுதல் குற்றம். சொல்லத் தகாத சொற்களைப் பேசுவதும் குற்றம். கொலை புரிதலும் குற்றமேயாகும்.
நான்மணிக்கடிகை தொடரும்…..பகுதி:21 வாசிக்க அழுத்துக...👉 Theebam.com: நான்மணிக்கடிகை/21/வாழ்க்கை உண்மைகளை வெளிக்காட்டும்.:
Theebam.com: 'நான்மணிக்கடிகை' /01/வாழ்க்கை உண்மைகளை வெளிப்படு...
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்மணிக்கடிகை - பதினெண் கீழ்க்கணக்கு, குற்றம், சிறிதுஆயின், ஒக்கும், இலக்கியங்கள், ஊரும், நான்மணிக்கடிகை, உயிரை, இல்லை, மாசு, பாடு, கீழ்க்கணக்கு, பதினெண், பெருமையடைதல், தவம், நீர், சங்க, பாழ், கல்லாதார், கீழ், இலன், சொல்
0 comments:
Post a Comment