அறம் பேசுமா? என்று என்னை கேட்டால், கட்டாயம் இல்லை என்று தான் சொல்வேன்.
நான் அப்பொழுது பாடசாலை இளம் மாணவன். அவ்வேளையில் ஒரு நாள்
, கர்ணன் படம் பார்த்து விட்டு, அரங்கிற்கு வெளியே வந்த பொழுது என் மனம் அப்படித்தான் இருந்தது.
விஸ்ணுவின் எட்டாவது அவதாரம் என கருதப்படும் கிருஷ்ணர், நிராயுதபாணியாக நிலத்தில் இறங்கி, மண்ணில் புதைந்த தேர் சக்கரத்தை வெளியே எடுக்க முயற்சித்துக்கொண்டு இருக்கும் கர்ணனை கொல்ல. யுத்த தர்மத்திற்கு எதிராக, அருஜுனனை அம்பு விட தூண்டுகிறான். ஆனால் அவன் சாகவில்லை. எனவே, பொய் வேடம் போட்டு, அம்பு துளைத்த கர்ணனை ஏமாற்றி புண்ணியங்களை (ஆயுள் முழுக்க தானம் செய்ததால் பெற்ற புண்ணியம் முழுவதையும்) தானமாக கேட்கிறான். அவனோ அந்த நிலையிலும் கொடுக்கிறான். அதன் பின் கர்ணன் இறந்து விடுகிறான். அறம் அவனை காக்கவில்லை. அறத்திற்கு எதிரானவனின் பக்கம் போய், அவனை கடவுளாகவும் பிற்காலத்தில் ஆக்கிவிட்டது. புண்ணியம் செய்தவன் இறந்து விட, அந்த புண்ணியத்தை ஏமாற்றி பெற்றவன் கடவுளாகிறான். இது தான் என மனதை குழப்பிக்கொண்டு இருந்தது.
அன்று, தீபாவளியை எம் பாடசாலை கொண்டாடிக்கொண்டு இருந்தது. என் மனக் குமுறல் எரிமலையாக வெடித்தது. நான் எப்படியோ துணிவை வரவழைத்து, அதிபரிடம், மிக பணிவாக என் கருத்தை கூறி, நான் இன்று இரவு நடக்க போகும் மகாபாரத நாடகத்தில் கிருஷ்ணர் வேடம் போட மாட்டேன் என்று திடமாக, ஆனால் அடக்கமாக கூறினேன்.
அதிபர் என்னை தனது அலுவலகத்திற்கு கூட்டி சென்று , நீ நடிக்கிறாய் , இல்லை என்றால் பாடசாலையில் இருந்து விலத்துவோம் என்று வெருட்ட தொடங்கினார். நான் மிக பணிவாக என் நிலையை காரணத்துடன் கூறினேன்.
அவர் என்னை பிரம்பால் அடித்து, ஒரு மாதம் பாடசாலையில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டேன்.
நான், என் மனதில் இருந்த உண்மையை, பொய் கூறாமல், உண்மைக்கு புறம்பாக நடிக்காமல், அதை அப்படியே கடைபிடிக்க விரும்பினேன். அதையும் அடக்கத்துடனும் பணிவுடனும். ஆகவே எனக்கு இந்த தண்டனைகள் ஒரு வேதனையையும் தரவில்லை
பொய் பேசாமலிருப்பது சிறந்த அறம். அதை நிஜமாகவே கடைபிடிப்பவர்களுக்கு தர்மங்கள் செய்யத் தேவையே இல்லை என்ற திருவள்ளுவரின் குறள் தந்த இன்பத்துடன் வீடு சென்றேன்.
"பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிறசெய்யாமை செய்யாமை நன்று." (குறள் – 297)
அதன் பின் நான் பல்கலைக்கழகம் நுழைந்து பொறியியலாளராகவும் பட்டம் பெற்றேன். என் முதல் நேர்முகப் பரீடசைக்கு அன்று சென்று இருந்தேன். என் பாடசாலை அல்லது பல்கலைக்கழக வாழ்வில் நடந்த, மறக்க முடியாத சம்பவம் ஒன்றை கூறச் சொன்னார்கள். நானும் எந்த பொய்யும் சொல்லாமல், எனக்கு நடந்த பிரம்படியையும், தற்காலிக நீக்கத்தையும் அதற்கான காரணத்தையும் கூறினேன். அவ்வளவுதான், நீங்க போகலாம் என ஏளன சிரிப்புடன் உடனடியாக முடித்துவிட்டார்கள். அது ஏன் என்பது ஒரு மாதம் கழித்து வந்த ' உங்கள் தேர்வு வெற்றி பெறவில்லை' என்ற வாசகம் எனக்கு தெரிய படுத்தியது.
அங்கு ஒரு பொய் சொல்லி இருந்தால் அல்லது மறைத்து இருந்தால் கட்டாயம் வேலை கிடைத்து இருக்கும். ஆனால் நான் கவலைப் படவில்லை. அறம் பேசுதோ பேசவில்லையோ, முயற்சி திருவினையாக்கும் என்ற நம்பிக்கை என்னை மீண்டும் விண்ணப்பம் செய்ய வைத்தது!
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
/அத்தியடி,
யாழ்ப்பாணம்]
No comments:
Post a Comment