இப்படியும் ஒரு 'தனிமை' [சிறுகதை]


தனிமை என்பது, 'நான் தனித்து இருக்கிறேன் என்ற உணர்வு' என்று சொல்லலாம், உங்கள் பல சமூக தொடர்புகளின் அளவை இது சார்ந்தது அல்ல. நீங்க அந்த தொடர்புகளில் இருந்தாலும் மனது அதில் முழுதாக எடுபடாமல் தனித்து இருக்கலாம் என்பதே இதன் அர்த்தம்!

நான் பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்று, இலங்கை கடற்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும், இலங்கை கடற்தொழில் பயிற்சி நிலையத்தில் எந்திரவியல் விரிவுரையாளராக பதவி பெற்று கொழும்பில் கடமையாற்ற தொடங்கிய நேரம் இது. நான் கொழும்பில் வேலை செய்யும் அண்ணாவின் குடும்பத்துடன் தங்கி இருந்து, வேலைக்கு போகத் தொடங்கினேன். கொழும்பு எனக்கு புதிது என்றாலும், அண்ணாவின் குடும்பம் மற்றும் அயல், அந்த குறைபாடை நீக்கி, எந்தநேரமும் கலகலப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியது. தனிமை என்றால் என்னவென்றே தெரியாத காலம் அது. இரவில் கூட அண்ணாவின் கடைசி மகள், கலைமதி, வயது மூன்று என்னுடனே வந்து படுப்பார். அந்த தருணத்தில் தான் ...


எனக்கு அரசாங்கம் கல்வி உதவித்தொகை தந்து கப்பல் எந்திரவியலில் பயிற்சி பெற ஒரு ஆண்டுக்கு ஜப்பானுக்கு அனுப்பினார்கள். கட்டுநாயக்க கொழும்பு விமான நிலையத்தில் இருந்து பயணம். அண்ணா குடும்பம் மற்றும் ஒரு சில அயலவர்கள் வழியனுப்ப, ஒரே குதூகலமாக அங்கிருந்து புறப்பட்டேன். விமானத்தில் பறப்பது முதல் தரம் என்பதால், சாளரத்தின் ஊடக வெளியே பார்ப்பது , பக்கத்தில் இருந்தவருடன் கதைப்பது இப்படி பொழுது போய் விட்டது.


டோக்கியோ விமான தளத்தில் வந்து இறங்கியதும்  ஆளுக்கு ஒருபக்கமாக போகத் தொடங்கி விட்டார்கள். என்னை அங்கு ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர்கள் வரவேற்று கூடிச்சென்றார்கள். அதன் பின்புதான் தனிமை என்றால் என்ன என்று முதல் முதலாக உணரத் தொடங்கினேன்!


அவர்களின் மொழி புரியவில்லை. அதனால் கதைக்க முடியாத சூழ்நிலை. பொதுவாக பல்கலைக்கழகம் வரை தம் மொழியிலேயே படிப்பதாலும் மற்றும் பணி இடங்களிலும் அப்படியே என்பதாலும் ஆங்கிலம் அங்கு ஒருவரும் பாவிப்பதில்லை. மிக மிக சிலருக்கே ஆங்கிலம் தெரியும்.


என் பயிற்சி ஷிமோனோசேக்கி பல்கலைக்கழகத்தில் தரப்பட்டது. இது டோக்கியோ வில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கடற்கரை கிராமம். ஆகவே இங்கு பொதுவாக ஒருவருக்கும் ஆங்கிலம் தெரியாது. எனவே எனக்கு ஒரு மொழிபெயர்ப்பாளர், பயிற்சியின் போது மட்டும் இருப்பார். மற்றும் படி அவர் தானும் தன்பாடும்.

 

அன்று கைத்தொலை பேசிகளோ, சமூக வலைகளோ இல்லாத காலம். ஒரு இருண்ட உலகத்தில் இருப்பது போல ஒரு உணர்வு. நான் இருந்த மாணவர் விடுதியில் எல்லோரும் ஜப்பான் மாணவர்கள். அவர்களுக்கு ஆங்கிலம் துப்பரவாக தெரியாது. அங்கு தொலைக்காட்சி இருந்தாலும் அவை முற்றிலும் ஜப்பான் மொழியிலேயே! நல்ல காலம் நான் ஒரு சிறிய வானொலி வாங்கி, அதன் மூலம் ஆங்கிலத்தில் உலக நடப்புக்கள் கேட்பேன். அது ஒன்று தான் எனக்கு கொஞ்சம் துணை !

 

தனிமையும் ஓர் உயிர்க்கொல்லிதான் என்பதை அங்குதான் நான் முதல் முதல் உணர்ந்தேன்.  குடும்பம் மற்றும் நண்பர்களைவிட்டுப் பிரிந்து வெளியில் சென்றது ஒரு முட்டாள்தனம் போல் எனக்கு இருந்தது. ஆமாம், தான் செய்த கொலைக் குற்றத்துக்காக ஒருவன் பத்துக்குப் பத்தடி அறையில், அங்கு வெளிச்சமோ, வெளியிலிருந்து சத்தமோ வருவதற்கு வாய்ப்பில்லாமல் இருக்கும் சிறைக்கு போனது போலவே நான் உணர்ந்தேன். என்ன குற்றம் செய்தேன், எனக்கு ஏன் இந்த வேதனை ?. இப்படியான எண்ணங்கள் நித்திரைக்கு போகும் பொழுது அடிக்கடி மனதில் நிழலாக ஆடும். என் குடும்பத்தாருடன் கடித போக்குவரத்து மட்டுமே , ஒரு மாதத்திற்கு அதிகமாக ஒரு கடிதமே!

 

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வின் ஏதாவது ஒரு சூழலில் தனிமையை உணரலாம். அருகில் யாரும் பேச்சு துணையாக இல்லாமல் இருக்கும்போது தனிமையை உணர்வது இயல்பாக நடக்கக் கூடிய ஒன்று. அப்படியான ஒன்றில் தான் நான் சிக்கி இருந்தேன், எப்ப ஒரு ஆண்டு முடியும் என்பதே, பயிற்சியை விட முக்கியமாக எனக்கு இருந்தது.

 

அந்த நேரத்தில் தான், தற்செயலாக, அந்த பல்கலைக்கழகத்துக்கு உதவி விரிவுரையாளராக அமெரிக்காவில் உயர் கல்வி கற்று வந்த கணேயாசு என்ற பெண்ணை சந்தித்தேன். தனிமை என்ற சிறைவாசத்தில், இருட்டில் இருந்தவனுக்கு, வெளிச்சம் வந்தது போல் எனக்கு இருந்தது. பல்கலைக்கழக நேரம் போக மற்ற நேரங்களில் அவர் என் கூட்டாளியாக, வெளியில் சுற்றி திரிவது, பல விடயங்களை பற்றி கதைப்பது என தனிமை மறந்து மிகுதி காலம் சந்தோசமாக சென்றது. ஆனால் ஒரே ஒரு குறை மட்டுமே, அவரைச் சந்திக்கும்  வரை நகராது இருந்த நாட்கள்ப்போது கடுகதி வேகத்தில் போய் மறைந்தது சற்று வருத்தமாகவே இருந்தது.

 

-[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

No comments:

Post a Comment