பலர் உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்து ஜிம் பயிற்சிகள், யோகா, உணவு முறை மாற்றம் என்று பலவற்றையும் மேற்கொண்டு வருகிறார்கள். இவற்றையெல்லாம் செய்வதற்கு நேரம் இல்லையென்று தவிப்பவர்கள், அன்றாட செயல்பாடுகளில் சில மாற்றங்களை நடைமுறைப்படுத்தினால் உடல் எடையை கட்டுக்குள் வைத்து ‘பிட்டாக’ இருக்க முடியும். அதற்கான யோசனைகள் இங்கே...
காலையில் வழக்கமாக எழுந்திருக்கும் நேரத்தை விட முன்னதாக கண் விழிக்கலாம். எழுந்தவுடன் படிகளில் ஏறி இறங்கலாம்.
மாதத்தில் ஒரு நாள் வீட்டை சுத்தம் செய்பவர்கள், அந்த வேலையை பிரித்துக்கொண்டு, தினமும் ஒரு பகுதியைச் சுத்தம் செய்யலாம். இதன் மூலம் வீடும் சுத்தமாகும், உடலுக்கும் பயிற்சி கிடைக்கும்.
வீட்டிலேயே வேலை பார்ப்பவர்கள் எப்போதும் உட்கார்ந்தே இருக்காமல், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை 5 நிமிடம் நின்றபடி வேலை பார்க்கலாம். சமையலுக்கு காய்கறிகள் வெட்டும்போது உட்கார்ந்துகொண்டு வேலை செய்யாமல், நின்றபடி ஈடுபடலாம்.
டீ காபி குடிப்பதற்கு பதிலாக, வீட்டில் தயாரிக்கும் லெமன் டீ குடிக்கலாம்.
நொறுக்குத்தீனி நினைவு வரும்போது வீட்டில் இருக்கும் தக்காளியைச் சாப்பிடலாம். அதில் இருக்கும் குறைவான கலோரி உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கும்.
சர்க்கரை சேர்த்த பழச்சாறு, சோடா, கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்கள் பருகுவதற்குப் பதிலாக வெந்நீர் குடிக்கலாம். இதன் மூலம் வளர்ச்சிதை மாற்றம் விரைவாக நடக்கும்; எடை குறையும்.
உங்களால் முடிந்த அளவு எடைகளைத் தூக்க முயற்சிக்கலாம். ஜிம் பயிற்சியில் கையாளும் கருவிகளைத்தான் தூக்க வேண்டும் என்பது இல்லை, பக்கெட் நிறைய தண்ணீர் கொண்டு சென்று தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு ஊற்றலாம்.
சர்க்கரை, குளுக்கோஸ், பிரக்டோஸ், கார்ன் சிரப் போன்ற பொருட்கள் பெரும்பான்மையாக கலக்கப்பட்ட உணவுப்பொருட்களை தவிர்க்க வேண்டும். ரெஸ்டாரண்டுகளில் சாப்பிடும்போது பெரிய அளவு தட்டுகளில் பரிமாறப்படும் உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இந்த வகை உணவுகளில் கலோரிகள் அதிகமாக இருக்கும்.
சமையல் அறை மற்றும் சாப்பிடும் அறைகளில் உள்ள சுவர்களுக்கு வண்ணம் தீட்டும் போது மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு ஆகிய வண்ணங்களைத் தவிர்த்து, நீல வண்ணம் பூசலாம். நீல நிறம் அமைதியை ஏற்படுத்தி, வயிறு நிறைந்த உணர்வை தரும். அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற உணர்வு தோன்றாது.
படித்ததில் பிடித்தது
No comments:
Post a Comment